புராதன மன்னர்கள் காலம் முதல் இந்நாட்டில் காணப்படும் ஒரு பயிரே தென்னை. இது இந்நாட்டு மக்களின் உணவோடும் வாழ்வோடும் கலாசாரத்தோடும் பின்னிப் பிணைந்த ஒரு பயிராக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
இப்பயிரைப் பொறுத்தவரையில் அதில் எதுவுமே கழிவு கிடையாது. அதன் அனைத்துப் பாகங்களும் மனிதனுக்கு பயன்படக் கூடியனவாக உள்ளன. அது ஒரு பொருளாதாரப் பயிரும் கூட. இப்பயிரின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் உணர்ந்த இந்நாட்டு பண்டைய மன்னர்கள் ஆரம்ப காலம் முதல் இப்பயிர்ச்செய்கையை ஊக்குவித்து மேம்படுத்தியுள்ளனர்.
நாட்டில் 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சனிக்கிழமையன்று தங்கொட்டுவவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தென்னையானது இலங்கையில் காணப்படும் பெருந்தோட்டப் பயிர்களில் ஒன்றாகும். இது ஐரோப்பியரால் இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பயிர் அல்ல.
இந்நாட்டில் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் தெங்கு பயிர்ச் செய்கை தொடர்பில் சுதந்திரத்தின் பின்னர் உரிய கவனம் செலுத்தப்பட வில்லை. சனத்தொகைப் பெருக்கம், நகராக்கல் திட்டங்கள், தென்னங்காணிகளை துண்டாடுதல் போன்றவாறான வேலைத் திட்டங்களால் தெங்கு பயிர்ச்செய்கைத் துறை வீழ்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியது. இப்பயிர்ச்செய்கை துறையின் முக்கியத்துவமும் சிறப்பும் உரிய முறையில் உணரப்படாததன் விளைவாகவே இந்நிலைமை ஏற்பட்டது.
ஆனால் இந்நாட்டு தேங்காய்க்கு உலக சந்தையில் நல்ல கேள்வி உள்ளது. அந்தக் கேள்விக்கு ஏற்ப உலக சந்தைக்கு தேங்காயை விநியோகிக்கக் கூடியளவுக்கு உள்நாட்டில் தேங்காய் உற்பத்தி இல்லை. இங்கு அறுவடை செய்யப்படும் தேங்காயில் பெரும் பகுதி உள்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்காகவே பயன்படுகின்றது.
இந்த நிலையில் உள்நாட்டு தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், 2010 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த அன்றைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் தெங்கு கைத்தொழில் துறையை மேம்படுத்தவென தனியான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்று உருவாக்கப்பட்டது. சுதந்திர இலங்கையில் தெங்கு கைத்தொழில் துறை அபிவிருத்திக்காக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்றை ஸ்தாபித்த பெருமை அவரையே சாரும்.
அந்த அமைச்சின் ஊடாக உள்நாட்டு தெங்கு உற்பத்தியை அபிவிருத்தி அடையச் செய்வதற்காக திட்டமிட்ட அடிப்படையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. என்றாலும் 2015 இல் பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அவ்வேலைத் திட்டங்கள் அனைத்தையும் கைவிட்டது. இதன் விளைவாக இந்நாட்டின் தெங்கு கைத்தொழில் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பின்னடைவுக்கு உள்ளாகின.
உள்நாட்டு மக்களின் தேங்காய் தேவையை நிறைவேற்றவென வெளிநாடுகளில் இருந்து தேங்காயை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அத்தோடு தேங்காய் ஏற்றுமதியும் பெருவீழ்ச்சி கண்டது. இதன் விளைவாக தேங்காய் ஏற்றுமதி மூலம் கிடைக்கப் பெற்று வந்த அந்நிய செலாவணியிலும் பெருவீழ்ச்சி ஏற்பட்டது.
இவ்வாறான சூழலில், 2019 நவம்பரில் பதவிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தெங்கு கைத்தொழில் துறைய மீண்டும் கட்டியெழுப்புவதில் விஷேட கவனம் செலுத்தியுள்ளது.
அந்த வகையில் தற்போது நாட்டில் வருடமொன்றுக்கு அறுவடை செய்யப்படும் 2800 மில்லியன் தேங்காய்களை 3600 மில்லியன்கள் வரை அதிகரிக்கவென அரசு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் நாட்டில் 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் வேலைத் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 10 இலட்சம் தென்னங் கன்றுகளை சமுத்தி பயனாளர்கள் ஊடாகவும், 20 இலட்சம் தென்னங் கன்றுகளை நிவாரண அடிப்படையில் வழங்கி நடவும், 10 இலட்சம் தென்னங் கன்றுகளை மக்கள் விரும்பி வாங்கி நடவும் கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது பெரிதும் வரவேற்கத்தக்க திட்டமாகும். இத்திட்டத்திற்கு கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஒத்துழைப்பும் ஆதரவும் நல்க வேண்டும். அது தமதும் தம் குடும்பத்தினதும் பொருளாதார மேம்பாட்டுக்கு மாத்திரமல்லாமல் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கும் அளிக்கப்படும் பாரிய பங்களிப்பாகவும் அமையும். ஆகவே தெங்கு உற்பத்தி துறையின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டுக்கும் பங்களித்து நாட்டின் அபிவிருத்திக்கு ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும். அதுவே வளமான தேசத்திற்கு இன்றியமையாத பங்களிப்பாகும்.