தமிழ் ஈழ நிலத்தில், சிங்களப் பேரினவாத அரசின் கொடுமையான ஒடுக்குமுறைகள் முடுக்கிவிடப்பட்ட போது, அதன் விளைவாக, எதிர்வினையாக தமிழீழ விடுதலைப் போராட்டம் முகிழ்ந்தது. உரிமை மறுப்பும், இனவழிப்பும் ஈழத் தமிழ் இனத்தை பலியெடுத்த சூழலில், ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டப் பயணத்தில் ஒடுக்குமுறைக்கு எதிரான மிகக் கூர்மையான ஆயுதங்காள, உயிராயுதங்களாக கரும்புலிகள் அமைப்பை தலைவர் பிரபாகரன் தோற்றுவித்தார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் கரும்புலிகளின் பங்களிப்பு மிகவும் உன்னதமானது.
ஜூலை 05 கரும்புலிகள் நாள். தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் தம்மை அர்ப்பணித்த உன்னதமான வீரர்களை நினைவுகொள்ளுகின்ற நாள். தமது சுயத்தை மறைத்து, தமது முகத்தை மறைத்து, தமது அடையாளங்களை துறந்து மிக உறுதிபடுத்த மனங்களுடன் உயிரை ஈகம் செய்த உன்னத மறவர்களை நினைவுகொள்ளுகின்ற நாள். ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சங்களை கதறி அழச் செய்யும் புனித நாள். தமிழர் தேசத்தின் கற்களும் உருகி கண்ணீர் விடுகின்ற நாள். இன்று எமது தேசத்தில் நினைவுகொள்ள முடியாமல் மறுக்கப்பட்ட நாள்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் கரும்புலியாக காற்றில் வித்தாகியவர், கப்டன் மில்லர். இவர், யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மகா வித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் மீது, ஜூலை 5ஆம் நாள், 1987ஆம் ஆண்டு தாக்குதலை நடாத்தினர். வெடி பொருட்கள் நிரப்பிய வாகனத்தை செலுத்திச் சென்று இராணுவ முகாமில் மோதி இராணுவத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தினார் மில்லர். இதன் வாயிலாக தமிழ் மக்களை அழிப்பதற்கு தயார் செய்யப்பட்டிருந்த ஒப்பிரேசன் லிபேரேசன் என்ற தாக்குதல் நடவடிக்கை தடுக்கப்பட்டது.
கப்டன் மில்லர் அவர்கள், வீரச்சாவடைந்த தினமே கரும்புலிகள் தினமான அனுஷ்டிக்கப்படுகின்றது. இதேவேளை, முதல் பெண் கரும்புலியாக வீரகாவியம் ஆகியவர் கப்டன் அங்கயற்கண்ணி. இவர் ஸ்ரீலங்கா அரசின் போர்க் கப்பல் மீது காங்கேசன்துறைமுகத்தில் வைத்து தாக்குதல் நடத்தினார். வடபிராந்தியப் போரில் கட்டளையிடும் தாய்க் கப்பல்மீது தாக்குதல் நடத்தி அதனை முற்றாக அழித்தமையின் வாயிலாக ஒரு போர் நடவடிக்கையை முடக்கினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியில் பல பிரிவுகள் காணப்பட்டன. அவை விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமான பலமாகவும் பரிமாணம் பெற்றன.
தரைக் கரும்புலிகள், மறைமுகக் கரும்புலிகள், கடற்கரும்புலிகள், வான் கரும்புலிகள் என கரும்புலிகள் படையணி பல பிரிவுவுகளைக் கொண்டதுடன் பல்வேறு வகையான தாக்குதல்களையும் மேற்கொண்டது. முதல் கடற்கரும்புலிகள் என்ற வரலாற்றை மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் தமதாக்கிக் கொண்டனர். இவர்கள், யாழ். மாவட்டம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் “எடித்தாரா” கட்டளைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதனை மூழ்கடித்தனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் முகம் அறியாத இன்னொரு படையணியாக மறைமுக கரும்புலிகள் காணப்பட்டனர். இவர்கள் தமது பெயர், முகம் போன்றவற்றை தெரியப்படுத்தாத நிலையில் நாட்டுக்காக உயிரை அர்ப்பணித்துள்ளனர். மாவீரர்களுக்கு அவர்கள், மாண்ட பின்னர், இராணுவ நிலைகள் அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்படுவதுடன் கல்லறைகள் எழுப்பப்படும். மறைமுக கரும்புலிகள் அவ்வாறு நினைவுகூரப்படாத வகையிலான போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்து, தமது தாய்நாட்டின்மீதும் மக்கள் மீதுமான பாசத்தையும் பற்றையும் வெளிப்படுத்துகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பல்வேறு படை நடவடிக்கைகள் உலகின் கவனத்தை ஈர்த்தன. ஆனையிறவு வெற்றிச் சமர், கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் என்பன புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தை சர்வதேச நாடுகளே வியக்க வைத்தது.அதற்கு அடி நாதமாக, ஆதாரமாக கரும்புலிகள் நடத்திய தாக்குதல்கள் அமைகின்றன. அத்துடன் கரும்புலிகளின் தாக்குதல்கள், மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் கட்டுக்கோப்புடனும், ஒழுக்கத்துடனும் மேற்கொள்ளப்பட்டவை என்பதற்கு கட்டுநாயக்கா மீதான கரும்புலித் தாக்குதல் நல்லதொரு எடுத்துக்காட்டாக வரலாற்றில் நிலைத்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதற்குப் பிரதான காரணமாக அமைந்தது, அந்த விமான நிலையத்தில் இருந்து சிங்கள அரச படை விமானங்கள் தமிழீழ மக்கள்மீது இனவழிப்பு தாக்குதல்களை மேற்கொண்டமையே. இதனால் தமிழர் தாயகம் பேரழிப்பை சந்தித்தது. ஒவ்வொரு விமானத் தாக்குதல்களும் தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக அழித்தன. பள்ளிக்கூடங்கள்மீது விமானத் தாக்குதல்களை நடாத்தி பள்ளி மாணவர்களை அவர்களின் சீருருடையுடன் கொலை செய்த சம்பவங்கள் நிகழ்ந்தேறின.
