ஒன்றாரியோ எம்பிபி விஜய் தணிகாசலம் தெரிவிப்பு
தமிழின அழிப்பினை அங்கீகரித்து, தமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பால் தமிழர்கள் அனுபவித்துவரும் உளவியல் பாதிப்புகளையும் ஏற்றுக்கொண்டதன் மூலம் ஒன்ராறியோ மாநிலத்தின் முதல்வர் திரு. டக் ஃபோர்ட் அவர்கள் தான் ஒரு சிறந்த தலைவர் என்பதை நிரூபித்துள்ளார். அதேவேளையில், ஒன்ராறியோ கன்சர்வேட்டிவ் அரசாங்கமானது, அநீதிகளை எதிர்த்துப் போரிடுவதிலும், கனடாவைத் தாயகமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களின் பக்கம் துணை நிற்பதிலும் என்றும் உறுதியுடன் செயற்படும் என்பதை மீண்டுமொருமுறை நிறுவியுள்ளது.
இதேவேளையில், குயின்ஸ் பார்க்கிலுள்ள ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதியினை அறிந்து சட்டமூலம் 104இற்கான தமது வலுவான ஆதரவை வழங்கியுள்ளனர். இதுதொடர்பான விவாதத்தின்போது, தமது தொகுதிகளிலுள்ள தமிழ் மக்களின் கடின உழைப்பு, ஒன்ராறியோ சமூகத்துக்கான அவர்களின் பங்களிப்பு தொடர்பாக பல சட்டமன்ற உறுப்பினர்களும் விபரித்திருந்தனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் ஒன்றாரியோ மாகாண சட்ட மன்றத்தின் ஸ்காபுறோ ரூஜ்பார்க் தொகுதியின் உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துளளார்.
நேற்று வியாழக்கிழமை, மே 6, 2021 அன்று உறுப்பினர் விஜய் தணிகாசலம், ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவியற் கிழமைக்கான சட்டமூலத்தை மூன்றாவது வாசிப்புக்கு கொண்டுவந்திருந்தார். இந்நடைமுறையினை அடுத்து மேற்படி சட்டமூலம் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையொன்றில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்
தமிழ் மக்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் தீர்மானங்கள் இதற்கு முன்னர் இலங்கையின் வட மாகாண சபையிலும், தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்களாலும் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், தென்னாசியாவுக்கு வெளியே இவ்வாறு ஒரு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள முதலாவது தீர்மானம் இதுவாகும். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதானால், தமிழின அழிப்பு இலங்கையில் நடைபெற்றுள்ளது என்பதை அங்கீகரித்து அதனை சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதுவே உலகின் முதலாவது வரலாற்று நிகழ்வாகும். இது ஒன்ராறியோவில் வாழும் 350,000 இற்கும் அதிகமான தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரலாற்று வெற்றியாகும். மேற்படி 104 எனும் சட்டமூலமானது, இலங்கையில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பு நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதை அங்கீகரிப்பதுடன், அதில் கொல்லப்பட்ட உயிர்களுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில், பாதிப்புக்குள்ளாகி வாழும் மக்களுக்கு நம்பிக்கையையும் ஊட்டுகிறது. அத்துடன் துன்புறுத்தப்பட்ட தமிழ் மக்களை ஆற்றும் ஒரு வழியாக இருக்கும் எனவும் இது கருதப்படுகின்றது.
“இது கனடாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு மிக முக்கியமான வரலாற்றுப் படிக்கல்லாகும். மேலும், நீங்கள் வழங்கிய பெரும் ஆதரவையிட்டு தமிழ் சமூகத்திற்கு மீண்டும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான கல்வி கற்பிப்பதற்கு ஏதுவான சட்டமொன்றை நாங்கள் இணைந்து நிறைவேற்றியுள்ளோம்” என்றார்
“தமிழின அழிப்பை தங்கள் சொந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைப்பதிலும், ஊடகங்களில் எடுத்துரைத்து அனைவரையும் ஏற்று அதனை அங்கீகரிக்கச் செய்வதிலும், சட்டமூலம் 104இன் தேவையை விளக்குவதிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்” என தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் சகான் சோமஸ்கந்தராஜா தெரிவித்தார். இதன்போது கடிதங்கள் எழுதுவது முதற்கொண்டு, தத்தமது பகுதி சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து தமிழின அழிப்பு தொடர்பாகவும், அது எப்படித் தம்மைப் பாதித்துள்ளது என்ற தகவல்களையும் ஒவ்வொரு இளையவர்களும் எவ்வாறு எடுத்துரைத்து இதற்கு வலுச் சேர்த்திருந்தனர் என்பது தொடர்பாகவும் அவர் இத்தருணத்தில் பகிர்ந்துகொண்டார்.
கனடாவின் பன்முகத் தன்மைக்கு முதன்மை எடுத்துக்காட்டாக விளங்கும் ஒன்ராறியோ மாநிலத்தில் பொருளாதாரத்துக்கும், கடின உழைப்புக்கும், அதன் கலாசாரத்துக்கும் கூடிய பங்காற்றும் சமூகங்களில் ஒன்றாக தமிழ் சமூகம் விளங்குகிறது. இங்கு வசிக்கும் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிலிருந்து தப்புவதற்காக ஒன்ராறியோ மாநிலத்துக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். இன அழிப்பு நடைவடிக்கையினால் இவர்களின் குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. சொல்லொணாத் துயரங்களைக் கடந்து இன அழிப்பிலிருந்து தப்பி உயிர் வாழ்வதற்காக பெருமளவிலான தமிழர்கள் ஒன்ராறியோ மாநிலத்துக்கு வந்தடைந்தனர். குடும்பங்களிலிருந்து பிரிவதும், தமது உறவினர்களை இழப்பதும் ஒரு சமூகத்தில் பாரிய உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தும் காரணங்களில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
எனவேதான், தமிழ் மக்களுக்கு நடத்தப்பட்ட அநீதியை உற்றுநோக்கி, தமிழ் மக்கள் அனுபவித்து வரும் உளவியல் தாக்கங்களையும் கூர்ந்து அணுகி, தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது ஓர் இன அழிப்பு என்ற வகையில் சட்டமூலம் 104ஐ ஒன்ராறியோ மாநிலம் கொண்டுவந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு சமூகம், அது எதிர்கொள்ளும் உளவியல் தாக்கங்களிலிருந்து மீண்டு வரவும், தனது