பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேரடி விஜயம்
(மன்னார் நிருபர்)
(01-06-2021)
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள கமக்கார அமைப்பிற்கு சொந்தமான குளம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள தனி நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த குளத்தில் தொடர்ச்சியாக இராணுவம் அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று திங்கட்கிழமை (31) மதியம் குறித்த பகுதிக்குச் சென்று நேரடியாக குறித்த சம்பவத்தை அவதானித்தார்.
-திருக்கேதீஸ்வர கமக்கார அமைப்பிற்கு சொந்தமான குறித்த குளத்தை கமக்கார அமைப்பு கமநல கேந்திர நிலையத்துடன் இணைந்து திருக்கேதீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மீன் பிடிப்பதற்கு மூன்று மாத கால குத்தகை அடிப்படையில் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெற்று மீன் பிடிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.
-எனினும் இராணுவத்தினர் எவ்வித அனுமதியும் இன்றி இரவு பகல் பாராது குறித்த குளத்தில் தொடர்ச்சியாக மீன் பிடித்து வந்துள்ளனர்.
-இதனால் குத்தகைக்கு குறித்த குளத்தை பெற்ற நபர் தொடர்ச்சியாக பாதீக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் உரிய அமைப்பினர் இராணுவ அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் திருக்கேதீஸ்வர கமக்கார அமைப்பு மற்றும் பாதீக்கப்பட்ட நபர் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று (31) திங்கட்கிழமை மதியம் குறித்த பகுதிக்கு திடீர் விஜயம் செய்து பார்வையிட்டார். இதன் போது இராணுவத்தினர் சிவில் உடையில் மீன் பிடித்துக் கொண்டு இருப்பதை நேரடியாக அவதானித்தார்.
இவ்விடையம் தொடர்பாக இராணுவ உயர் அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த விடையம் தொடர்பில் தெரியப்படுத்தினார்.
இதன் போது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக இராணுவ அதிகாரி பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.
உரிய தீர்வு கிடைக்காது விட்டால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராணுவ அதிகாரியிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.