(மன்னார் நிருபர்)
(20-05-2021)
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான போத்தலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அதிகாரிகளிடம் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தால் இன்றைய தினம் வியாழக்கிழமை (20) மாலை போத்தலில் அடைக்கப்பட்ட ஒரு தொகுதி தூய குடிநீர் போத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றாளர்கள் அதிகமான அடையாளம் காணப்பட்டதால் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்திற்கான போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கொரோனா’ தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை தற்காலிகமாக நிவர்த்தி செய்யும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரினால் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
குறித்த கோரிகைகளுக்கு அமைவாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் இன்று (20) வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் ஒன்றரை லிட்டர் கொள்வனவு கொண்ட சுற்றிகரிக்கப்பட்ட சுமார் 1500 குடி நீர் போத்தல்கள் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து முல்லைத்தீவு உதவி மாவட்டச் செயலாளர் எல்.கேஜிதா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.விக்னேஸ்வரன் , அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் லிங்கேஸ்வர குமார் , பிராந்திய தொற்று நோயியளாளர் விஜிதரன் மற்றும் வைத்தியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.