ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் பண்டார வேண்டுகோள்
“தான் பதவியேற்ற சில நாட்களிலிருந்து மீண்டும் மீண்டும் பொய்களையே கூறி வரும் ஜனாதிபதி கோட்டாபாய உடனடியாகப் பதவி விலக வேண்டும். குறிப்பாக இலங்கையில் போதைப் பொருள் பாவனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடச்சியாக ஜனாதிபதி கூறிவருகின்றார். ஆனால் நாட்டின் நிலைமை அப்படியில்லை. போதைப் பொருட்கள் கடத்தலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நிறையவே தொடர்புகள் உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. எனவே தற்போதைய ஜனாதிபதி தன் பதவிக்கு பொருத்தமற்றவராகவே காணப்படுகின்றார்”
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்காக கூட்டத்தில் அவர் பகிரங்கமாக இந்த அறிவித்தலை விடுத்தார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறிய விடயங்களை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை குறைப்பையும் , இலவச உரத்தையும், தடுப்பூசியையுமே எதிர்பார்த்தனர்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்தார். தற்போது நாட்டின் புலனாய்வு பிரிவு பலமடைந்துள்ளதாகவும் கூறினார். அவ்வாறெனில் ஆட்சியை பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஏன் அந்த புலனாய்வு பிரிவினரால் யாரையும் கைது செய்ய முடியவில்லை? குறைந்தபட்சம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கூட நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றார். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் 2018 ஆம் ஆண்டு முழு வருடத்திலும் 45 கிலோ கிராம் ஹெரோயின் மாத்திரமே கைப்பற்றப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான நிலைமை இல்லை.
நல்லாட்சி அரசாங்கத்தில் அனர்த்தங்கள் ஏற்படவில்லை என்று ஜனாதிபதி கூறுகின்றார். எமது ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் அனர்த்தம் ஏற்பட்டது. ஆனால் நாம் ஒன்றரை பில்லியன் அனர்த்த காப்புறுதி செய்திருந்தமையால் அதனை மக்களுக்கு நிவாரணமாக வழங்கினோம். பொதுஜன பெரமுன அரசாங்கமே அதனை இல்லாமல் செய்தது.
தற்போது பொறுத்தமான பதவிகளுக்கு தகுதியான நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்கு கடந்த தேர்தல்களில் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவாக செயற்பட்டவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.