ரொறன்ரோவையும் – கோலாலம்பூரையும் இணைத்த கனடா உதயன் இதழ்
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூன் 28:
உலகின் மூத்த மொழியாம் அன்னைத் தமிழை தாய்மொழியாகக் கொண்ட தொல்குடி என பெயர்பெற்ற தமிழர்கள் புலம் புலம் பெயர்ந்து வாழும் கோலாலம்பூர் திருநகரையும் டொரொண்டோ பெருநகரையும் இணைக்கும் விதமாக மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவச் செல்வங்கள் பங்கு பற்றிய ‘நாவன்மைக் களம்’ என்னும் நிகழ்ச்சியை கனடாவில் முதல் தர இணைய ஏடாகவும் ஈழத் தாயின் இதயத் துடிப்பைப் பிரதிபலிக்கும் வாரப் பத்திரிகையாகவும் ஒருசேர உலா வருகின்ற உதயன் இதழ் ஜூன் 27 ஞாயிறுக் கிழமை 7:00 மணியளவில் நடத்தியது.
வாரத்தின் முதல் நாள் என்றாலும் மாதத்தின் கடைசி ஞாயிறான இந்நாளில் மலேசியாவிற்கு பொழுது சாயும் மந்தார அந்திவேளை இது என்றால் அதே ஏழு மணிப் பொழுதோ கனடாவிற்கு காரிருல் விலகி காலைக்கதிரவனுடன் பொழுது புலரும் விடியல் வேளையாகும்.
நிகழ்ச்சி நெறியாளர்களான கலைமதி இரமேஷும் உகனேசுவரி முத்துவும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் என்பதால், காலம் தப்பாமல் மலேசியத் தமிழ் வணக்கப் பாடலுடன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, உதயன் ஆசிரியர் ஆர். நாகமணி லோகேந்திரன் அவர்களை தொடக்கவுரை ஆற்ற அழைத்தனர்.
உதயனை உருவாக்கி வெள்ளி விழாவை எட்டிவிட்ட அதன் தலைமை ஆசிரியர் திருவாளர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம், தான் தாளையும் கோலையும் ஏந்தி எழுந்தாளராகி பொன்விழா ஆண்டை எட்டுகிறேன் என்ற பெருமிதத்தை வெளிப்படுத்தி இனம்புரியாத இன்பப் பெருக்கோடும் மட்டுப்படாத புதுமை மிடுக்கோடும் இந்த நாவன்மைக் களத்தைத் தொடக்கி வைத்து இயங்கலைவழி ஆற்றிய உரை, அதில் இணைந்திருந்தோரை உற்சாகப்படுத்தியது என்றால் இளம் பேச்சாளர்களின் உள்ளத்தே ஊக்கத்தை ஊற்றெடுக்க வைத்தது.
தன்னுடைய பத்திரிகைப் பயணத்தில் இந்த நாள் ஓர் இனிய நாள் என்று குறிப்பிட்டதுடன், பாடகர் ராஜா தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றியும் தெரிவித்தார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஒருங்கிணைப்பில், கவிஞரும் தமிழ் இலக்கிய – இலக்கணப் பயிற்றுநருமான ‘நினைவில் வாரும்’ சீனி- நைனா முகம்மது அவர்கள் இயற்றிய
காப்பியனை ஈன்றவளே
காப்பியங்கள் கண்டவளே
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே
என்று தொடங்கும் மலேசியத் தமிழ் வணக்கப் பாடலைக் கேட்டு பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்திய லோகேந்திரலிங்கனார்,
ஈழம் எங்களுக்கு தாயகம் என்றால் தமிழகத்தை நாங்கள் தமிழினத்தின் தலைநிலமாகக் கொள்கிறோம்; ஈழத்தை அடுத்து தமிழும் தமிழரும் சிறப்பான இடத்தில் கொலு கொண்டுள்ள நாடு மலேசியா என்பதாலும் இன்னும் பிற காரணங்களாலும் அந்த மண்ணின்மீதான ஈர்ப்பும் என்னிதயத்தில் எந்நாளும் ஈரப்பத்தத்துடன் இருக்கும் என்று தமிழீழம், தமிழகம், மலையகம், கனடா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களை இணைத்துப் பேசி தன்னுரையை இன்னுரையாக்கி நிறைவு செய்தார்.
அடுத்து உரையாற்றிய ஐந்து மாணாக்கர்தம் அடிப்படைக் கருத்தும் ஏறக்குறையை ஒரு புள்ளியில் சந்தித்து நின்றன. அதற்கான காரணம் அவர்கள் பேசிய தலைப்பு.
ஆனாலும், அவரவரும் தத்தம் கல்விப் பயணத்தை தற்போதைய கொரோனா பருவத்தில் மேற்கொண்ட வகையில் தாங்கள் எதிர்கொண்ட சவாலையும் கிட்டிய பட்டறிவையும் சுவை குன்றாமல் இனிமைசேர எடுத்துரைத்தனர்.
பகாங் மாநிலம், லஞ்சாங் தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவர் மாதேஷ் ராவ் சாம்பமூர்த்தி முதலில் பேசினார்.
மாணவர்களும் நண்பர்களும் புடைசூழ கல்வி கற்ற நிலை மாறி, பெற்றோரும் உடன்பிறந்தோரும் படைசூழ கற்க வேண்டிய தற்போதைய நிலை, உடலுக்கும் உள்ளத்திற்கு சோர்வை அளிக்கிறது. கையடக்கத் திரையில் அதிக நேரம் கண் பதிப்பதால் கண்ணயற்சி ஏற்படுகிறது. ஆனாலும், பல போட்டிகளில் கலந்து கொள்ளவும் விருப்பமான பாடங்களுக்கு அதிக நேரத்தை ஒதுக்கவும் முடிகிறது என்றார் மாதேஷ்.
