பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்தவர் மதன்.. இந்த பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி நிறைய பண மோசடிகளிலும் ஈடுபட்டு வந்தார்.. இதையடுத்து, குண்டர் சட்டத்தில் மதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீனில் வெளியே வந்த அவனது மனைவி கிருத்திகா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை அபிராமபுரம் ஆக்ஸிஸ் வங்கி கிளையில் உள்ள தனது கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால், வங்கிக் கணக்கில் உள்ள மூன்றரை கோடி ரூபாய் பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் தரப்பில் கூறும் போது, ஊரடங்கு காலத்தில் ஏழை எளியோருக்கு உதவி செய்வதாகக் கூறி 2,848 நபர்களிடம் இருந்து 2 கோடியே 89 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று அந்த பணத்தை அபிராமபுரம் ஆக்ஸிஸ் வங்கிக் கிளையில் உள்ள கிருத்திகாவின் வங்கி கணக்கிற்கு மாற்றிய மதன், அந்த பணத்தை தங்களது சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தி வந்ததையும், பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
வங்கிக் கணக்கில் உள்ளது மோசடிப் பணம் என்பதால், அதனை ஏமாந்தவர்களிடம் திருப்பிக் கொடுப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், எனவே இந்த பணத்தை மதனின் மனைவியிடம் திருப்பி கொடுக்கக் கூடாது என்றும் காவல் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. யூ ட்யூப் மூலம் அவர்களுக்கு கிடைத்த வருவாய் 31 லட்சம் ரூபாய் மட்டுமே எனவும், மீதமுள்ள தொகை மோசடிப் பணம் எனவும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பப்ஜி மதனின் மோசடி குறித்த ஆதாரங்களை வருகிற 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்றாட செலவுகளுக்கு அல்லல்படுவது போல நடித்து மோசடி பணத்தை திரும்பப் பெற்று விட மதனின் மனைவி பகீரதப் பிரயத்தனங்கள் செய்து வரும் நிலையில், போலீசார் அந்த பணத்தை ஏமாந்தவர்களுக்கு திருப்பி கொடுப்பதில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.