குயின்ரஸ் துரைசிங்கம் – கனடா
1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி, ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் இனக்கலவரம் என்கின்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு இன்று 38 வயதாகிறது. தமிழ் மக்களின் மனங்களில் சிங்களத்தின் கொடூரத்தை வடுவாக்கிவிட்ட அந்த இனப்படுகொலை ‘கறுப்பு ஜூலை’ என்கின்ற பெயரில் தமிழர் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
83ல் இடம்பெற்ற இனஅழிப்பின் கனத்தை அறிந்து கொள்ளவும், அது வெறும் இனக்கலவரமல்ல, திட்டமிட்ட இனஅழிப்பு என்பதைப் புரிந்து கொள்ளவும், 83ற்கு முன்னதான காலப்பகுதியில் இடம்பெற்ற தமிழர்களுக்கெதிரான திட்டமிட்ட வன்முறைகளை சுருக்கமாகப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
1958இலிருந்து, இன்றுவரை தொடர்ச்சியான திட்டமிட்ட இனஅழிப்பு இலங்கையில் இடம்பெற்றே வருகிறது. 58இலிருந்து 78வரை கிட்டத்தட்ட 20 வருடங்கள், பண்டாரநாயக்காவில் தொடங்கி, ஜேஆர் வரை மேற்கொண்ட இனஅழிப்பு முயற்சியின் வெளிப்பாடாகவே, 78, 79களில், இளைஞர்கள் இரகசியமாக ஆயுதப்போராட்டத்தை தமிழீழத்தில் அறிமுகம் செய்தார்கள். இன்று, ஏதோ இளைஞர்கள் ஆயுதம் தூக்கியிராவிட்டால், தமிழர் சுகமாக வாழ்ந்திருப்பர் என்று கதை சொல்பவர்கள், கட்டாயமாக 79ற்கு முன்னர் இலங்கையின் இனஅழிப்பு வரலாற்றைப் படிப்பது நல்லது. 1978ற்குப் பின்னதாக படிப்படியாக பிறப்பெடுத்த ஆயுதப் போராட்டம்கூட, தங்கள் தாய் தந்தை சகோதரர்கள், உறவினர்கள், ஊரவர்கள், தங்கள் பள்ளித் தோழர்களின் கோரமான படுகொலைகளைப் பார்த்து, இதைத் திட்டமிட்டு முடுக்கிவிட்டுக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர் மீதான தங்கள் ஆத்திரத்தை எப்படித் திருப்பிக் காட்டுவது என்று தெரியாமல், இந்த கொடூர எதிரிகளை எதிர்ப்பதற்கு என்ன வழி என்று தெரியாமல், கிடைத்த ஒரே வழி என்பதால் தெரிந்து கொண்டதே ஆயுதவழி எதிர்ப்புப் போராட்டம். அறவழி, அகிம்சை வழி, பேச்சுமேசை சுற்றுக்கள், சமாதான ஒப்பந்தங்கள் என்று எல்லா வழியிலும் தமிழினம் ஏமாற்றப் பட்டதால், வேறு வழியின்றிக் கையிலெடுத்ததே இ;ந்த ஆயுதப் போராட்டம்.
அதை எடுத்தவர்கள் ஒன்றும் சாதாரணமானவர்களல்ல. கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் படித்துக் கொண்டிருந்த சிறந்த மாணவர்களே இதற்குத் துணிந்தார்கள். வேறு வழியின்றி, தங்கள் குடும்பத்தையும் கல்வியையும் தங்களுக்கு இருந்த குடும்பப் பொறுப்பையும் துறந்து, தமிழினத்திற்கு ஏதாவது ஒரு வழியில் உதவத் துணிபு கொண்டார்கள். இப்படி இவர்கள் துணிவு கொள்வதற்கு ஊக்கமும் உற்சாகவும் கொடுத்தவர்கள் யார் தெரியுமா? வேறு யாருமல்ல. எமது தமிழ் அரசியல் தலைவர்களே. ஒரு பக்கத்தில் தங்களது அரசியல் வெற்றிகளைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கான வாக்கு வங்கி வேட்டைக்காகவும், மறு பக்கத்தில், தமிழர் என்ற இனத்தையே சிறீலங்கா என்ற நாட்டிலிருந்து முற்றாக அகற்ற வேண்டுமென்ற வெறிகொண்ட பௌத்த சிங்கள வல்லாதிக்க சக்திகளிடம் தங்களது அகிம்சை வழி அமைதி வழிப் போராட்டங்கள் எதுவும் எடுபடவில்லை என்ற நிலையிலும், இரத்தப் பொட்டு வைக்கும் கலாச்சாரத்தை ஊக்குவித்து, இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதே ஒரே வழி என்று இளம் தமிழ் சமூகத்தை வன்முறைக் கலாச்சாரத்திற்குத் தூண்டியவர்களே எமது தமிழ் அரசியல்வாதிகள் தான். இருந்தும், பின்னர் தங்கள் சொல்கேட்டு நடக்கவில்லை என்பதற்காக, ஆயுதப் போராட்டத்திற்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல விலகியிருந்தது மட்டுமல்லாமல், சிங்கள அரசுக்கு விலைபோன அரசியல் பச்சோந்திகளையும் எமது வரலாறு பதிவு செய்தது.
