யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்
கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் பெரும்பாலும் சமூக முடக்கத்தை அறிவிக்கலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு ஊடகங்களைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் மத்தியில் இருந்தது.எனினும் பெரும்பாலான சனங்கள் அதற்கு தயாராக இருக்கவில்லை என்பதைத்தான் வெள்ளி
பின்னேரம் நமக்கு உணர்த்தியது.நாட்டின் பெரும்பாலான நகரங்கள் வழமைக்கு மாறாக ஜனங்களால் பிதுங்கி வழிந்தன.குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள்: பல்பொருள் அங்காடிகள்; மருந்தகங்கள்: போன்ற இடங்களில் ஜனங்கள் நெரிசலாக காணப்பட்டார்கள். தெருக்களில் திருவிழாக் காலத்தைப் போல பண்டிகை நாட்களைப் போல சனங்கள் அடர்த்தியாகக் காணப்பட்டார்கள். வணிகர்கள் பொருட்களின் விலையை பன்மடங்காக கூட்டிவிற்றார்கள். எந்த நோக்கத்திற்காக சமூகம் முடக்கப்படுகிறது ? வைரஸ் தொற்றும் வேகத்தை குறைப்பதற்காகத்தானே? ஆனால் பத்து நாட்களுக்குள் ஏற்படக்கூடிய தொற்றை சில மணித்தியாலங்களுக்குள் ஏற்படுத்தியமைதான் திடீர் அறிவிப்புகளின் விளைவு எனலாமா?
அரசாங்கம் தந்திரமாக பழியை எதிர்க்கட்சிகளின் மீதும் தொழிற்சங்கங்களின் மீதும் போடப் பார்க்கிறது.கொரோனா தொற்று பரவி மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமைக்கு ஜோசப் ஸ்டாலின்கொத்தணி, சஜித் கொத்தணி மற்றும் அனுர கொத்தணி போன்றவையே காரணம் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஆனால் திடீர் சமூக முடக்க அறிவிப்பால் நாட்டில் பெட்ரோல் செட் கொத்தணி ; ஃபூட் சிற்றி கொத்தணி ; பார்மசி கொத்தணி போன்ற கொத்தணிகள் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அதிரடி அறிவிப்புகள் அல்லது எதிர்பாரா அறிவிப்புகள் எனப்படுபவை சிவில்தனமானவை அல்ல.அவை அதிரடியான ராணுவத்தன்மைமிக்க அறிவிப்புகள். இதற்கு முன்னரும் அரசாங்கம் அவ்வாறு ராணுவத்தனமாகத்தான் சமூகமுடக்கங்களை அறிவித்திருக்கிறது. இவ்வாறு திடீரென்று அறிவிக்கப்படும்போது மக்கள் கூடியபட்ஷம் பொருட்களை வாங்கிச் சேமிக்க தொடங்குவார்கள். குடிமக்களின் உளவியல் என்பது அதுதான். குடிமக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே உள்ள வேறுபாடும் அதுதான். குடிமக்கள் இவ்வாறான அறிவிப்புக்கள் வரும்பொழுது விழுந்தடித்துக்கொண்டு கடைகளுக்கு ஓடுவார்கள்.வாங்ககூடிய பொருட்களை வாங்கிச் சேமிக்கப் பார்ப்பார்கள். எனவே குடிமக்களின் இயல்பை சரியாக விளங்கிக் கொள்ளாமல் சமூக முடக்கங்களை திடீரென்று அறிவித்தால் அவை எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட சமூகமுடக்கமும் அத்தகையதுதான்.
அப்படி ஒரு சமூகமுடக்கம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்னரே முன்னெச்சரிக்கை காட்டியிருந்தால் ஜனங்கள் படிப்படியாக பொருட்களை வாங்கியிருப்பார்கள். ஒரு நாளின் மிகச்சில மணித்தியாலங்களுக்குள் விழுந்தடித்துக் கொண்டு கடைகளுக்கு ஒடியிருக்கமாட்டார்கள். அவ்வாறு முன்கூட்டியே முடிவெடுத்து முன்கூட்டியே ஜனங்களை முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவித்திருக்கலாம்தானே. சமூக முடக்கத்தை ராணுவ நடவடிக்கை போல ஏன் திடீரென்று அறிவிக்க வேண்டும்? ஜனாதிபதி வெள்ளிக்கிழமை இரவு ஆற்றிய உரையை சில நாட்களுக்கு முன்னரே செய்திருக்கலாம். சனங்களை ஒரு சமூகம் முடக்கத்துக்கு தயாராகுமாறு முன்கூட்டியே
எச்சரித்திருக்கலாம். ஆனால் அரசாங்கம் அப்படிச் செய்யவில்லை. முன்கூட்டியே அறிவித்தால் வைரஸ் ஓடி ஒழித்து விடும் என்று அரசாங்கம் அஞ்சியதா? இது எதைக் காட்டுகிறது?அரசாங்கம் முடிவெடுக்க முடியாமல் திணறுவதை காட்டுகிறதா? அப்படி என்றால் இந்த அரசாங்கத்தில் இருப்பவர்கள்தானே கிட்டத்தட்ட 12ஆண்டுகளுக்கு முன்பு யுத்தம் தொடர்பில் முடிவுகளை எடுத்தார்கள்? அந்த முடிவுகளுக்கும் இப்போது எடுக்கப்படும் முடிவுகளுக்கு இடையில் என்ன வேறுபாடு உண்டு ?
