பிரகாஸ் – கடந்த வாரம் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பலரையும் உணர்வெழுச்சி கொள்ளச் செய்த பெயர். பிரகாஸ் ஞானப்பிரகாசம் – அவர் ஓர் ஊடகவியலாளர். சுயாதீன ஊடகவியலாளர். ஆனால் அவர் செய்தியாகிப் போனமையால் ஊடகங்களில் இடம் பிடித்து முக்கியத்துவம் பெற்றிருந்தார்.
ஊடகவியலாளர்கள் செய்திகளை தேடித் தெளிந்து வெளியிடுவார்கள். ஆனால் அவர்கள் தாங்களே செய்தியாக விரும்புவதில்லை. அந்தத் துரதிஸ்டம் பிரகாஸுக்கு நேர்ந்துவிட்டது. அந்தத் துயரம் ஊடகத்துறையை குறி;ப்பாக தமிழ் ஊடகத்துறையின் மனதைக் கீறி சோகமடையச் செய்து விட்டது.
பிரகாஸ் ஓர் இளைஞன். முகநூலின் ஊடாக தன்னெழுச்சி பெற்று ஊடகவியலாளனாக உயர்ந்த இளம் தலைமுறையைச் சேர்ந்த கடும் உழைப்பாளி. தன்னெழுச்சி பெற்ற பலர் ஊடகவியலாளர்களாகி இருக்கின்றார்கள். இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால் பிரகாஸின் தன்னெழுச்சியும் வளர்ச்சியும் வித்தியாசமானது. அபூர்வமானது.
ஏனெனில் அவர் ஒரு மாற்றுத்திறனாளி. தசைத்திறன் குறைபாடுடைய (Muscular dystrophy) நிரந்தர நோயாளி. இயற்கை அவரை சக்கர நாற்காலியில் முடக்கியிருந்தது. சக்கர நாற்காலியே தஞ்சம் என்றிருந்த அவரால் சுயமாக நடமாடித் திரிய முடியாத நிலை. அந்த நிலையிலும் அவர் ஓர் ஊடகவியலாளராகி வளர்ந்து உயர்ந்திருக்கின்றார் என்றால், அதனை எவ்வாறு சாதாரண விடயமாகக் கருத முடியும்?
முகநூலே அவருடைய ஊடகவியலுக்கான தளம். அடித்தளம். முகநூல் குறித்தும் அது சார்ந்த சமூக வலைத்தளம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. முகநூல் என்பது வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்ற கருத்து நிலைப்பாடும் இருக்கத்தான் செய்கின்றது. இருப்பினும் அந்த முகநூலின் ஊடாக ஊடகத்துறையில் உச்சத்தை நோக்கிய அவரது பயணம் துணிகரமானது. செயல் வல்லமை மிக்கது. பலருக்கு முன்னுதாரணமானது.
தனது முகநூல் பக்கத்தில் செய்திகளை தானே தரவேற்றி, அதன் மூலம் கிடைத்த வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு, பிரகாஸ் தன்னைத்தானே ஊடகவியலாளனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். முகநூலில் அநேகமாக அனைவருமே செய்திகளைத் தரவேற்றுகின்றார்கள். ஆனால் எவரும் தன்னைத்தானே ஊடகவியலாளன் என பிரகடனப்படுத்திக் கொண்டு ஆளுமை மிக்கதோர் ஊடகவியலாளனாக வளர்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை. அதனை அவர் சாதித்திருக்கின்றார்.
பிரகாஸ் 26 வயதிலேயே விண்ணுலகேந்தி விட்டார். துடிப்பும் செயற் திறனும், தேடல்கள் மிகுந்த அவரது விடாமுயற்சியும் இன்னும் பல வருடங்களுக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்திருந்தால் நிச்சயமாக அவர் பல சாதனைகளை நிகழ்த்தி இருப்பார். இளம் பருவத்திலேயே அவருடைய வாழ்க்கை முடிவுக்கு வந்ததென்பது தமிழ் ஊடகத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றே கூற வேண்டும்.
கொரோனாவுக்குப் பலியாகிப்போன சோகம்
ஐந்தாம் வகுப்பு வரையிலுமே கல்வி கற்றிருந்த போதிலும் கணிணி தொடர்பான ஆரம்பக் கல்வியை அவர் கற்றிருந்தார். அதுவே அவரை வாழ்க்கையில் உயர்ந்து மேலோங்கச் செய்தது. தனது சகோதரனைப் பார்த்து புகைப்பட வடிவமைப்பை முதலில் கற்றுக்கொண்ட பிரகாஸ் வெளிநாடு சென்றிருந்த மற்றுமொரு சகோதரனுடன் உரையாடுவதற்கு ஸ்கைப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார். அந்தச் சந்தர்ப்பத்திலேயே சகோதரனின் நண்பர் ஒருவர் பிரகாஸுக்கு முகநூல் கணக்கொன்றைத் திறந்து கொடுத்தார். அதுவே ஊடகத்துறையில் அவர் காலடி எடுத்து வைத்துப் பயணத்திற்கான பிள்ளையார் சுழியாக அமைந்துவிட்டது.