1958 இலிருந்து இன்றுவரை, இலங்கையில் திட்டமிட்ட இனஅழிப்பு நடைபெற்றே வருகிறது. இந்த இனஅழிப்பு வரலாறு பற்றி தமிழர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று சொல்பவர்கள், சர்வதேச மனிதஉரிமைகள் அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச அகதிகள் ஆணைக்குழு போன்றவை வெளியிட்ட அறிக்கைகளைப் படித்துப்பார்த்தாலே, சிங்கள அரசு 58இலிருந்து இன்றுவரை என்ன விதமான கொடுமைகளைத் தமிழருக்கும் தமிழ் நிலங்களுக்கும் தமிழ் மொழிக்கும் இந்து சமயத்திற்கும் செய்திருக்கிறது என்பது புரிந்துவிடும்.
இப்போது இதையெல்லாம் மறந்துபோன பல தமிழர்கள், ஆங்காங்கே திடீரென முளைத்து, இளைஞர்கள் ஆயுதமேந்தியிராவிட்டால், இலங்கையில் தமிழினம் நன்றாக வாழ்ந்திருக்கலாம் என்று பகற்கனவு காண்பதையிட்டு, நாம் வெட்கமும் வேதனையுமே அடையலாம்.
இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு சிங்கள அரசாங்கமும் தமிழரின் பூர்வீக காணிகளை அபகரிப்பதையே இலங்காகக் கொண்டுள்ளன. முதலாவது பிரதமரான டி.எஸ். சேனநாயக்க, முதலாவது அமைச்சரவையில் காணி அமைச்சராக தமது புதல்வர் டட்லி சேனநாயக்கவையே நியமித்தார் என்பதிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.
அடுத்து வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க அரசாங்கத்தில் காணி, காணி அபிவிருத்தி அமைச்சராக சி.பி.டி.சில்வா பதவி வகித்தார். அதற்கு முன்னர் இவர் பொலநறுவ, அநுராதபுர மாவட்டங்களை உள்ளடக்கிய வடமத்திய மாகாண உதவி அரசாங்க அதிபராகவிருந்து, அயல் மாகாணங்களான வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள வரைபடம் கீறிய இன வெறியர்.
பண்டாரநாயக்க மறைவின் பின்னர் பிரதமரான டபிள்யு. தஹநாயக்கவின் அரசில், இன்றைய ராஜபக்ச சகோதரர்களின் தந்தையான டி.ஏ.ராஜபக்ச காணி அமைச்சரானார். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் இரண்டு தவணை ஆட்சிக் காலத்தில் மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமினி திசநாயக்க திட்டமிட்டு கிழக்கு மாகாண குடிப்பரம்பலை சிங்களத்துக்கு அதிகமாக்கினார்.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு அரசாங்கமும் தமிழர் நிலங்களையே கண்வைத்து செயற்பட்டன. இந்தக் காலகட்டங்களில் தமிழினத்தின் மீதான படுகொலைகளை சிங்கள பௌத்த தேசம் மெதுவாகவும், தீவிரமாகவும் மேற்கொண்டது.
