கோவிட்-19 நோயின் தாக்கம் நிறைந்து காணப்படும் உலகில் கனடா தேசமும் இதற்கு விதி விலக்காகவில்லை.தமிழ் மக்கள் அதிகமாக வாழும் ஒன்றாரியோ மாகாணத்தில் நோயின் தாக்கம் அதிகரித்து, மருத்துவ வசதிகள், தடுப்பூசிகள் ஆகியவற்றின் தட்டுப்பாடு காரணமாக வேறு மாகாணங்களிலிருந்து உதவிகள் எதிர்பார்க்கப்படும் நிலையின் கனடாவின் சிறுபான்மை லிபரல் அரசின் இரண்டாவது வரவு செலவுத்திட்டம் இன்று திங்கட்கிழமை ஒட்டாவா மாநகரில் உள்ள பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போதைய நிதி அமைச்சரும் துணைப் பிரதமருமான கிறிஸ்டினா பிரிலாண்ட் இந்த பெருந்தொகை துண்டு விழும் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றினார். ஆனால் மிகவும் உற்சாகமாகவும் துணிச்சலுடனும் அவர் உரையாற்றியபோது அவருக்கு மூன்று ஆசனங்கள் தள்ளி கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமர்ந்திருந்தது அவருக்கு மனதில் ஒரு துணிச்சலைத் தந்திருக்கலாம்.
கனடிய தேசிய ஊடகங்கள்; இந்த வரவு செலவத் திட்டம் பற்றி விமர்சனம் செய்கையில் முதலாவது இந்த தடவை கனடிய பாராளுமன்ற வரலாற்றில் முதற் தடவையாக ஒரு பெண் நிதி அமைச்சர் இதை தயாரித்து, சமர்ப்பித்து உரையாற்றுகின்றார் என்றும், இந்த நோய்த் தொற்று அச்சுறுத்தல், மற்றும் பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த நேரத்தில் இந்த வரவு செலவத் திட்டம் பாரிய துண்டு விழும் தொகையைக் கொண்டிருந்தாலும் சவால்கள் நிறைந்த ஒரு சமர்ப்பணம் என்று குறிப்பிட்டிருந்தன.
கனடியப் பிரதமரும் நிதி அமைச்சரும் ஒன்றாகவே தங்கள் அலுவலகங்களிலிருந்து பாராளுமன்றத்தை நோக்கி நடந்து வந்தார்கள். பின்னர் பாராளுமன்றத்தினுள் சபாநாயர் அவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து நிதி அமைச்சர் சுமார் 700 பக்கங்களைக் கொண்ட வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய பகுதிகளை ஆங்கிலத்திலும் பிரன்ச் மொழியிலும் வாசித்தார்.
அருகில் அமர்ந்திருந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் சிரித்த வண்ணம் காணப்பட்டார்.
இன்று சமர்ப்பிக்கப்பட்ட கனடாவின் வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த பல பிரிவுகளில் நிதி ஒதுக்கீடுகள் பாரிய அளவின் செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக சாதாரண தொழிலாளர்கள் தொடக்கம் பெரிய தொழில் நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரின் நலன்கள் நன்கு கவனிக்கப் பெற்று சலுகைளும் நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்ருந்தன என்றால் அது மிகையாகாது.
முக்கியமாக பின்வரும் பிரிவுகளில் பாரிய நிதி ஓதுக்கீடுகளும் நிதிச் சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன என்பதைப் பார்க்கும் போது கனடியர்களில் அனைத்துத் தரப்பினரையும் கவனத்திற் கொண்டு இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது அறியக்கூடியதாக இருந்தது.
பின்வரும் பிரிவுகளின் அடிப்படையில் நிதி ஓதுக்கீடுகளும் ,சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.
