(27-08-2021)
மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 36 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் நா.மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “மாவட்டத்தில் நாளாந்தம் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.
இந்நிலையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. முதலாவது தடுப்பூசி 92.41 வீதமானவை ஏற்றப்பட்டுள்ளதுடன் அதில் ஆக குறைந்தளவு தடுப்பூசி 78.84 வீதம் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் நேற்று முன்தினம், இரண்டாவது தடுப்பூசி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றுவரை 27.33 வீதமான தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை இராணுவத்தினரும் வீடு வீடாக சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.
ஆகவே மக்கள், தற்போதைய சூழ்நிலையை உணர்ந்து, அநாவசியமாக வீடுகளை விட்டு வெளியேறுவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.