இக்கட்டுரை எழுதப்படுகின்ற 2021ம் ஆண்டு யூலை மாதத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளராக ஒரு சிங்கள இனத்தவர் பதவியேற்றுள்ளார். யாழ் மாவட்ட அரச அதிபர் பதவிக்கும் வடக்கு மாகாண ஆளுனர் பதவிக்கும்கூட சிங்கள இனத்தவரை நியமிக்க ஜனாதிபதி கோத்தபாய மூலோபாய நகர்வுகளை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. கிழக்கில் இத்தகைய பல உயர் பதவிகளுக்கு ஏற்கனவே தமிழரல்லாதவர்கள் நியமிக்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்டது. கிழக்கில் தொல்பொருள்களைப் பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணிக்குழு என்ற பெயரில் பாதுகாப்புச் செயலரின் நேரடி மேற்பார்வையில் சிங்கள இனத்தவரை மட்;டும் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, தமிழர் தாயகப் பகுதிகள் சிங்கள மயப்பட்டவையாக்கப்பட, ஒரு காலத்தில் சிங்களவர்கள் வாழ்ந்த இடங்களாக முத்திரை குத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
தமிழர் நிலங்களைச் சூறையாடி வந்ததன் வெளிப்பாடே இனவெறி தாண்டவமாடுவதற்கான அடிப்படையாக இருந்து வருகிறது. 1956ம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் கல்ஓயாவில் இடம்பெற்ற தாக்குதலே தமிழினத்தின் மீது சிங்கள தேசம் நடத்திய முதலாவது தமிழின அழிப்பு. 1949ல் உருவான கல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இங்கே குடியேற்றப்பட்ட சிங்கள குற்றவாளிக் கூலிகளின் குடும்பங்கள், அங்கு ஏற்கனவே காலாதிகாலமாக வாழ்ந்து வந்த 150க்கும் அதிகமான தமிழரை வெட்டியும் குத்தியும் சுட்டும் எரித்தும் கொன்றனர். இதே வருடத்தின் அடுத்தடுத்த மாதங்களில் பதவியா, பொலனறுவ, ஹிங்குராங்கொட உட்பட கிழக்கு மாகாணத்தின் சில தமிழர் பகுதிகளிலும் ஆங்காங்கு தமிழர் கொல்லப்பட்டனர்.
கொழும்பு மாவட்டத்தை அடுத்துள்ள பாணந்துறை என்ற இடத்தில் அந்தணர் ஒருவர் உயிருடன் தார்ப்; பீப்பாவில் போட்டு எரிக்கப்பட்டதும், குழந்தையொன்று கண்டதுண்டமாக வெட்டப்பட்டதும், அப்பாவிப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதும் சட்டத்துக்கு உட்படுத்தப்பட்டது போன்று மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள்.
1957ம் ஆண்டு மேமாதம் 30ம் திகதி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இனத்துவேச வெறி பிடித்த ஜே.ஆர்.ஜயவர்த்தன, தனது அரசியல் இலாபங்களுக்கு மக்களை இரையாக்க, ஓர் தந்திரமான செய்தியை அறிக்கையிட்டார். இலங்கையிலே காலாகாலமாக வாழ்ந்துவரும் சிங்கள மக்கள், தமது மொழியையும் மண்ணையும் மதத்தையும் கட்டிப்பாதுகாப்பதோடு, ஒரு அங்குல நிலத்தையேனும் அந்நியரான தமிழருக்குக் கொடுக்க நாம் இணங்கக்கூடாது. இதை உறுதிசெய்வதே எனது ஆட்சியின் நோக்கம் என்று ஜே.ஆர்.கர்ச்சிக்க, இதற்கெனவே வெறியேற்றப்பட்டு அங்கே குவிக்கப்பட்டிருந்த, போதைக்கும் பணத்திற்கும் அடிமையான கூலிகளும் காடையரும் அதைக் கூச்சலிட்டு அங்கீகரிக்க, குள்ளநரி தனக்குள்ளே சிரித்துக் கொண்டது.
இதன் முழுமூச்சான துவேசப் பிரச்சாரத்தின் வெளிப்பாட்டில் எழுந்ததே 58 மே 25ம் திகதி ஆரம்பித்த இனப்படுகொலைகளும் கலவரங்களும். பொலன்னறுவை, கிங்குறுகொடை போன்ற தோட்டப்பகுதிகளில் வேலைசெய்துவந்த அப்பாவித் தமிழர்களை, சிங்களக் குண்டர்களும் காடையர்களும் கலைத்துக் கலைத்து வெட்டியும் எரித்தும் கிழித்தும் கொலை செய்தார்கள். கரும்புத் தோட்டங்களில் தொழில்புரிந்த தமிழ்க் குடும்பங்கள், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, கரும்புத் தோட்டங்களுக்குள் ஓடி ஒழிந்து கொண்டனர். சிங்களக் காடையர் தேடிப்பார்த்தும் அவர்கள் அகப்படாததால், தங்கள் கொலை வெறியைத் தீர்த்துக்கொள்ள, கரும்புத் தோட்டத்திற்குத் தீ மூட்டினர். தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளின் உயிரைப் பாதுகாப்பதற்காக கரும்புத் தோட்டத்திற்குள் ஓடி ஒழித்திருந்த 300க்கும் மேற்பட்ட தமிழ்க்குடும்பங்கள், தங்கள் குழந்தைகள் பிள்ளைகள் கணவன் மனைவி என்று பலரும் தீயில் கருக, தீயிலிருந்து தப்பிக்க வெளியே ஓடிவந்தோரை, சிங்களக் குண்டர்கள் கோடாரியாலும், வாள்களாலும், இறைச்சி வெட்டும் கூரிய கத்திகளாலும் வெட்டியும் கொத்தியும் மலையாகக் குவித்து, அதை எரித்து அதன் வெளிச்சத்திலே கூத்தாடினார்கள்.
