மலேசிய மடல்:
நக்கீரன்
பத்துமலை, ஜூலை 02:
அரபு நாடுகளின் சுற்றுலாத் துறை சார்பில் செய்யப்படும் விளம்பரங்களில் மலேசியாவை அறிமுகம் செய்யும்பொழுது பத்துமலை திருத்தலத்தில் அமைக்கப்பட்டுள்ள திருமுருகக் கடவுளின் திருவுருவச் சிலையைத்தான் காண்பிப்பார்கள். அந்த அளவிற்கு பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற சுற்றுலாச் சின்னமாக முருகன் சிலை விளங்குகிறது.
ஆறு தலையாயக் கொள்கைகளைக் கொண்ட இந்து சமயயத்தில் கௌமாரக் கொள்கையின் நாயகனாம் வேலவனை வழிபாட்டுத் தலமாகக் கொண்டுள்ள பத்துமலை ஆலயம் 105 நாட்களுக்குப் பின் தற்பொழுது திறக்கப்பட்டுள்ள நிலையில் குறைவான பக்தர்களே ஆலய வளாகத்திலும் குகைக் கோயிலிலும் தென்படுகின்றனர்.
இது குறித்து கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் பொதுச் செயலாளர் சேதுபதி குமாரசாமியிடம் வினவியபோது, ஜூலை முதல் நாள் காலையில் பத்துமலைத் திருத்தலம் திறக்கப்பட்ட வேளையில் அதிகமான பக்தர்கள் வந்தனர் என்றவர், மறுநாளான இன்று குறைவான அளவில் பக்தர்கள் காணப்பட்டாலும் நாளை வெள்ளிக்கிழமையும் அதைத் தொடர்ந்து வரும் வார விடுமுறை நாட்களிலும் பக்த அன்பர்கள் அதிகமாக வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக கெனடாவில் இணைய மற்றும் பருவ இதழ்களாக ஒருசேரத் திகழும் உதயனுக்கான செய்தியில் குறிப்பிட்டார்.
ஏறக்குறைய ஒன்றேகால் நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட பத்துமலை திருமுருகன் திருக்கோயில், ‘கோவிட்-19’ தாக்கத்தினால் அரசு அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைத் தொடர்ந்து கடந்த மார்ச் திங்கள் 18-ஆம் நாள் மூடப்பட்டது. கொரோனா கிருமியின் பரவலும் பாதிப்பும் மலேசியாவில் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ள தற்போதைய நிலையில் அண்மையில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையில் மத்தியக் கூட்டரசு ஒருசில தளர்வு அம்சங்களை அறிமுகம் செய்ததன் விளைவாகக நாட்டில் உள்ள ஆலயங்கள் பொதுமக்களின் வழிபாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டன.
ஆனாலும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் சுகாதாரத்திலும் பொது நலனிலும்அக்கறைக் கொண்ட தேவஸ்தான நிருவாகம், ஆலய வளாகம் முழுவதும் துப்புறவு செய்து தூய்மை நிலையை உறுதி செய்துகொண்டு முன்னறிவுப்பும் செய்துவிட்டு ஜூலைத் திங்கள் முதல் நாள் காலையில் பொதுமக்களின் வழிபாட்டிற்காக திறந்து விட்டது.
பத்துமலையில் குகைக் கோயிலில் குடிகொண்டுள்ள மூல முர்த்தியான கந்தனை வழிபடுவதற்காக பக்தர்களும் உள்நாட்டு-வெளிநாட்டு சுற்றுப் பயணிகளும் என பல்லாயிரக் கணக்கில் தங்களைக் கடந்து போவதையும் மீண்டும் கீழிறங்குவதையும் அனுபவித்த 272 படிக்கட்டுகளும், ஒருவேளை உணர்வையும் உயிரையும் பெற்றிருந்தால், இத்தனை நாளும் தனிமையில் வாடிய துன்பம் விலகியதே என்ற பூரிப்பில் உள்ளம் மலர்ந்திருக்கலாம்.
