‘கனடாவில் தமிழர் சமூகத்தின் வளர்ச்சியானது கனடாவின் வளர்ச்சிக்கும் துணை நிற்கின்றது ‘
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைமையகக் கட்டடத்தின் திறப்பு விழாவில் பிரம்டன் மாநகர மேயர் பெற்றிக் பிரவுண் புகழாரம்
“கனடாவில் கடந்த 35 வருடங்களாகவே தமிழ் மக்கள் பெருமளவில் குடியேறத் தொடங்கினார்கள். ஆனால் இவ்வாறு குடியேறிய தமிழர் சமூகத்தின் வளர்ச்சியானது அவர்களை ஏனைய சமூகத்தினர் போற்றுகின்ற நிலைக்கு உயர்த்தியிருக்கின்றது. அத்துடன் தமிழ்க் கனடியர்களின் வளர்ச்சியானது, கனடாவின் வளர்ச்சிக்கும் துணை நிற்கின்றது. அத்துடன் எனது அரசியல் பாதையிலும் தமிழ் மக்கள் எனக்கு செங்கம்பளம் விரித்ததை நான் என்றும் மறக்கப்போவதில்லை. இவ்வாறான எனது அரசியல் வெற்றிகளுக்கு கைகொடுத்த பலருள் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் சாந்தா பஞ்சலிங்கமும் ஒருவர் என் நான் மகிழ்ச்சியுடன் கூறுவேன்.இதைப்போன்றே ஒன்றாரியோ மாகாண சபையில் அங்கத்தவர்களாக உள்ள லோகன் கணபதி மற்றும் விஜேய் தணிகாசலம் ஆகியோரின் மக்கள் சேவையையும் நான் போற்றுகின்றேன்”
இவ்வாறு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மார்க்கம் நகரில் நடைபெற்ற கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைமையகக் கட்டடத்தின் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய பிரம்டன் மாநகர மேயர் பெற்றிக் பிரவுண் புகழாரம் சூட்டினார். அன்றைய தினம் பெருந்திரளான வர்த்தக நண்பர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்ட மேற்படி விழாவில் மேயர் பெற்றிக் பிரவுண் அவர்களே நாடாவை வெட்டி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்திற்குச் சொந்தமான இந்த கட்டடத்தை தற்போதைய தலைவர் திரு சாந்தா பஞ்சலிங்கம் தலைமையில் பொறுப்பேற்ற, இயக்குனர் சபையே முன்னின்று இயங்கி அதற்குரிய நிதியை திரட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், வர்த்தக சம்மேளத்தின் அங்கத்தவர்கள் மற்றும் இயக்குனர் சபை உறுப்பினர் ஆகியோரிடமிருந்தும் ஏனைய பல தமிழ்க் கனேடியர்கள் மற்றும் வர்த்தகத் துறை வெற்றியாளர் ஆகியோரிடமிருந்தும் பெற்று எவ்வித கடன் தொகையும் இல்லாது இந்த கட்டடம் கொள்வனவு செய்யப்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி கட்டடத திறப்புவிழாவிற்கு ஒன்றாரியோ மாகாண சபையின் அங்கத்தவர்களான திருவாளர்கள் லோகன் கணபதி மற்றும் விஜேய் தணிகாசலம் ஆகியோரும் பெருமளவு நிதியை வழங்கிய தமிழ்க் கனடிய வர்த்தகப் பிரமுகரான திரு டன்ஸ்ரன் பீற்றர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பெற்றிருந்தனர்.
மிகவும் அழகிய முறையில் கட்டடத்தின் உற்பகுதி திருத்தியமைக்கப்பெற்று அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு தொகுதியாக காணப்படுகின்றது. அங்கு ஒரு கலந்துரையாடல் அறை மற்றும் கூட்ட மண்டபம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட தகவல் தொழில் நுட்ப அறை ஆகியன அமைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் விருந்தினர் அறை வரவேற்பாளர் பகுதி ஆகியன நேர்த்தியாக அமைக்கப்பெற்றிருந்தன.
விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு குளிர்பானங்களும் சிற்றூண்டிகளும் முதலில் வழங்கப்பெற்று பின்னர் மதிய உணவு விருந்துபசாரமும் இடம்பெற்றது.
உரிய நேரம் நெருங்கிய போது சிறந்த ஏற்பாட்டில் நாடா வெட்டப்பெற்று கட்டடம் திறந்து வைக்கப்பெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.
அங்கு மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி உரையாற்றும் போது, தனது தொகுதியான மார்க்கம் தோர்ன்ஹில் மாகாண சபை தொகுதிக்குள் இந்த புதிய கட்டடம் அமைவதை வரவேற்பதாகவும் தொடர்ந்து மாகாண அரசின் ஊடாக தேவையான உதவியைப் பெற்றுத் தர தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பின்னர் விழாவை முன்னாள் தலைவர்களில் ஒருவரான கென் கிருபா அவர்கள் தொகுத்து வழங்கினார். சில பிரமுகர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தற்போதையத் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் உரையாற்றினார். அவர் தனது உரையை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றினார்.
அவர் தனது உரையின் போது, சம்மேளனத்தின் தலைமைப் பதவியை தான் ஏற்பதற்கு தனக்கு ஆதரவாக இருந்த அனைத்து வர்த்தக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து தொடர்ந்து தனது கனவுகளில் ஒன்றாக விளங்கிய இந்த புதிய கட்டடத்திட்டத்திற்கு தன்னோடு ஒத்துழைத்து அதை நனவாக்க அருகில் இருந்து செயற்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு தன்னில் முழு நம்பிக்கை வைத்து தங்கள் கடமைகளை செவ்வனே ஆற்றிவரும் சமமேளனத்தின் இயக்குனர் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் தான் மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் எமது நிர்வாகத்தில் எவ்வித கடனும் அற்ற நிலையில் கொள்வனவு செய்யப்பெற்ற இந்த தலைமைகம் எதிர்காலத்தில் பதவியேற்கும் இயக்குனர் சபையினருக்கும் அங்கத்தவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்றும் இதன் மூலம் எமது சம்மேளனத் எமது தமிழர் சமூகத்திற்கும் நாம் வாழும் இந்த கனடிய தேசத்திற்கும் சிறந்த சேவையை ஆற்றலாம் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
(News and photos by Sathiyan)