கொழும்பு காலிமுகத்திடலில் தமிழின உரிமை கோரி தமிழ்த் தலைவர்கள் நடத்திய அகிம்சைப் போராட்டத்தை சிங்கள காடையர்கள் என்ற பெயரில் பண்டாரநாயக்கவின் அரசியல் கையாட்களும், சிங்களப் படையினரும் தாக்குதல் நடத்தி கலைத்தனர். அப்போது வெலிமடை எம்.பியாகவிருந்த கே.எம்.பி. ராஜரட்ண என்பவரே இத்தாக்குதல் அணிக்குத் தலைமை தாங்கியவர். தமிழரின் தோலில் செருப்புத் தைத்து அணிவேன் என்று நாடாளுமன்றத்தில் சூளுரைத்த சிங்கள அரசியல் காடையர்; இவர்;.
1961ல் யாழ்ப்பாணம் கச்சேரி செயலகம் முன்னால் சத்தியாக்கிரகம் நடத்திய தமிழ் அரசியலாளர்கள், பொதுமக்கள், மாணவர்களை அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ராணுவத்தை ஏவி விட்டு தாக்குதல் நடத்தி கைது செய்ததும்கூட தமிழினத்தின் மீதான வன்முறையே. இந்தக் கைங்கரியத்தை அப்போது செய்த ராணுவ அதிகாரி றிச்சர்ட் உடுகம, பின்னர் ஈராக்குக்கான இலங்கைத் தூதுவராக நியமனமானார்.
இதன் அடுத்த கட்டமாக, 1979 யூலை மாதம் 11ம் திகதி, அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜேஆர், தனது மருமகன் முறையான பிரிகேடியர் வீரதுங்காவை, யாழ் பகுதியின் கொமாண்டராக நியமித்தார். அன்றே, யாழ்ப்பாணத்திலும் அதன் அண்டிய பகுதிகளிலும் கடுமையான அவசரகாலச் சட்டத்தை வலுக்கட்டாயமாக அறிமுகம் செய்தார். இந்த அவசர காலச் சட்டத்தில், இலங்கை இராணுவத்திற்கும் பொலிசிற்கும், யாரையும் கண்ட இடத்தில் சுடுவதற்கும், இறந்த உடல்களை விசாரணையின்றி அப்புறப்படுத்துவதற்கும் முழு அதிகாரமும் கொடுத்தார் ஜேஆர்.ஜயவர்த்தன.
79 யூலை 14ம் திகதி, யாழ்ப்பாணத்தில் ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மறுநாள் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஐந்து உடல்களும், இறந்த இன்னுமொரு உடலுமாக, அந்த ஆறு இளைஞர்களும் கண்டுபிடிக்கப் பட்டனர். கொமாண்டர் வீரதுங்காவின் திட்டமிட்ட சதியில், ஜேஆரின் அறிவுறுத்தலில், ஏராளமான பகுதிகள் தினமும் சுற்றிவளைத்துத் தேடப்பட்டு, பலர் கைதுசெய்யப்பட்டு, கொடிய சித்திரவதைகளுக்கு ஆளானார்கள். காணாமல் போனார்கள்.