செங்கற்களாலும் வெண்காரையாலும் உருவாக்கப்பட்ட படிக்கட்டுகள் அவ்வாறு எண்ணிடத் தவறினாலும் பகல் முழுவதும் இந்தப் படிக்கட்டுகளை வசிப்பிடமாகவும் உணவுத் தேடலுக்கான இடமாகவும் கொண்டுள்ள நூற்றுக் கணக்கான குரங்குகள், கடந்த மூன்றரை மாதங்களாக பத்துமலை படிக்கட்டுகளில் நிலவிய வெறிச்சோடிய வெறுமைத்தன்மை விலகியதற்காகவும் மக்களின் நடமாட்டத்திற்காகவும் நிச்சமாக மகிழக் கூடும். மனிதர்களைவிட பக்தர்களின் கைகளில் இருக்கும் தேங்காய், வாழைப்பழம், பூக்களைக் கொண்ட அர்ச்சனைத் தட்டு, குடி நீர் போத்தல்கள், சுவை நீர்க் கலன்கள், தின் பண்டங்கள் அகியவற்றின்மீதுதான் குரங்குகளின் கவனம் மூழ்வதும் இருக்கும்.
சில வேளையில் ழூழல் பார்த்து வழிப்பறி செய்யவும் தயங்காத இந்தக் குரங்குகளுக்கு கடந்த மூன்றரை மாதங்களாக ஆலய வளாகத்தை ஒட்டியுள்ள காட்டில் கிட்டும் காட்டுவாழைப் பழங்கள் போதவில்லையோ அல்லது சுற்றுப்பயணிகள் குழந்தைகள் மூலம் கிட்டும் பல்சுவை உணவு கிட்டாமையால் நேர்ந்த ஏக்கமோ என்னவோ அனைத்துக் குரங்குகளும் மெலிந்து காணப்பட்டன.
பிரசாதம் என்னும் அருளுணவோ, அருள் நீர் எனப்படும் தீர்த்தமோ பக்தர்களுக்கு வழங்கப்படாதென்று தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா தெளிவாக அறிவித்துவிட்ட நிலையில் பக்தர்களின் கையில் பையோ அல்லது அர்ச்சனைத் தட்டோ இல்லாததால் பெரும்பாலான குரங்குகள் ஒன்றுக்கொன்று பேன் பார்த்துக் கொண்டு படிக்கட்டுகளில் இளைப்பாறுவதை எப்படி எடுத்துக் கொள்வதென்று புரியவில்லை.
குகைக் கோயிலுக்கு செல்பவர்கள் ஏறுவதற்கு இரு வரிசை; அதேப்போல் இறங்குவதற்கு இரு வரிசை என்றிருந்ததை ஒழுங்கு படுத்தி, நடுவில் உள்ள இரு வரிசைகளை மட்டும் ஏறுவதற்கு ஒன்றும் இறங்குவதற்கு ஒன்றும் என ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதால் இருபுறமும் ஆள் நடமாட்டம் இல்லாத இரு வரிசைப் படிக்கட்டுகளில் ஓய்வெடுப்பத்தும் அவ்வப்பொழுது தடுப்புச் சுவற்றில் தாவி அங்கு வரும் ஒருசில பக்தர்(கை)களை நோட்டமிடுவதும் என் பொழுதைக் கழிக்கும் குரங்குகளின் சேட்டையும் உணவு வேட்டையும் முன்பைப் போல மீண்டும் இடம்பெறும் காலம் எப்போது கனியும் என்று தெரியவில்லை.
பத்துமலையில் மட்டுமல்ல; அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தான நிருவாகத்தின்கீழுள்ள இன்னோர் ஆலயமும் மலேசிய இந்துக்களின் தாய்க் கோவிலுமான கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்திலும்கூட பக்தர்களின் வருகை குறைவாகத்தான் காணப்படுகிறது. இருந்தபோதும் அது வழக்கமான ஒன்றுதான் என்று குறிப்பிட்ட கு.சேதுபதி, தேவஸ்தானத்தின் மூன்றாவது ஆலயமான கோலாலம்பூர் கோட்டுமலை பிள்ளையார் கோவிலில் மட்டும் பகதர் கூட்டம் வழக்கம்போல நிரம்பி வழிவதாகச் சொன்னார்.
