(01-09-2021)
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தி அடையும் நிலையில் அதனை அனுஷ்டிக்கும் முகமாக தமிழர் தாயகமான வடமாகாணத்தில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு புத்தர் சிலைகளை அன்பளிப்புச் செய்ய வேண்டும் என இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டபய ராஜபக்ச ஐனாதிபதியாகப் பதவி பிரமாணம் செய்து எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைகின்றது. இந்த நிலையில் இதனை அனுஷ்டிக்கும் வகையில் ஆளும் கட்சியின் தொழிற் சங்கமான வட மாகாண பொதுஜன பெரமுன போக்குவரத்துச் சபை ஊழியர் சங்கம் ஏற்பாடுகளைக் மேற்கொண்டு வருகிறது.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டபய ராஜபக்ச ஐனாதிபதியாகப் பதவி பிரமாணம் செய்து எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைகின்றது. இந்த நிலையில் இதனை அனுஷ்டிக்கும் வகையில் ஆளும் கட்சியின் தொழிற் சங்கமான வட மாகாண பொதுஜன பெரமுன போக்குவரத்துச் சபை ஊழியர் சங்கம் பல ஏற்பாடுகளைக் மேற்கொண்டு வருகிறது.
இதற்கமைவாக வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி பஸ் டிப்போக்களில் பணியாற்றும் தமிழ் ஊழியர்களில், குறித்த தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் அனைவரும் இணைந்து அவர்களின் டிப்போக்களுக்கு அருகாமையில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு புத்தர் சிலைகளை அன்பளிப்பாக வழங்கவேண்டும் என பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த டிப்போக்கள் ஒவ்வொன்றிலும் பணியாற்றும் ஊழியர்களில் வட மாகாண பொதுஜன பெரமுன போக்குவரத்துச் சபை ஊழியர் சங்கத்தில் அங்கத்தவர்களாக உள்ள அனைவரும் 50 ஆயிரம் ரூபா பணத்தினை திரட்டவேண்டும் எனவும், குறித்த பணத்தொகையில் புதிய புத்தர் சிலைகளைக் கொள்வனவு செய்து அருகில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு அன்பளிப்பாக வழங்க வேண்டும் எனவும் குறித்த தொழிற் சங்கத்தினால் பணிக்கப்பட் டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மத்திய போக்குவரத்துச் சபையின் தலைவரினால் இது தொடர்பான உரிய உத்தரவுகள், வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் பிரதம பிராந்திய முகாமையாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய போக்குவரத்துச் சபையின் உத்தரவிற்கு இணங்க பொதுஜன பெரமுன தொழிற்சங்கத்தில் உறுப்புரிமை பெற்றுள்ள வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் அனைவரும் தமது சொந்த நிதியில் புதிய புத்தர் சிலைகளை பௌத்த விகாரைகளுக்கு வழங்கவேண்டும் என வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் பிரதம பிராந்திய முகாமையாளரும், கடிதங்கள் மூலம் போக்குவரத்துச் சபை ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் பிரதம பிராந்திய முகாமையாளர் இது தொடர்பாக யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பஸ் டிப்போக்களின் முகாமையாளர்களுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.