ஒரு குறிப்பிட்ட இளம் வயதெல்லையுடைய தமிழர்களில் கணிசமான வீதத்தினர், சிங்கள இராணுவத்தினதும் பொலிசினதும் திட்டமிட்ட அடக்குமுறைக்கும் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டு, எதிர்காலம் மழுங்கடிக்கப்பட்டவர்களானார்கள். இந்தக் காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்ட இளைய தலைமுறையினரின் கருத்தரிக்கும் தகுதிகளும் ஆண்மையும் கற்பும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. கடுமையான உட்காயங்களை உருவாக்கினார்கள். ஊசிகளும் தடிகளும் இவர்களது மர்ம உறுப்புக்களிலும் மலத்துவாரங்களிலும் நுழைக்கப்பட்டன. நகங்கள் பிடுங்கப்பட்டும், விரல்கள் நசிக்கப்பட்டும் மயிர்கள் எரிக்கப்பட்டும், கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளானார்கள். மிளகாய்த்தூள் போட்ட சாக்குகளில் இவர்களைக் கட்டிவைத்து அடிப்பதும், பின்னர் அவர்கள் மீது சுடுநீர் குளிர்நீர் போன்றவற்றை மாறிமாறி ஊற்றி துன்புறுத்துவதும், பெண்களைத் தினமும் பாலியல் சித்திரவதை செய்வதும் சாதாரண விடயங்களாக அரங்கேறின. நான்காம் மாடி போன்ற பல குறிப்பிட்ட இடங்கள், தமிழர்களை சித்திரவதை செய்யும் கொடிய வதைமுகாம்;களாக பயன்பாட்டில் இருந்தன.
இந்தப் பின்னணியில், தமிழர்களின் கல்வியையும் துவம்சம் செய்ய சிங்கள இனவெறி அரசு பின்நிற்கவில்லை. தெற்காசியாவின் மிகப் பெரியதான, அரிய கையெழுத்துப் பிரதிகளையும் ஆயிரக்கணக்கில் தாங்கியிருந்த யாழ் பொது நூலகத்தை திட்டமிட்டு இராணுவத்தின் உதவியுடன் தீயிட்ட கொடுமையும் அரங்கேறியது. திட்டமிட்ட இனஅழிப்பின் அடுத்த ஒரு அத்தியாயமாக, ஒட்டுமொத்தத் தமிழரையும் சிங்களப் பகுதிகளிலிருந்து வெளியேற்றும் ஒரு நடவடிக்கையாக அரங்கேற்றப்பட்டதே 1983 யூலை நிகழ்வுகள். சிங்களவரும் தமிழரும் தற்செயலாக மோத ஆரம்பித்ததால் எழுந்த கலவரம் போன்று ஆரம்ப நிகழ்வுகளை திட்டம்போட்டு மேடையேற்றிய சிங்கள அரசு, அதற்காகவே சில காடையர்களை வடக்கிற்கு அனுப்பி, அங்கிருந்து கொழும்பிற்கு வந்த புகையிரதத்தில் அவர்களை தெற்கை நோக்கி அனுப்பினார்கள். அப்படி அதிகாலை புகையிரதத்தில் வந்த காடையர்கள், ஒவ்வொரு புகையிரத நிலையத்திலும் இறங்கி, தமிழர்கள் சிங்களவர்களைக் கொல்வதாக ஓலமிட்டு, சிங்களவர்களைத் தூண்டி விட்டார்கள். இதனால் கொதிப்படைந்த சிங்களவர்கள், தங்கள் தங்கள் பகுதிகளில் வாழ்ந்த அல்லது தொழில்புரிந்த தமிழர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள்.
‘குள்ள நரி’ என அழைக்கப்பட்ட அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் நெறிப்படுத்தலிலும், அமைச்சராகவிருந்த காமினி திசாநாயக்கவின் வழிநடத்தலிலுமே படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.
தெற்கில் – முக்கியமாக கொழும்பு மாவட்டத்தில் வசித்த தமிழர்களின் விபரங்களை தேர்தல் இடாப்பு மூலம் பெற்று ஒரு பட்டியல் தயாரித்தனர். கத்தி, வாள், கோடரி போன்ற ஆயுதங்கள் பல்லாயிரக்கணக்கில் சிறில் மத்தியூவின் அமைச்சின் கீழ் இயங்கிய அத்துறுகிரிய அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் தயாரிக்கப்பட்டது.
தமிழர் மீது தாக்குதல் நடத்த சரியான தருணத்தை ஜே.ஆர். தலைமையிலான சிங்களக் கூட்டம் எதிர்பார்த்திருந்தபோது, 1983 யூலை 23ம் திகதி இரவு தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பலாலி வீதியிலுள்ள தபாற்கட்டைச் சந்தியில் ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதல் சரியான தருணமாக அவர்களுக்குத் தெரிந்தது.
கொழும்பிலுள்ள தமிழர்களின் பொருளாதாரத்தை அடியோடு அழிக்க வேண்டுமென்ற வெறியில் நடத்தப்பட்ட இந்த இனஅழிப்பில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (அப்போதைய பெறுமதி) பெறுமதியான தமிழர் சொத்துகள் அழிக்கப்பட்டதுடன் 2,500 இற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயப்படுத்தப்பட்டனர். உயிர் தப்பியோர் கப்பல்களில் ஏற்றப்பட்டு தமிழர் பகுதிகளான, வடக்கு கிழக்கிற்கு அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர்.