ஆன்மிக தலமும் சுற்றுலாத் தளமுமான பத்துமலை முருகன் ஆலயத்திற்கு பக்தர்கள் இனி வழக்கம்போல வரலாம் என்றும் ஆனால், அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; அத்துடன், சுவாசக் கவசத்தையும் அவசியம் அணிந்து வரவேண்டும் என்பதை மனதிற் கொள்வதுடன் முதியோரையும் 12 வயதிற்குக் கீழான சிறார்களையும் ஆலயத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்றும் பக்த அன்பர்களை சேதுபதி கேட்டுக் கொண்டார்.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் குழந்தையுடன் வரும் பெற்றோரும் குறிப்பாக தாய்மார் அனைவரும் கீழ்த்தளத்தில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இது குறித்து தேவஸ்தானத்தின் சார்பில் பலகட்டங்களில் அறிக்கை வெளியிட்டும் அறிவிப்பு செய்திருந்தும் குழந்தையுடன் வரும் பெற்றோரைக் காண முடிகிறது.
நாட்டின் மேலக்கரை மாநிலமான பகாங்கைச் சேர்ந்த இர. சுரேந்தர் என்பவரும் அவரின் மகனும் ஒருசேர முருகக் கடவுளுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக முடி இறக்கிவிட்டு தலையில் சந்தனம் பூசிய கோலத்துடன் உதயனுக்கு காட்சி தந்தனர்.
அதைப்போல, பழைய அரச நகரான கிள்ளானில் இருந்த வந்த குடும்பம், பெண் குழந்தைக்கு முடி இறக்க கடந்த ஐந்து மாதங்களாகக் காத்திருந்ததாகவும் முடி வளர்ந்து குழந்தை சிரமப்பட்டதால் தாங்களும் சிரமத்தைப் பாராமல் வந்து முடி முருகனுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு உடனே ஊர் திரும்புவதாகவும் கூறினர்.
“ஏறக்குறைய மூன்றரை மாதங்களுக்கு மேல் பக்தர்கள்தான் ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லையேத் தவிர, இறைவனுக்கு உண்டான அபிஷேகம் ஆராதனை யாவும் வழக்கம்போல நடைபெற்றன. கடவுளுக்குரிய கடமையில் இருந்து நாங்கள் தவறவில்லை என்று பத்துமலைக் கோயிலில் பணியாற்றும் அர்ச்சர்களில் ஒருவர் தெரிவித்தார்.
ஆலய குருக்கள்கள், கணக்குப் பிள்ளை, மடப்பள்ளி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சிப்பந்திகள், நிர்வாகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் வழக்கம்போல ஊதியம் வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இருந்தபோதும், எந்த நேரமும் பக்தர்களின் வருகையுடன் பரபரப்பாக இயங்கிய எங்களின் வாழ்க்கை, பழைய நிலைக்கு எப்போது திரும்பும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தையும் அவர்கள் ஏக்கத்துடன் உதயனிடம் இறக்கி வைத்தனர்.
பொதுமக்களிடம் பணப் புழக்கம் குறைவாக இருப்பதுடன், வேலை வாய்ப்புக் குறைவு, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கட்டுப்பாடு, வெளிநாட்டு சுற்றுப்பயணிக்குத் தடை போன்ற காரணங்களால் பக்தப் பெருமக்களின் வருகை தற்போது மந்தமாக இருந்தாலும் எல்லாம் வல்ல திருமுருகனின் திருவருளால் எல்லாம் சரியாகிப் போகும் என்று பத்துமலைத் திருத்தலப் பணியாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
பத்துமலை திருத்தல வளாகத்தில் உணவகம் நடத்துவோர், பல்பொருள் அங்காடிக் கடைக்காரர்கள், பூசனைப் பொருள் விற்பனை நிலையத்தினர் யாவரும் ஒரு வித மிரட்சியுடனும் எதிர்கால நம்பிக்கையுடனும் காத்திருக்கின்றனர்.
மொத்தத்தில் எல்லோரின் உள்ளத்திலும் ‘இப்படி எல்லாவற்றையும் புரட்டிப் போட்ட கொரோனா ஆட்கொல்லி கிருமிக்கு ஒரு முடிவுரை எழுதப் படாதா’ என்ற பொது நோக்கம்தான் அணையாத தீபம் போல மிளிர்கிறது.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24