அடுத்ததாக வந்த மாணவி கீதா சண்முகம். இவர், கெடா மாநிலம், கோல கெட்டில், மலாக்கோஃப் தோட்ட தமிழ்ப் பள்ளியின் ஆறாம் ஆண்டு மாணவி.
பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களைப் போலவே, தொழிற்சாலைகளும் சாத்தப்பட்டு பெரியவர்களும் வீட்டோடு முடங்கி இருப்பதால் வாழ்க்கை ஆற்று மீனைப் போல இன்றி, குளத்து காகிதக் கப்பலைப் போல ஆகிவிட்டதாக சொல்லாமல் சொன்னது இந்த பிஞ்சு உள்ளம்.
அப்பாவிற்கு அரசு வழங்கிய உதவித் தொகை உதவியுடன் விவேக கைப்பேசி வாங்கினாலும் அதைப் பயன்படுத்துவதில் அக்காளுக்கும் எனக்கும் சிக்கல் நேர்ந்தது; அதனால் இணைய வகுப்பில் தடங்கலும் நேர்ந்தது என்றார் இம்மாணவி.
மூன்றாவதாக முகம் காட்டினார், சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த கோல சிலாங்கூர் ராஜ மூசா தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவி அஷ்வினா சந்திரசேகர்.
அன்றாட சீருடையும் பள்ளிப் பையும் கேட்பாரற்று கிடக்கின்றன. ஆசிரியரின் கண்டிப்பும் கண்காணிப்பும்தான் இல்லையென்றால் சக மாணவர்களின் கேலியும் கிண்டலும்கூட இல்லாது போயிற்றே? இது என்ன கல்விப் பயணம் என்று கேட்காமல் கேட்ட அஷ்வினா, மீண்டும் பள்ளி செல்வதே இலட்சியம் என்றும் பள்ளி விளையாட்டுத் திடலில் ஓட்டம் எடுப்பது துணைக் குறிக்கோள் என்றும் தன் எண்ணத் திரைக்கு ஒளி ஊட்டினார் இம்மாணவி.
4-ஆவதாக களமிறங்கியவர், நெகிரி செம்பிலான் மாநிலம் போர்ட் டிக்சன் தானா மேரா தமிழ்ப் பள்ளி மாணவி கிசாலினி பாலமுருகன்;
வீட்டு வாழ்க்கையே பள்ளி வாழ்க்கையாக மாறும்படி செய்துவிட்ட இன்றைய கொரோனா பருவத்தில், கணினி ஆளுமையில் நான் தேர்ந்துவிட்டேன்; புலனத்தின்வழி பாடங்களை சமர்ப்பித்து ஆசிரியர்களிடம் நட்சத்திரப் புள்ளிகளைப் பெறுவதிலும் சீருடை இயக்கம் போன்ற புறப்பாட நடவடிக்கைகளிலும் அதிக அக்கறைக் கொள்வதாக தெரிவித்த இம்மாணவி, இணைய ஊடாக, அதிக நூல்களைக் கற்று வருவதாகவும் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
நிறைவாக, ஐந்தாவது நாவன்மையாளராக அழைக்கப்பட்ட மாணவர் உலு பேராக் கெரிக் எஸ்.கே.கே. குழுவகத் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த சூர்யா கண்ணன்.
அவசரம் அவசரமாக புறப்பட்டு காலை 7.45 முதல் பிற்பகல் 2:00 மணிவரை என அதிக நேரம் பள்ளியில் செலவழித்த நிலை மாறி, குறைவான நேரத்தில் கணினிவழி பாடம் கற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. கணினியை இயக்குவது இயல்பாக எனக்குப் பிடிக்கும். இன்றைய சூழல் அதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது என்று சொன்ன சூரியா, கூகுள் செயலி எனக்கு இப்பொழுது மிகவும் பரிச்சயமாகிவிட்டது என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தேசிய இடைநிலைப் பள்ளி மேநாள் துணை முதல்வருமான திருமிகு பெ. இராஜேந்திரம் அவர்கள் நன்றியுரை ஆற்றும் முன்னம், மாணவர்களுக்கு பாராட்டுரை வழங்கினார் கவிஞர்-எழுத்தாளர்-பேச்சாளர் என்னும் முப்பரிமானம் கொண்டவரும் உதயன் இதழில் வாரந்தோறும் சிவாஜி கணேசனும் தமிழ் சினிமாவும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வருபவருமான மொன்றியல் வீணை மைந்தன்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகவே இணைந்து விடுவேன் என்று உதயன் ஆசிரியரிடம் வாக்கு கொடுத்திருந்த நான், அவ்வாறு செய்யாமல் கடைசி நேரத்தில்தான் இணைந்தேன். அந்த பரபரப்பில், ஒலிபெருக்கு சரியாக அமையாமல், அது எதிரொலித்தது. நிகழ
நிகழ்ச்சியை தொழில் நுட்ப ரீதியில் நேர்த்தியாக கொண்டு செல்வதில் கண்ணும் கருத்துமாக இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் ஒருங்கிணைப்பாளருமான பாடகர் ரவாங் ராஜாவை பாராட்டத்தான் வேண்டும்.
கனடா உதயன் இதழ், மலேசிய மண்ணில் படைத்த இந்த நிகழ்ச்சி செம்மையுற துணை நின்ற மற்ற இரு ஆசிரியர்களான தாட்சாயணி முத்து மாணிக்கம், அறிவிற்கரசி செல்வரசன், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.