1983 ஜூலை 23 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இனப்படுகொலை, 4 நாட்கள் தொடர்ந்து நீடித்தது. தமிழர்கள் வீதி வீதியாக விரட்டப்பட்டு வெட்டியும், சுட்டும், உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் நூற்றுக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். பலர் குடும்பம் குடும்பமாக வீடுகளுடன் சேர்த்து கொளுத்தப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழரின் வர்த்தக நிலையங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டன. 4 நாட்களாக கொழும்பு வீதிகளில் தமிழர்களின் இரத்த ஆறு ஓடியது. இன்னுமொரு பக்கத்தில், ஏற்கனவே கைதாகி சிறைகளில் இருந்த தமிழர்களை, சிறைக்காவலாளிகள் மற்றும் பொலிசார் இணைந்து அரசாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடனும் உதவியுடனும், கோரமாகத் தாக்கி படுகொலை செய்தார்கள். குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்ற, தமிழர் உரிமைக்காகக் குரல்கொடுத்ததால் சிறைவைக்கப்பட்ட தமிழர் பிரதிநிதிகள் உட்பட, பலரும் அடித்துக் கொல்லப்பட்டார்கள். குட்டிமணியின் கண்கள் பிய்த்தெறியப்பட்டன. புத்தர் சிலையின் காலடியில் இவர்கள் கோரமாகக் கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்தார்கள்.
அவலக்குரல்கள் உலக நாடுகள் வரை கேட்டபோதும் அப்போது ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன மட்டும் மிகவும் அமைதியாக சிங்கள காடையர் கூட்டத்தின் கொலை வேட்டையை ரசித்துக் கொண்டிருந்தார். பாதுகாப்புப் படைகளோ தமக்கிடப்பட்ட கட்டளையின் படி கொலைத்தாண்டவம் புரிந்த காடையர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தன. இனப்படுகொலைகள் நடந்து கோரமான ஐந்து நாட்களுக்கு பின்னரே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இனக்கலவரம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் விளக்கமளித்தார். தொலைக்காட்சி உரையில் கூட தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்பாக வருத்தமோ, கவலையோ, அனுதாபமோ தெரிவிக்கவில்லை ஜனாதிபதி ஜே.ஆர். மாறாக, இனப்படுகொலையை நியாயப்படுத்தியே அவரது கருத்துகள் அமைந்திருந்தன.
1956 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கொண்ட நம்பிக்கையின்மை காரணமாகவே இனக்கலவரம் வெடித்ததாகவும் இவ்வாறான மனக்கசப்புகள் இருக்கும் போது சிங்களவர்கள் வன்முறையில் ஈடுபடுவது எளிதான செயல் என்றும் ஜே.ஆர். இனப்படுகொலையை நியாயப்படுத்தினார்.
அத்துடன் சிங்கள மக்களை அமைதிப்படுத்துவதற்காகவும் அவர்களுடைய இயல்பான வேட்கையை பூர்த்தி செய்வதற்காகவும் நான் ஒரு புதிய சட்டத்தை அமுலாக்குகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார் ஜே.ஆர். இப்புதிய சட்டத்தின் படி நாட்டுப் பிரிவினை கோரும் எவரும் இந்தப் பாராளுமன்றத்தில் அங்கத்தவர்களாக முடியாது. அது மட்டுமன்றி நாட்டுப் பிரிவினை கோரும் எந்தவொரு கட்சியும் தடை செய்யப்படும். இனிமேல் நாட்டைப் பிரிப்பது தொடர்பாக எவரும் சட்ட ரீதியாக செயற்பட முடியாது என்று அறிவித்தார். ஜே.ஆரின் அப்போதைய செல்லப்பிள்ளையான காமினி திசாநாயக்கவும் தனது இனவெறியை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில்: “உங்களைத் தாக்கியது யார்? சிங்களவர்கள். உங்களைக் காப்பாற்றியது யார்? சிங்களவர்கள்’. ஆமாம், எங்களால் தான் உங்களை தாக்கவும் முடியும் காப்பாற்றவும் முடியும். உங்களை காப்பாற்ற இந்திய இராணுவம் இங்கே வருமாக இருந்தால் அதற்கு 14 மணித்தியாலங்கள் தேவை. ஆனால், 14 நிமிடங்களுக்குள் இந்த நாட்டினில் உள்ள ஒவ்வொரு தமிழனின் இரத்தத்தையும் இந்த நாட்டிற்காக அர்ப்பணிப்போம் என்று முழங்கியிருந்தார்.