முதலில்; முகநூலின் பயன்பாடு தெரியாத நிலையில் தடுமாறிய பின் அதனையும் கற்று இணையத்தில் வெளிவந்த செய்திகளைத் தனது முகநூலில் தரவேற்றத் தொடங்கினார். அதுபற்றி அவரே பின்வருமாறு கூறுகின்றார்.
‘பின்னாட்களில், அதுவே பயனுள்ளதாக தெரிந்தது. அவ்வாறு செய்திகளை படிப்பதில் பலருக்கும் ஆர்வம் இருந்தது. எனவே, அதனையே முழுமையாக செய்ய ஆரம்பித்தேன். பலரும், என்னை செய்தியாளராக நோக்கினார்கள். அதன்மூலம், என்னை நானாக ஊடகவியலாளன் என்று முகநூலில் அடையாளப்படுத்திக் கொண்டேன். அவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்ட பின்னர் அதனை முழுமையாக நிரூபித்துக்காட்ட வேண்டிய ஆர்வமும் கட்டாயமும் ஏற்பட்டதால் ஊடகவியல் திறமையை முகநூலில் அறிமுகமாகிய ஏனைய ஊடகவியலாளர்களை பார்த்து வளர்த்துக் கொண்டேன்.’
பிரகாஸ் எனும் நான் என்ற தலைப்பில் தன்னைப் பற்றிய முழுமையான அறிமுகமாக முகநூலில் மூன்று பாகங்களாக தொடர் ஒன்றை அவர் எழுதியிருந்தார். சிறுவனதாக இருந்தபோதே தசைத்திறன் நோயினால் பாதிக்கப்பட்டு எவ்வாறு தனது வாழ்க்கை திசைமாறிப்போனது, எத்தகைய துன்பங்களையும் கஸ்டங்களையும் அனுபவிக்க நேர்ந்தது என்பதை அந்த முகநூல் பதிவில் அவர் விபரித்திருந்தார்.
அவருடைய முகநூலில் அந்தத் தொடரைத் தொடர்ந்து படித்தவர்களும் முகநூல் நண்பர்களும் அதனையே ஒரு சுயசரிதையாக புத்தக வடிவில் எழுதுமாறு ஆலோசனை கூறினர். சிலர் அதனை ஒரு வேண்டுகோளாகவே அவரிடம் முன்வைத்திருந்தனர். தன்னைப்பற்றியும் தனது வாழ்க்கையைப் பற்றியும் உலகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பியிருந்த அவருக்கு இந்த ஆலோசனையும் வேண்டுகோளும் உற்சாகமளித்தது. தொடர்ந்து பிரகாஸ் என்ற நான் என்ற தலைப்பில் தனது சுயசரிதையை ஒரு புத்தக வடிவில் எழுதி முடித்தார்.
அதனை ஒரு நூலாக வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில் அவர் மூழ்கியிருந்தார். ஆயினும் கொவிட் 10 என்ற கொரோனா பேரரக்கனின் தாண்டவமும், அதனால் ஏற்பட்ட நாட்டு, சமூக முடக்கத்தினாலும் அதனை அவரால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. அத்துடன் கொரோனா பேரிடருக்கு அவரே பலியாகிப் போன சோகமும் நடந்தேறிவிட்டது.
மலையகமே கட்டுரை எழுதும் ஆர்வத்தைத் தந்தது
இணைய தளங்களில் வந்த செய்திகளை எடுத்து தனது முகநூலில் பதிவேற்றியதன் மூலம் ஒரு தொகை முகநூல் வாசகர்களின் வாசிப்பு ஆதரவைப் பெற்றிருந்த பிரகாஸ் தன்னை ஒரு ஊடகவியலாளனாகத் துணிந்து பிரகடனம் செய்து கொண்டார். அத்துடன் நின்றுவிடவில்லை. ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்குதையும். கட்டுரைகள் எழுதுவதையும் முழுநேர பணியாக மாற்றிக் கொண்டார்.
