மன்னார் நிருபர்
(13-05-2021
மக்கள் நினைவுத்தூபியை உடைப்பதற்கு எந்த காரணமுமில்லை, ராணுவத்தினரே காரணம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் நினைவுத்தூபி உடைக்கப்பட்ட இடத்திலிருந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உடைக்கப்பட்டுள்ளது. எங்களுடைய மக்களின் துன்பங்களை நினைவு கூருகின்ற நினைவுத்தூபியான இந்த இடம் ஒரு புனிதமான இடமாக பார்க்கப்பட்டது.
ராணுவத்தின் அடாவடித்தனங்கள் பொலிஸாரின் மேற்பார்வையோடு உடைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் வெளிப்படையாகச் சொல்லுகிறேன். மக்கள் இதனை உடைப்பதற்கு எந்த காரணமுமில்லை.
இரவு எங்களுடைய பங்குத்தந்தையோர் இங்கு வந்து இந்த நினைவு தினத்தை நேற்றைய தினம் ஆரம்பிக்கின்ற நாளாக அவர்கள் ஒரு நினைவுச் சின்னத்தை நாட்டுவதற்கு வருகின்ற போது ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். அதேநேரம் பொலிஸார் இதனைச் செய்யவேண்டாம் என சொல்லிகொண்டிருக்கிற நிகழ்வு நடைபெற்றது.
அதன்பின்பு இந்த நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளது. ஆகவே ராணுவத்தினர் இந்த தூபியை உடைத்திருக்கிறார்கள் என்பதை நான் வெளிப்படையாகச் சொல்லுகிறேன். இதிலிருந்து தெரிகிறது இந்த தேசம் சிங்கள தேசம் தமிழ்த் தேசம் என இரண்டாகிவிட்டது என்பது எனத் தெரிவித்துள்ளார்.