(மன்னார் நிருபர்)
(12-08-2021)
தேசிய திருவிழாக்களில் ஒன்றான மன்னார் மறை மாவட்டம் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழாவில் கலந்து கொள்ள பாதயாத்திரையாகவோ அல்லது போக்குவரத்து மூலமோ வேறு மாவட்டங்களில் இருந்து மடுத் திருதலத்துக்கு வருவகை தருகின்றவர்களை பாதுகாப்புத் துறையின் உதவியுடன் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,
தேசிய திருவிழாக்களில் ஒன்றான மன்னார் மாவட்டம் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழாவானது எதிர்வரும் மாதம் 15 ஆம்; திகதி கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இவ் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கவனத்தில் கொண்டு நாங்கள் இவ் விழா தொடர்பாக முடிவுகளை மேற்கொண்டுள்ளோம்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைகளுக்கிணங்க இம்முறை மடு திருவிழாவுக்கு 150 பக்தர்கள் மட்டுமே அனுமதிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு சில நாட்களில் எங்கள் அவதானிப்பின் அடிப்படையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் மடுத்தேவாலயத்தை நோக்கி வருவதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
பாதுகாப்புத் துறையின் உதவியுடன் பாதயாத்திரையாக அல்லது போக்குவரத்து மூலமோ வேறு மாவட்டங்களில் இருந்து மடுத் திருதலத்துக்கு வருவதை நிறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சகல சோதனை சாவடிகளிலும் பாதுகாப்புத் துறையினர் , அதிகாரிகள் இதை வலியுறுத்துவார்கள். எல்லா மாவட்ட மக்களுடன் நாங்கள் இவ் தேசிய விழாவான மருதமடு அன்னையின் விழாவை கொண்டாட விருப்பம் கொண்டிருந்த போதும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மிக வேகமான கொரோனா நோயின் தீவிரத்தால் பல கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு எங்களுக்கு விடுத்துள்ளது.
ஆகவே இதனை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். ஆகவே சென்ற முறை வழங்கிய ஒத்துழைப்பு போன்ற இம்முறையும் எமக்கு ஒத்துழைப்பு தந்து உங்கள் வீடுகளிலிருந்து உங்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.
சுகாதார நடை முறைகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் இறைவன் சித்தம் கொண்டால் அடுத்த வருடம் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து மிக சிறப்பாக கொண்டாடக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதை கவனத்தில் கொண்டு இம்முறை மன்னார் மாவட்ட மக்களுடன் அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட 150 பக்தர்களுடன் கொண்டாட அனைவரினதும் ஒத்துழைப்பை நான் தயவாக வேண்டி நிற்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.