1983 ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று ‘நியூயோர்க்-வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை தனது ஆசிரிய தலையங்கத்தில் இப்படி எழுதியது: ‘தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது கடினமென்றால் ஏன் பிரிந்து வாழமுடியாது? தமிழ் மக்களுக்கு தனி ஆட்சி கொடுத்தால் என்ன? ஐ.நா.வில் உள்ள பல நாடுகள் போல் தமிழ் மக்களும் தாங்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதற்குரிய சரியான சான்றுகளை வைத்துள்ளார்கள். இந்த ஒருங்கிணைந்த இலங்கைத் தீவில் சிங்களவர் மட்டுமே அதிகாரங்களை வைத்திருக்கின்றார்கள். இந்த அதிகாரங்களைக் கொண்டுள்ள சிங்களவர்களுக்கு தமிழர்கள் இந்த ஒருங்கிணைந்த இலங்கைத் தீவில் வாழ முடியாத அளவில் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற அறிவாவது உள்ளதா?’ என கேள்வியெழுப்பியிருந்தது.
பௌத்தம் மட்டுமே தனி மதம், சிங்களம் மட்டுமே தனி மொழி என்ற கவர்ச்சிப் பிரச்சாரம் மூலம் 56ல் சிங்கள மக்களை ஏமாற்றிய பண்டாரநாயக்க, 3 வருடங்களில் அதே பௌத்த மதத்தின் வழிகாட்டி ஒருவரால் சுடப்படுமளவிற்கு அந்த பௌத்த சிங்களவர்கள் ஏமாற்றப் பட்டிருந்தார்கள்.
60ல் பதவியேற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்திலிருந்து, இன்றைய ராஜபக்ச குடும்ப ஆட்சிவரை தொடர்கிறது அன்று பண்டா விதைத்துச் சென்ற வித்தான சிங்கள இனவாதம்.
பண்டாரநாயக்காவிலிருந்து, சந்திரிகா, ரணில் மற்றும் மகிந்தா, கோத்தா வரை, ஜே.ஆர்., விஜேதுங்க, ரத்தினசிறீ உட்பட அத்தனைபேரும் இதே இனவாதக் குதிரையைப் பாவித்து, தமிழருக்கு செக்மேற் வைத்தார்கள். விளைவு, ஒட்டுமொத்த இலங்கையுமே குட்டிச்சுவராகியது.
வாக்குறுதிகளை வழங்கி வழங்கி, தங்கள் வாக்கு வங்கிகளையும் வங்கிக் கணக்குகளையும் நிறைத்துக் கொண்டவர்கள் பேரினவாத சிங்கள அரசியல் தலைமைகள். இன்றுவரை இது தொடர்கதைதான்.
1956ல் கொல்வின் ஆர். டி.சில்வா தீர்க்கதரிசனமாக ஒரு கருத்தை முன்வைத்தார்.
“Do we want a single nation or do we want two nations? Do we want a single state or do we want two? Do we want one Ceylon or do we want two? And above all, do we want an independent Ceylon which must necessarily be united and single and single Ceylon, or two bleeding halves of Ceylon which can be gobbled up by every ravaging imperialist monster that may happen to range the Indian ocean? These are issues that in fact we have been discussing under the form and appearance of language issue.
தமிழர் தாயகப் பகுதிகளை முழுமையாகப் பிரித்துக் கொடுங்கள், இரண்டு இனங்களும் இரண்டு பிரதேசங்களும் வழமை பெறும் என்றார் அவர். அத்தோடு இன்னுமொன்றையும் சொன்னார், ‘தற்செயலாக தமிழர் தாயகப் பகுதிகளைப் பிரித்துக் கொடுக்காது, சிறுபான்மை இனத்திற்கு துரோகமிழைக்க முயற்சித்தால், இன்நாட்டின் இரு இனங்களும் அழிந்து போவதுடன், இரு பிரதேசங்களும் நெருக்கடியையே சந்திக்கும், இரு இனங்களிலும் இரத்த ஆறு ஓடும்’ என்றார். இதன் இறுதி அத்தியாயத்தை இப்போது பார்க்கிறோம்.
சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ ஒரு கருத்தைக் கூறினார்:
இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது. அந்த ஆட்சியமைப்பை மாற்றும்படி அல்லது நெகிழ்ச்சித்தன்மையைக் கைக்கொள்ளும்படி அல்லது பிரித்து வழங்கும்படி யாராவது முன்னைய ஆட்சியாளர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் இனி அதற்கான வாய்ப்பு இல்லை, அதை இனி ஒன்றாக்க வாய்ப்பில்லை என்று, சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ தெரிவித்துள்ளார்.
