(மன்னார் நிருபர்)
(17-06-2021)
மன்னார் பிரதேசச் செயளாலர் பிரிவுக்குற்பட்ட தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் இன்று வியாழக்கிழமை (17) காலை இரண்டு கடலாமைகள் பாரிய காயங்களுடன் கரையொதுங்கியுள்ளது.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் மன்னார் கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளது.
இந்த நிலையில் கடுமையான காயங்களுடன் இன்று வியாழக்கிழமை காலை 2 கடலாமைகள் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.
-அவற்றில் ஒரு கடலாமை உயிரிழந்துள்ளதோடு மற்றைய கடலாமை உயிருடன் காணப்படுகின்றது.கடற்படையினர் குறித்த கடலாமைகள் கரை ஒதுங்கியமை தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
-எனினும் நீண்ட நேரமாகியும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வராத நிலை காணப்பட்டதோடு,உயிருக்கு போராடும் கடும் காயங்களுடன் கரை ஒதுங்கிய மற்றைய கடலாமையை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிய வருகின்றது.
இச் செய்தி எழுதும் வரை குறித்த பகுதிக்கு அதிகாரிகள் யாரும் செல்லவில்லை.
அண்மையில் வங்காலை மற்றும் சிலாபத்துறை கடற்கரை பகுதிகளிலும் கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியமையும் குறிப்பிடத்தக்கது.