தேசிய குழந்ததைகள் பராமரிப்புத் திட்டம் (National Child Care Plan ), புதிய தொழில்கள் உருவாக்கம் (Job Creation), மூத்தவர்களுக்கான கொடுப்பனவுகளில் அதிகரிப்பு (Supporting Seniors), சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவிகள், கனடாவில் காணப்படும் இனவாதம் மற்றும் நிறவாதம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுதல் அல்லது அவற்றை அகற்றுதல், கனடிய இளைஞர்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல், குறைந்த ஊதியத்தைப் பெறும் தொழிலாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்குதல், வீடற்றவர்களுக்கு வீட்டு வசதிகளைச் செய்து கொடுப்பது போன்ற தலைப்புக்களில் இநத வரவு செலவுத்திட்டத்தில், நிதி ஓதுக்கீடுகளும் செலவீனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முதலாவதாக கனடாவில் தொழில் பார்க்கும் பெற்றோரின் குழந்தைகள் பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்ய முதல் ஐந்து வருடங்களுக்கு 30 மில்லியன் டாலர்களும் அதற்குப் பின்னர் வருடம் ஒன்றுக்கு 8.3 மில்லியன் டாலர்களும் ஒதுக்கப்படவுள்ளன. தன் மூலம் தங்கள் பிள்ளைகளை குழந்தைகள் காப்பகம் மற்றும் சிறுவர் பாடசாலைகளில் ஒப்படைத்து விட்டு, தங்கள் வேலைகளுக்குச் செல்லும் பெற்ர்களின் பணப்பிரச்சனை குறையும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இவ்வாறான குழந்தைகள் காப்பகங்களில் ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் வருமானம் குறைந்த பெற்றோரின் குழந்தைகள் ஆகியோரும் இந்த நிதி ஒதுக்கீட்டின் பலன் பெறவுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அடுத்து, கொரோனா நோய்த் தொற்று காரணமாக கனடா முழுவதிலும் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளனர். அத்துடன் பல நிறுவனங்களை புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு போதிய நிதி வாய்ப்புக்கள் இல்லாமல் சிரமங்களை எதிர்நோக்குகின்றன. எனவே கனடாவில் தொழில் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியனவற்றில் புதிய தொழில முயற்சிகள் உருவாக்கப்படும் போது அந்த நிறுவனங்கள் அந்த புதிய பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக புதிய தொழில்களை உருவாக்கும் நிறுவனங்களின் தேவைகளுக்காக நிதி ஒதுக்கப்படுகின்றது.
மேலும் இந்த நாட்டில் பணிகளிலிருந்து ஒய்வு பெற்று ஓய்வூதியம் பெற்றுவரும் மூத்தோருக்கான மாதாந்தக் கொடுப்பனவோடு சேர்த்து மே மாதத்தில் 500 டாலர்கள் மேலதிகமாக வழங்கப்படவுள்ளது. அதற்கு மேலதிகமாக 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 வீத ஓய்வூதிய அதிகரிப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும்.
மேலும் கனடாவில் சிறு தொழில் நிறுவனங்கள் என்பன எமது சமூகத்தின் வளர்ச்சியிலும் நாட்டின் உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே தற்போதைய நோய்த் தொற்று காரணமாக இயங்க முடியாமல் உள்ள சிறு தொழில் நிறுவனங்களின் முடக்கத்தை போக்கும் முகமாகவும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் வகையிலும் மேலும் நிறுவனங்களில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அபிவிருத்தி செய்ய நிதி உதவிகள் போன்றவற்றிக்காக 2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் கனடாவில் குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்கள் இந்த கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு முன்னராகவே போதிய வருமானம் இன்றி தவித்தார்கள். அவர்களின் கஸ்டங்களை போக்கும் வகையில் அவர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்கி அவர்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் வாழ்க்கையில் கஸ்டங்கள் இன்றி இருக்கும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கனடாவில் ஆகக்குறைந்த சம்பளமாக மணித்தியாலத்திற்கு 15 டாலர்கள் சம்பளம் வழங்குவது கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை சட்டமாக்கியும் அத்துடன் தொழில்களை இழந்தவர்களுக்கு மேலும் 12 வாரங்களுக்கு வாராந்தக் கொடுப்பனவாக 500 டாலர்களையும் அதன் பிறகு வாராந்தம் 300 டாலர்களையும் வழங்குவது என்றும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதைப்போன்றே வீட்டு வசதிகள் அற்றவர்களுக்கு உதவிடும் நோக்கத்தோடு நாடு முழுவதும் வீடமைப்புத் திட்டங்களை அமைத்து அதன் மூலம் குறைந்த வருமானம் பெரும் வீடற்றவர்களுக்கு உதவிகளை செய்வது என்றும் இதற்காக 30 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.