இலங்கையில் புகழ்பெற்ற மஹாராஜா குரூப் ஒப் கொம்பனிஸ் என்று அறியப்பெற்ற கெபிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார் என்ற சோகமான செய்தியை எமது வாசக அன்பர்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்
கொவிட் தொற்று தொடர்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கிளி மஹாராஜா’ என செல்லமாக நண்பர்கள் மத்தியில் அழைக்கப்படும் இவர், சக்தி, சிரச உள்ளிட்ட தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளின் தாய் நிறுவனமான கெபிட்டல் மஹாராஜா குழுமத்தின் நிறுவுனர்களில் ஒருவரான சின்னத்தம்பி ராஜேந்திரத்தின் மகனாவார். அத்துடன் திரு ராஜா மஹேந்திரன் அவர்கள் இலங்கையின் அரசியல்வாதிகளோடு நெருங்கிய நண்பராகவும் மதிக்கப்படுகின்ற ஒருவராகவும் விளங்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கெபிட்டல் மஹாராஜா நிறுவனமானது, இலங்கை ஒளி, ஒலிபரப்புத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று என்பதுடன், ஊடகத் துறை தவிர்ந்த பல்வேறு தரப்பட்ட சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களும் அதன் கீழுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானார்.
எனினும் அவரது உடல் இறந்த சில மணிநேரங்களில் இன்று மதியம் சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் தகனம் செய்யப்பட்டது.
இவரது மறைவினை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் தமது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் பல அரசியல் தலைவர்கள் அவரது இறுதிக்கிரியைகளில் நேரடியாகக் கலந்து கொண்டார்கள் என்றும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இலங்கையின் வர்த்தகப் புலி என்றும் வெற்றிகரமான சாதனையாளர் கிளி என்றும் அழைக்கப்பட்ட ராஜமகேந்திரன் 1943ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி பிறந்தார்.
எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கைக்கு வந்த ராஜேந்திரனின் இரண்டாவது மகன் ராஜமகேந்திரன். யாழ்ப்பாணம் – மானிப்பாயை பூர்வீகமாகக்கொண்ட ராஜேந்திரன், எழுபதுகளின் பிற்பகுதியில் தென்னிலங்கைக்கு வந்து மகாதேவா என்பவருடன் இணைந்து, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாக இலங்கையில் ஏற்றுமதி – இறக்குமதி வியாபாரத்தில் ஈடுட்டார். இவர்கள் இருவரதும் வர்த்தக சிரத்தையின் பயனாக, எஸ் – லோன் பைப் நிறுவனத்தை எழுபதுகளின் இறுதியில் ஆரம்பித்தார்கள்.
ஜப்பானுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், மகாராஜாவின் வர்த்தக பயணத்தில் – எதிர்பாராத ஒரு புள்ளியில் – மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதாவது, எண்பதுகளின் ஆரம்பத்தில் ஜனாதிபதி பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்ட மாதிரி வீட்டுத்திட்டதிற்கான பைப் விநியோகம் மகாராஜா நிறுவனத்துக்கு கிடைத்த கையோடு, மகாராஜா நிறுவனம் இலங்கையின் நிஜமான மகாராஜாவாகவே அரியணையில் ஏறிவிட்டது.
அதற்குப்பிறகு, மகாராஜாவின் அடுத்தடுத்த வர்த்தக பயணங்கள் அனைத்தும் வெள்ளி திசையாக அமைந்தது. பெப்ஸியை இலங்கைக்கு கொண்டுவந்தது முதல், சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து எம்.டி.வி. நிறுவனத்தை ஆரம்பித்ததுவரை பல கம்பனிகள் இவர்களது காலடியில் ஆழ வேரூன்றி வளரத்தொடங்கின.
ஆனால், ஊடகங்களின் மீது ராஜமகேந்திரனுக்கிருந்த தீராத மோகம், அதன் வழி அவரை ஆழமாக இழுத்துச்சென்றது. இதன் பயனாக, எம்.டி.வியின் கீழ் ஏழு ஊடகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த வேளையில் சில வருடங்களுக்கு முன்னர் இனவாத போக்கு கொண்டதும் அரசியல் பின்னணியைக் கொண்டவர்களான குழுவினரால் எம்.டி.வி நிறுவனம் தாக்கப்பட்ட பல கோடி பெறுமதியான தொழில் நுட்ப உபகரணங்கள் அழிக்கப்பட்டன என்பதும் கவனிக்கத்தக்கது.
சிரஸ, சக்தி, யெஸ், ஹிட் என்று மும்மொழிகளிலும் ஆரம்பிக்கப்பட்ட ஏழு அலைவரிசைகள் மகாராஜாவின் மேலதிக கரங்களாக இலங்கையை வளைத்து வைத்திருந்தன.
மகாராஜா நிறுவனம் இன்றுவரை அதே அதிகாரத்தோடும் – புகழோடும் – இலங்கையில் கோலோச்சிக்கொண்டுதானிருக்கிறது.
ராஜமகேந்திரனின் மகன் சசிதரன் ஒருகால கட்டத்துக்கு பின்னர், கூட்டு நிறுவனங்களின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.
ஆனாலும் எமது செய்தியாளர் தெரிவித்த குறிப்புக்களிலிருந்து தனது தந்தையைப் போன்று எல்லா நிறுவனங்களின் மீதுமான தீவிர ஈடுபாடு அவருக்கு அவ்வளவு இல்லாதபோதும், ஆழ வேரூன்றிய மகாராஜாவின் பெயர் தொடர்ந்தும் தென்னிலங்கையில் ஜொலித்துகொண்டுதானிருக்கிறது என்பதும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செல்வாக்கு நிறைந்த ஒரு நிறுவனமாகவே என்றும் நிலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.