(மன்னார் நிருபர்)
(16-04-2021)
யுத்தத்தினால் பதீக்கப்பட்டு பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும், மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தச்சனா மருத மடு கிராமத்தில் உள்ள மக்களின் சுகாதார நிலையை கருத்தில் கொண்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை விசேட மருத்துவ முகாம் இடம் பெற்றது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரனையுடன் தச்சனா மருதமடு பொது நோக்கு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை(16) காலை 9 மணியளவில் குறித்த மருத்துவ முகாம் இடம் பெற்றது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இடம் பெற்ற குறித்த மருத்துவ முகாமில் பாலம்பிட்டி ,கிரிசுட்டன் தச்சனா மருதமடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வைத்திய சாலைக்கு செல்ல முடியாத நிலையிலும், உரிய போக்கு வரத்து வசதிகள் இல்லாத நிலையிலும் குறித்த கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ தேவைக்காக வைத்தியசாலைகளுக்கு சென்று வர முடியாத நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்.ரி வினோதன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மேற்படி மருத்துவ முகாம் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.
இம் முகாமில் பிராந்திய சுகாதார பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி ஒஸ்மன் டெனி மற்றும் பிராந்திய சுகாத சேவைகள் பணிமனையின் சுகாதார பணி உதவியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துவ உதவிகளை வழங்கினர்.
மேற்படி மருத்துவ முகாம் மடு பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தொடர்சியாக நடாத்துவதற்கு மெசிடோ நிறுவனத்தினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.