(மன்னார் நிருபர்)
(8-9-2021)
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கின்ற வர்களின் சடலங்களை வவுனியாவிற்கு கொண்டு சென்று தகனம் செய்வதில் பல்வேறு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அண்மைக் காலமாக மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தற்போது வவுனியாவிற்கு சடலங்களைக் கொண்டு சென்று தகனம் செய்வதில் தடங்கல்கள் ஏற்பட்டு வந்துள்ளது.
வவுனியாவில் உள்ள மின் தகன நிலையத்தில் அடிக்கடி ஏற்பட்டு வந்த கோளாறுகள் காரணமாகவும் அங்கே அதிகமான சடலங்கள் சேர்ந்து இருக்கின்ற காரணத்தினாலும் சடலங்களை அங்கு மின் தகனம் செய்வதில் தடங்கள் ஏற்பட்டு வந்திருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை இரண்டு பெண்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் இன்றைய தினம் வவுனியாவில் உள்ள மின் தகன நிலையத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் வவுனியாவில் அமைந்துள்ள மின் தகன நிலையத்தில் ஏற்கனவே 12 சடலங்கள் தகனம் செய்வதாக வைக்கப்பட்டிருப்பதாகவும்,மன்னாரில் இருந்து கொண்டு வரும் சடலகளை தகனம் செய்வது சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மற்றும் இன்று புதன் கிழமை உயிரிழந்த இருவரது சடலங்கள் தகனம் செய்ய முடியாத நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களை தொடர்புகொண்டு வினவிய போது..
மன்னார் மாவட்டத்தில் இறுதியாக நேற்றும் இன்றும் உயிரிழந்த இரண்டு பெண்களுடைய சடலங்களை வவுனியாவில் உள்ள மின் தகன நிலையத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் அங்கு ஏற்கனவே 12 சடலங்கள் தகனம் செய்வதற்காக வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் குறித்த இரண்டு சடலங்களும் வவுனியாவிற்கு கொண்டு சென்று தகனம் செய்ய முடியாத நிலையில் தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.