(மன்னார் நிருபர்)
(17-05-2021)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகஸ்தர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து அவற்றை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை விடுத்து மன்னார் பொது வைத்திய சாலை வளாகத்தில் இன்று திங்கட்கிழமை(17) காலை 11 தொடக்கம் 12 மணிவரை அடையாள கவனயீர்ப்பு போராட்டன் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறிப்பாக தாதிய உத்தியோகஸ்தர்களுக்கு என அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை மன்னார் மாவட்ட உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்படுவது இல்லை எனவும், கர்ப்பிணித் தாதிய உத்தியோகஸ்தர்களுக்கு ஏனைய மாவட்டங்களில் விடு முறை வழங்கப்பட்டுள்ள போதிலும் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் இது வரை விடு முறை வழங்கப்படவில்லை எனவும் தொடர்சியாக பணியில் ஈடு படுத்துவதாகவும் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும் ஆண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளும் தாதிய உத்தியோகஸ்தர்கள் ஒழுங்கான முறையில் கிருமி தொற்று நீக்கவோ ஓய்வு எடுக்கவோ ஒழுங்கான வசதி ஏற்படுத்தி தரவில்லை எனவும் அதே நேரம் வேறு மாவட்டங்களுக்கு பணியின் நிமித்தம் செல்லும் அம்புலான்ஸ் சாரதிகளோ மேலதிக கடமை மேற்கொள்ளும் தாதிய உத்தியோகஸ்தர்களோ தங்குவதற்கு ஒழுங்கான ஓய்வு விடுதியோ அல்லது சாதாரண அறையோ ஒழுங்கு செய்து தரப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் பொது வைத்திய சாலை பணிப்பாளரிடம் பல்வேறு முறை சுட்டிக் காட்டியும் இது வரை நடவடிக்கை மேற்கொண்டு தரவில்லை எனவும் இவ் வாரத்துக்குள் தங்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்று தராவிட்டால் இலங்கை முழுவதும் உள்ள தாதியர்களோடு இணைந்து தொடர்சியான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.