ஆம் அவர்கள் அப்பொழுது எடுத்த முடிவும் பிழையான முடிவுதான். யுத்தத்தின் வெற்றிக்காக தமது குடிமக்களில் ஒரு பகுதியினரின் உயிர்களை பொருட்படுத்துவதில்லை என்று முடிவெடுப்பது ஒரு மகத்தான முடிவு அல்ல.அப்படி ஒரு முடிவை எடுத்து யுத்தத்தை வெல்வது ஒரு பெரிய காரியமும் அல்ல.அதாவது ஒரு இனப்படுகொலை மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பெரிய வீரம் தேவையில்லை.அதுமட்டுமல்ல போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ் மக்களின் இழப்புக்களை தடுப்பதற்கு இந்தியாவோ அல்லது ஐநாவோ பொருத்தமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. இறுதிக்கட்ட போரில் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு அதுவும் ஒரு காரணம். அதாவது போரில் அரசாங்கம் வென்றதற்கு அதுவுமொரு காரணம்தான்.
எனவே அரசாங்கம் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறது என்பதே உண்மை. யுத்தத்தைப்போல வைரஸை கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை வந்துவிட்டது. வைரசுக்கு எதிரான போரில் படைத்தரப்பு எதிர்பார்த்த வெற்றியை எதிர்பார்த்த வேகத்தில் பெறமுடியவில்லை. சரிந்து விழும் பொருளாதாரத்திற்கும் வைரசுக்குமிடையே நாடு தடுமாறுகிறது.துறைசார் நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் எத்தனையோ தடவை கேட்டபோதும் அரசாங்கம் சமூகமுடக்கத்தை அறிவிக்கத் தயாராக இருக்கவில்லை. முடிவில் இரண்டு மகாநாயக்கர் கேட்ட பின்னர்தான் அரசாங்கம் அந்த முடிவை எடுத்தது. அப்படி என்றால் நாட்டில் துறைசார் நிபுணர்களை விடவும் மகாநாயக்கர்கள் கூறுவதைத்தான் அரசாங்கம் கேட்கிறதா?
சமூகமுடக்கம் அறிவிக்கப்பட்ட அன்றிரவு ஜனாதிபதி தொலைக்காட்சிகளில் தோன்றி உரையாற்றினார். இந்த உரையின் பெரும் பகுதியில் அவர் ஏன் சமூக முடக்கத்தை அரசாங்கம் விரும்பவில்லை என்பதற்கான விளக்கத்தை வழங்கினார். பொருளாதார நோக்குநிலையில் இருந்து அவர் கூறுவதில் நியாயம் உண்டு. வைரஸை முடக்குவது என்றால் அதற்கு நாட்டை முடக்க வேண்டும்.ஆனால் நாட்டை முடக்கினால் பொருளாதாரம் முடங்கிவிடும்.அதனால்தான் அரசாங்கம் சமூகமுடக்கம் தொடர்பில் முடிவெடுக்காமல் ஒத்தி வைத்துக்கொண்டே வந்தது. இதை இன்னொரு விதமாகக் கூறின் இழப்புக்களை பற்றிப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் பொருளாதாரத்தை எப்படித் தூக்கி நிறுத்தலாம் என்றே சிந்தித்தது.அதுவும் ஒரு யுத்தகளச் சிந்தனைதான்.
மேலும் பொருளாதார நோக்கு நிலையிலிருந்து சில துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டன. இது ஜனங்கள் சமூக முடக்கத்தை மீறி நடமாடுவதற்குரிய வாய்ப்புகளை அதிகப்படுத்தி இருக்கிறது. பிரதான சாலைகளில்தான் ஓரளவுக்கு சமூகம் முடங்கியிருக்கிறது. ஆனால் குக்கிராமங்களில் வாழ்க்கை வழமைபோல இயங்குகிறது. சமூகம் முடங்கவில்லை. வணிகர்கள் கடைகளின் முன் கதவை பூட்டி விட்டு பின்கதவால் வியாபாரத்தை செய்கிறார்கள். அப்படி என்றால் வைரஸ் பெருஞ் சாலைகளின் வழியாகத்தான் வருமா? பின்கதவு வழியாகத்தான் வருமா?