இந்த நிலையில் தான், அந்த விமானங்களை அழிப்பதற்காக கட்டுநாயக்கா விமான நிலையம்மீது கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இங்கே முக்கியமாக நோக்கப்பட வேண்டியது புலிகளின் கட்டுக்கோப்பும் ஒழுக்கமும் ஆகும். இந்த தாக்குதலின் போது சர்வதேச பயணிகளுக்கோ, ஸ்ரீலங்கா விமானப் பயணிகளுக்கோ எந்தவிதமான சிறு பாதிப்பும் ஏற்படாத வகையில் ஸ்ரீலங்கா அரசுக்கும் அதன் விமானப்படைக்கும் பாரிய இழப்பையும் பதிலடியையும் கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் இடம்பெற்றமையை எவரலாலும் மறுக்க முடியாது.
விடுதலைப் போராட்ட வரலாற்றில் இராணுவ ரீதியாக பாரிய வளர்ச்சியைப் பெற்ற புலிகள் இயக்கம் வான்புலிகள் படையணியை ஆரம்பித்த பின்னர், வான் கரும்புலிகள் படையணியையும் உருவாக்கியது. இந்த நிலையில் முதல் வான் கரும்புலித் தாக்குதலை 20.02.2009 அன்று சிறிலங்காவின் வான்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்கா வானூர்த்தித் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் வான் கரும்புலிகளான கேணல். ரூபன் , லெப்.கேணல். சிரித்தரன் ஆகியோர் தற்கொலைத் தாக்குதலாக நடத்தி வரலாற்றில் பதிவாகினர்.
“பலவீனமான ஒரு இனத்தின் பலமான ஆயுதமாக கரும்புலிகள் படையணியை உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள். கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்…” என்று தலைவர் பிரபாகரன் கூறியுள்ள பொன் மொழிகள், கரும்புலிகளின் பலத்தை பறைசாற்றுகின்றன.
ஒரு போராட்டத்தில் உயிரை ஈகம் செய்வது என்பது ஒரு மகத்துவம். மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே, தன்னலச் சமூக அமைப்பில், பிறருக்காக வாழ்பவர்கள், நாயகர்களாக நிலைக்கின்றனர். நவீன சமூகத்தில் அத்தகைய நாயகர்கள் அருகிவிட்ட நிலையில், சரித்திரத்தின் புதிய நாயகர்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை அடையாளப்படுத்தினர். அந்தப் பயணத்தில் ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியாக, புரட்சியாக உயிரை ஆயுதம் ஆக்கிய கரும்புலிகளின் ஈகத்தை, இந்தப் பூமி உள்ளவரையில், மனித இனம் உள்ள வரையில் மறக்காமல் இருப்போம்.
கல்லறையற்ற, முகமற்ற அந்த வீரர்களை நினைவுகூர காற்றும் மண்ணும் கடலும் போதுமானது. சிங்கள அரசின் நினைவழிப்பு யுத்தத்திற்கு முகம் கொடுத்துள்ள ஈழத் தமிழ் மக்களாகிய நாம், புலம்பெயர் தேசங்களில் கரும்புலிகள் நாளை எழுச்சியோடு கொண்டாடுவதும், தாயகத்தில் மனக் கோயில்களில் அவர்களை பூசிப்பதும், இழந்த உரிமையைப் பெறவும், இனவழிப்புக்கான நீதியைப் பெறவும் உதவுகின்ற உயிராயுதமாகும்.
பார்த்தீபன்