தனது உடல் தளர்ந்த நிலையிலும் உற்சாகத்தோடு தந்தை செல்வாவின் 44வது நினைவேந்தலில் கலந்து கொண்டார் இரா. சம்பந்தன் அவர்கள். இந்த நிகழ்வு திருகோணமலையில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44வது நினைவு நாளை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் அணியினர் ஏற்பாடு செய்திருந்த ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வினை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த சம்பந்தன், நாட்டின் ஆட்சி முறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.அதிகாரப்பகிர்வு ஏற்பட்டு சகல மக்களுக்கும் இன,மத பேதம் பாராது ஆட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனும் கொள்கையை வலியுருத்தி தந்தை செல்வா 1949ம் ஆண்டு தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார்.
அந்தப் பாதையில் கடந்த 70வருடங்களாக நாங்கள் பயணித்து வருகிறோம். பல பெரும்பான்மை கட்சிகள் அவருடைய நிலைப்பாடுகளை ஏற்றுக் கொண்டிருக்கிறது, தற்பொழுது நாங்கள் அதனை அடையக்கூடிய நிலையில் இருக்கின்றோம். எமது இலக்கில் இருந்து விலகாமல் சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் தொடர்ந்து இலக்கை நோக்கி பயணிப்பதன் மூலம் எம்மால் வெற்றி காணமுடியும் என்றார்.