செயல்முனைப்பும், புத்திசாலித்தனமும் கொண்ட இந்த தமிழ் சிறுபான்மையினர் கடுமையாக உழைத்தார்கள். அதற்காகவே அவர்கள் தண்டிக்கவும் பட்டார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டார்கள். சிங்களம் ஆட்சி மொழியாகியது. இரண்டு பல்கலைக்கழகங்களிலும் அவர்களுக்கு கோட்டா வழங்கப்பட்டது. இப்போது அவர்கள் வெறிகொண்ட புலிகளாகிவிட்டார்கள்.
இப்போது நினைத்துப் பார்க்கும் பொழுது, அப்போது மலேசியப் பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரஹ்மான் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார் என்றுதான் தோன்றுகிறது. அவரது ஆட்சியின் கீழ்தான் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்தது. ஆட்சியமைப்பை நெகிழ்ச்சியுள்ளதாக்கும் யோசனையை நான் முன்வைத்தேன். “இல்லை, வெட்டொன்று துண்டு இரண்டாக செல்வோம். நீங்கள் உங்கள் வழியில் போங்கள்” என்று அவர் சொன்னார். பலவீனமான தலைவர்களையும் தவறான தலைவர்களையும் கொண்டிருந்ததாலயே சிறிலங்கா மக்கள் வெற்றிபெறத் தவறிவிட்டார்கள்.
என்று கூறினார், வெற்றிபெற்ற சிங்கப்பூரை சிருஷ்டித்துக் கொடுத்த சிற்பி எனப் போற்றப்படும் லீ குவான் யூ. அவரது அனுபவத்திலிருந்து பிறந்த சொந்தமான வார்த்தைகள்.
பண்டாவிலிருந்து கோத்தா வரை, சிங்கள இனம் இன்றுவரை பாடம் கற்றுக்கொள்ளவில்லை. ஏன், உலகப் போர்களும், சுனாமி பேரழிவுகளும் கூட, சிங்கள இனத்திற்கு எந்தப் பட்டறிவையும் விட்டுச் செல்லவில்லை.
யூலை 25ல் ஆரம்பிக்கப்பட்ட 1983இன் தமிழின அழிப்புக்கு பன்னிரண்டு நாட்களுக்கு முன்னர் – 1983 யூலை 11ம் திகதி இங்கிலாந்தின் லண்டன் டெய்லி ரெலிகிராப் பத்திரிகைக்கு ஜே.ஆர். வழங்கிய சிறப்புச் செவ்வி ஒன்றில் தெரிவித்ததை மீள்வாசிப்புக்கு உட்படுத்தினால், இந்த இனப்படுகொலையை அவர் எவ்வாறு திட்டமிட்டிருந்தார் என்பது தெரியவரும். அவரது வார்த்தைகளில் அந்தச் செவ்வி பின்வருமாறு அமைந்துள்ளது:
‘I am not worried about the opinion of the Jaffna (Tamil) people now. Now we cannot think of them. Not about their lives or of their opinion about us. The more you put pressure in the north, the happier the Sinhala people will be here…. really, if I starve the Tamils, the Sinhala people will be happy….”
இதன் தமிழாக்கம் பின்வருமாறு: ‘யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்து இப்போது என்னவென்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை. இப்போது அவர்கள் பற்றி நாங்கள் சிந்திக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியோ அல்லது அவர்கள் எங்களைப் பற்றி என்ன கருத்துக் கொண்டுள்ளனர் என்பது பற்றியோ சிந்திக்க முடியாது. வடக்கின் மீது எவ்வளவுக்கு அழுத்தம் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு இங்கு சிங்கள மக்கள் மகிழ்வடைவார்கள்… உண்மையில், தமிழரை நான் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் சந்தோசமடைவர்….”
இதுதான் 1983 யூலை 25க்கு பன்னிரண்டு நாட்களுக்கு முன்னர் ஜே.ஆருக்கு இருந்த மனோநிலை. இதனையே அவர் செயலில் காட்டினார்.
எனக்கு வாக்களித்த சிங்கள பௌத்த மக்களின் நலன்களையே நான் கவனிப்பேன் என்று இன்று கூறும் கோதபாயவுக்கும், தமிழரைப் பட்டினி போட்டு சிங்களவரை மகிழ்ச்சியடைய வைப்பதாகக் கூறிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?