(மன்னார் நிருபர்)
(8-06-2021)
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வட்டுப்பித்தான் மடு பகுதியில் உள்ள விவசாய நீர் பாயும் வாய்க்கால் பகுதியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (8) காலை மன்னார் மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளதோடு குறித்த நபரிடம் இருந்து கசிப்பு மற்றும் கசிப்பு வடிக்கும் உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.
வட்டுப்பித்தான் மடு பகுதியில் உள்ள விவசாய நீர் பாயும் வாய்க்கால் பகுதியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் நடவடிக்கை இடம் பெற்று வருவதாக மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (8) காலை மன்னார் மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த பகுதியில் நபர் ஒருவர் சட்ட விரோதமாக கசிப்பு வடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், குறித்த நபரை மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
குறித்த நபரிடம் இருந்து விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 20 லீற்றர் கசிப்பு, மற்றும் கசிப்பு வடிக்க தேவையான உபகரணங்கள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை விசாரனைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதோடு, மீட்கப்பட்ட கசிப்பு மற்றும் ஏனைய பொருட்கள் மன்னார் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.