அண்மையில் எடுக்கப்பெற்ற கணக்கெடுப்பின் படி, இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விகிதாசாரம் மொத்த சனத்தொகையில் சுமார் 10 வீதமாக இருக்கின்ற நிலையில், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என இலங்கையின் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தடுப்பூசி ஏற்றிக்கொள்வது பாதகமானது என்ற தவறான கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் பரப்பப்பட்டிருக்கிறது. இதனால் முஸ்லிம்கள் பலர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள பின்வாங்குகின்றனர். இது குறித்து சுகாதார அமைச்சு மற்றும் பொலிஸ் தரப்பினர் என்னிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களினால் அங்கீகரிக்கப்பட்டதே இக்கொவிட் தடுப்பூசியாகும். இதில் எவ்விதமான பாதக விளைவுகளும் இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆகையினால் இது விடயத்தில் எவரும் எவ்வித சந்தேகமும் அச்சமும் கொள்ளத்தேவையில்லை.
எனவே, உடனடியாக அனைத்து முஸ்லிம்களும், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்று, தம்மையும் தமது குடும்பத்தினரையும் மரணத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதுடன் நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன்” என்று இலங்கயின் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.