மன்னார் நிருபர்-
(17-08-2021)
–
முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு கிராமத்திற்கு சொந்தமான 14.5 ஏக்கர் அரச காணியை அபகரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வேறு கிராமத்தவர் அனுமதிப்பத்திரங்கள் இன்றி அடாத்தாக அபகரிக்க முற்பட்டு புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை அக்கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நேற்று திங்கட்கிழமை(16) மாலை குறித்த பகுதிக்கு விஜயம் செய்து நிலமையை நேரடியாக அவதானித்தார்.
இவ் விடயம் தொடர்பாக முசலி பிரதேச செயலாளருடன் கலந்துரையாடினார்.
முசலி பிரதேச காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தரும் அவ் இடத்திற்கு வருகை தந்து இக்காணி அரச காணியாக எல்லை படுத்தப்பட்ட காணி என்பதை உறுதி செய்தனர்.
இக் காணி அடாத்தாக பிடிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வருவதாக அரச அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தினர்.
உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு மருதமடு கிராமத்தில் காணியற்ற மக்களுக்கு உடனடியாக இக் காணிகளை பிரித்து வழங்கும் படி முசலி பிரதேச செயலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினரால் பரிந்துரை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.