அதேசமயம், இப்போதும் அறிவிக்கப்பட்ட காலஎல்லை முடிந்ததும் சமூகமுடக்கம் நீக்கப்படுமா என்பது சந்தேகமே. ஏனெனில் முன்னைய சமூக முடக்கங்கள் அப்படித்தான் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டன. அதாவது அரசாங்கம் தான் என்ன செய்யப்போகிறது என்பதை வெளிப்படையாக மக்களுக்கு கூறத் தயங்குகிறது. இது ஒரு குடிமக்கள் சமூகத்திற்கு உரிய பண்பு அல்ல. படைத்துறை மற்றும் புலனாய்வுத்துறை பண்புதான். அதன் விளைவாகத்தான் குடி மக்களின் நோக்கு நிலையில் இருந்து சிவில் தனமாக சமூக முடக்கத்தை அறிவித்த தவறியது. எல்லாவற்றையும் ராணுவத்தனமாகவே முன்னெடுக்கிறது. போரில் வெற்றிபெற்ற ஒரு படைத் தரப்பை வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னிறுத்தி அதையும் ஒரு போராக காட்டி அதன் மூலம் பின்வரும் விடயங்களை சாதிக்கலாம் என்று அரசாங்கம் திட்டமிட்டது.
முதலாவதாக அரசாங்கம் எதையும் படைத்தரப்புக்கூடாகத்தான் சிந்திக்க முடியும்.அது தவிர்க்கப்பட முடியாத ஒரு ராஜபக்ச யதார்த்தம். போர் வெற்றிகள்தான் ராஜபக்சக்களின் அரசியல் முதலீடு. போர் வெற்றிகளை முதலீடாக கொண்ட ஒரு குடும்ப ஆட்சியானது படைத்தரப்பில் இருந்து பிரிக்கப்பட்டவியலாத இறுக்கமான ஒரு உறவைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக போர்க்குற்றச்சாட்டுக்கு இலக்காகும் ஓர் அரசாங்கம் இது விடயத்தில் படைத் தரப்பை பாதுகாத்தால்தான் தன்னையும் பாதுகாக்கலாம் என்ற தர்க்கத்தின்படி படைத் தரப்பை எப்படி தண்டிக்கப்பட முடியாத ஒரு தரப்பாக, மகிமைக்குரிய ஒரு தரப்பாக மேலுயர்த்தலாம் என்றுதான் சிந்திக்கும். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அதைத்தான் அரசாங்கம் செய்து வருகிறது.
அரச உபகரணங்களில் ராஜபக்ஷக்களுக்கு அதிகம் நம்பிக்கைக்குரிய ஒரு உபகரணம் படைத்தரப்புதான். covid-19 சூழலை முன்வைத்து நாட்டை அதிகபட்சம் ராணுவமயடுத்தியதோடு covid-19 எதிரான செயலணியின் தலைவராகவும் படைத்தளபதியே நியமிக்கப்பட்டிருக்கிறார். வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு போரைப்போல காட்டி அதில் படைத்தரப்பு வெல்லும் பொழுது அதன் மகிமை மேலும் உயரும் என்று அரசாங்கம் எதிர்பார்த்தது. இது காரணமாக வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் மருத்துவத்துறையைவிடவும் படைத்தரப்பின் கையே மேலோங்கி காணப்படுகிறது.நாட்டுமக்கள் மூன்றாவது தடுப்பூசியை அதாவது பூஸ்டர் டோஸை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனையும் சில நாட்களுக்கு முன் படைத்தளபதியே அறிவித்திருந்தார்.
மேலும் பெரும்தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் படைத்தரப்பே முன்னணியில் நின்றபடியால் அதுகுறித்த விமர்சனங்களை முன்வைப்பதற்கு எதிர்கட்சிகளும் சிங்களக் கூட்டு உளவியலும் ஓரளவுக்கு தயங்கின. உயிரைக் கொடுத்து போரை வென்று கொடுத்த ஒரு படைத்தரப்பு வைரசுக்கு எதிராகவும் ரிஸ்க் எடுத்து போராடிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் படைத்தரப்பின் மீது விமர்சனங்களை வைப்பதற்கு எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் ஓரளவுக்கு தயங்கின. சிங்களப் பொது உளவியலும் இது விடயத்தில் படைத்தரப்பு விமர்சிப்பதற்கு தயாராக இருக்கவில்லை.இது அரசாங்கத்தை குறிப்பிடத்தக்க அளவிற்கு பாதுகாத்தது. வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சிப்பது என்பது அதில் முன்னணி செயற்பாட்டாளர்களாகக் காணப்படும் படைத்தரப்பையும் விமர்சிப்பதுதான். தமது யுத்தவெற்றி நாயகர்களை விமர்சிக்க தயங்கிய சிங்களக் கூட்டு உளவியலை அரசாங்கம் நன்கு பயன்படுத்தியது.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக துணிச்சலுடன் போராடி தியாகம் புரிந்து வெற்றி பெற்ற ஒரு படைத்தரப்பு இப்பொழுது வைரசுக்கு எதிராகவும் துணிச்சலாகப் போராடி தியாகங்களை புரிகிறது என்ற ஒரு பிம்பத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டுகால அனுபவம் அந்த எதிர்பார்ப்பை தோற்கடித்து விட்டதா? வைரசுக்கு எதிரான போரில் படைத்தரப்பு வெற்றி பெறத் தவறிவிட்டதா? இதைஇன்னும் ஆழமாக சொன்னால் யுத்த வெற்றிகளின் பளபளப்பின்மீது வைரஸ் பரவத் தொடங்கிவிட்டதா ?