கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ள தற்போதைய நாட்களில், கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் அவுஸ்ரேலிய அரசாங்கம் 952 மில்லியன் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை இலங்கை சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது.
அதற்கிணங்க அவுஸ்ரேலிய அரசாங்கமானது யுனிசெப் அமைப்பின் ஊடாக ஒட்சிசன் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
கொழும்பிலுள்ள யுனிசெப் அமைப்பின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி திருமதி எமா ப்ரீகேம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் அவ் உபகரணங்களை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார். இந்த நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹென்னா சிங்கர் ஹெம்டி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
982 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரண தொகுதியில் 291 ஒட்சிசன் சிலிண்டர்கள், 342 ஒட்சிசன் ரெகுலேட்டர்கள், 2490 ஒட்சிசன் முகக் கவசங்கள், 20 தீயணைப்பு உபகரணங்கள் என்பன அடங்குகின்றன.
மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சை ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்களை அன்பளிப்புச் செய்தமைக்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நன்றி தெரிவித்தார். இச்செயற்பாடுகளில் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள யுனிசெப் நிறுவனத்திற்கும் அரசாங்கத்தின் சார்பில் சுகாதார அமைச்சர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.