கொழும்பிலிருந்து கௌதமன்
கொரோனா என்னும் கொடிய நோயைக் கொண்டு வந்த கொவிட் -19 கிருமியானது முழு உலகிலும் மனித சமூகம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.உலகின் வறிய மற்றும் செல்வந்த நாடுகளை வித்தியாசமின்ற பாதித்த ‘பெருமை’ கோவிட்-19 இற்கே உண்டு என்றால் அது மிகையாகாது. இவ்வாறு ஆரோக்கிய ரீதியாக மாத்திரமல்லாமல் சமூக, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பாதிப்புகளும் தாக்கங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு வளர்முக நாடுகள் மாத்திரமல்லாமல், வளர்ந்த நாடுகளும் கூட முகம் கொடுத்துள்ளன.
இத்தொற்றின் பரவுதல் அச்சுறுத்தலினால் மக்களின் இயல்பு வாழ்வே முடங்கிப் போயுள்ளது. மனிதனின் இயல்பு வாழ்வை முடக்கி அவனது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள கொடிய நோய்த் தொற்றாக இத்தொற்று விளங்குகின்றது. உலக வரலாற்றில் தோற்றம் பெற்ற புதிய நோய்த் தொற்றாக இத்தொற்று விளங்குவதால் இதற்கென மருந்துகளோ தடுப்பு மருந்துகளோ ஏற்கனவே புழக்கத்தில் இருக்கவில்லை.
இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம், இத்தொற்றின் தாக்கம், பாதிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தி இதனைக் கட்டுப்படுத்துவதற்காகத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்துமாறு கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் வேண்டுகோள் விடுத்தது.
அதற்கேற்ப உலகின் பல நாடுகளும் நிறுவனங்களும் முயற்சி செய்து தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளன. அந்த வகையில் நோயொன்று தோற்றம் பெற்ற குறுகிய காலப் பகுதிக்குள் தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்ட தொற்றாகவும் கொவிட்-19 தொற்று விளங்கிக் கொண்டிருக்கின்றது. 2020 டிசம்பர் 08 ஆம் திகதி பிரித்தானியா, தன் பிரஜைகளுக்கு இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசியை உத்தியோகபூர்வமாக வழங்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இத்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை உலகின் பல நாடுகளிலும் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் 2021 ஜுன் 10 ஆம் திகதி வரையும் முழு உலகிலும் 93 கோடி 20 இலட்சம் பேருக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது உலக சனத்தொகையில் 12 வீதமாகும். இதன்படி, இஸ்ரேல் 63.1 வீதமானோருக்கும், கனடா 62.7 வீதமானோருக்கும், பிரித்தானியா 62.7 வீதமானோருக்கும், அமெரிக்கா 51.4 வீதமானோருக்கும் என்றபடி தத்தம் நாடுகளது சனத்தொகையில் அதிகளவானோருக்கு இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொடுத்துள்ளன. ஏனைய நாடுகள் தத்தம் பிரஜைகளுக்கு இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொடுத்துள்ள மட்டம் குறைந்தளவில் காணப்படுகின்றது. இதற்கு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் உள்ள தாமதங்களே பிரதான காரணமாகும்.
இத்தடுப்பூசியை அதிகளவிலான சனத்தொகையினருக்கு பெற்றுக் கொடுத்ததன் விளைவாக மக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று இஸ்ரேல் அறிவித்திருக்கின்றது. அதேபோன்று இத்தொற்றின் ஆரம்ப அலைகளின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளும் அந்த பாதிப்புகளிலிருந்து மீட்சி பெறத் தொடங்கியுள்ளன.
தற்போதைய சூழலில் கொவிட் 19 தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியே சிறந்த தீர்வு என உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றது. அந்த வகையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இத்தொற்றின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியே சிறந்த தீர்வு எனக் குறிப்பிட்டு நாட்டு மக்களுக்கு இத்தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்நாட்டு சனத்தொகையில் 12 வீதமானோருக்கு இற்றை வரையும் இத்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் இத்தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளதோடு, இவ்வருட முடிவுக்குள் சனத்தொகையில் 60 வீதத்தினருக்கும் மேற்பட்டோருக்கு அதனைப் பெற்றுக் கொடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் இத்தடுப்பூசிக்கு எதிராக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பிழையான தகவல்களைப் பரப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசி தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான தடுப்பூசி பெற்றுக் கொள்வதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதன் ஊடாக இத்தொற்றின் பரவுதலுக்கும் அதன் விளைவான பாதிப்புகளுக்கும் பங்களிக்கவே முயற்சிக்கப்படுகின்றது என்பதில் ஐயமில்லை.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இத்தடுப்பூசி தொடர்பில் பிழையானதும் தவறானதுமான பார்வையையும் அச்சத்தையும் ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அதேநேரம் இச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தவறக் கூடாது. இத்தொற்றுக்கு எதிரான இத்தடுப்பூசியை நாட்டு சனத்தொகையில் பெரும் பகுதியினருக்கு பெற்றுக் கொடுததன் பயனாக இஸ்ரேல் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன என்பதை மறந்து விடலாகாது.
ஆகவே கோவிட்-19 தொற்று என்பது இலங்கையிலிருந்து முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதில் முழு இலங்கையர்களுக்கும் கருத்து வேற்றுமை இருக்கக் கூடாது. எனவே தடுப்பூசியின் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும். அவ்வாறிருக்கும் போது இவ்வாறான போலி பிரசாரங்களை நிராகரித்துவிட்டு இத்தொற்றுக்கு எதிரான இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் அதிக கவனம் செலுத்துவதே அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு விடயமாகும். அதுவே கொவிட் 19 தொற்று தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த தீர்வாகும்.