இது சாதாரண விடயமல்ல. அதற்கு அசாத்திய துணிவும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும் அவசியம். இந்த இரண்டும் தசைத்திறன் குறைபாட்டு நோய்க்கு மத்தியிலும் அவரிடம் தாராளமாகவே இருந்தது. இவருடைய பதிவுகளையும் எழுத்துக்களையும் கண்ட ஊடகங்கள் இவரது எழுத்துக்களுக்கு களம் அமைத்து ஊக்குவித்தன.
செய்திகளை வெறும் செய்திகளாக அல்லாமல் மேலும் விபரங்களைத் தேடி அவற்றை முழுமையாக வடிவமைப்பதிலும் கட்டுரைகளாக வரைவதிலும் அவர் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். செய்திகள் மட்டுமல்லாமல், கட்டுரைகளும் தன்னை ஊடகவியலாளனாக வளர்த்துவிடுவதில் முக்கிய பங்கு வகித்தன. கட்டுரை எழுதுவதற்குத் தூண்டுகோலாக மலையகமே அமைந்திருந்தது.
‘கட்டுரை எழுதும் ஆர்வத்தை எனக்குள் விதைத்தது மலையகம் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்’ என்று அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றார்.
‘ஏனெனில் மலையக மக்களின் பிரச்சினைகளை ஊடகங்களிலும் முகநூல் நண்பர்கள் மூலமும் அறிந்தபோது என்னையும் அறியாமல் அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற ஓர் அவா எனக்குள் ஏற்பட்டது. மலையக மக்களின் பிச்சினைகளுக்காக வடக்கு கிழக்கில் பெரிதாகக் குரல் எழும்புவதில்லை என்பதுகூட அதற்கு காரணமாக இருக்கலாம். எனவே, மலையக மக்களின் பிரச்சினைகளை செய்தியாக எழுதுவது மட்டுமல்லாது, கனது கருத்தையும் முன்வைத்து அவற்றை கட்டுரையாக முகநூலில் எழுத ஆரம்பித்தேன். அந்த முயற்சிதான் எனக்குக் கட்டுரை எழுதும் திறமையை வளர்த்துவிட்டது’ என பிரகாஸ் விபரித்திருக்கின்றார்.
பலருக்குப் பொழுதுபோக்குவதற்கும், சிலருக்கு வேறு பல வழிகளில் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதற்கும், இன்னும் ஒரு சாராருடைய பொன்னான நேரத்தை மண்ணாக்குவதற்கும் வழி சமைத்துள்ள முகநூல் பிரகாஸுக்கு பிரகாசமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது. ‘இவை அனைத்திற்கும் முக்கிய அடித்தளமாக அமைந்திருப்பது இவ் முகநூல்தான். அதற்காக மார்க் ஜுகர்பேர்க்கிற்கு நன்றி கூற வேண்டும்’ என்று அது பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார்.
காதல் கொள்ளும் சந்தர்ப்பங்களும் அமைந்திருந்தன
அவருடைய அந்த முகநூல் அனுபவம் அலாதியானது. தசைத்திறன் குறைபாட்டு நோயினால் அவர் அனுபவித்த கஸ்டங்களும் துன்பங்களும் அளப்பரியன. அதில் இருந்து விடுபடுவதற்கும் ஆறுதல் பெறுவதற்கும் முகநூலே பேராதரவாக அமைந்திருந்தது.
‘எனது வலிகளை மற்கும் உலகமாக முகநூலே காணப்படுகின்றது. என்னை விரும்பும் நண்பர்களும் நண்பிகளும் முகநூலில் கிடைத்தனர். அதற்குமேலாக, இதுலை காதல் மற்றும் ஒரு தலைக் காதல் என்று இரண்டு காதலை செய்யும் வாய்ப்பும் அமைந்திருந்தது. அதில் ஏமாற்றங்கள் கிடைத்த போதிலும் காதல் அனுபவம் எனக்குக் கிடைத்ததில் பெருமிதம் அடைகிறேன்’ என அவர் தன்னிறைவு கொண்டு வெளிப்படுத்தியுள்ளார்.
பெரிய அளவில் வெளி நடமாட்டமின்றி சக்கர நாற்காலியில் நான்கு சுவர்களுக்குள் முடங்கி இருந்தவாறு முகநூலின் ஊடாக வெளியுலகில் வலம் வந்த அவர், அது குறித்து பெருமையடையவும் தவறவில்லை.
‘என்னைப்பற்றி (ஓரளவு முழுமையாக) வெளிப்படுத்தும் வரையிலும் முகநூல் மூலமாக நண்பர்களாகிய பலரும் என்னை அதிகம் படித்தவன், ஊடகம் படித்த ஊடகவியலாளன் என்றுதான் எண்ணிக் கொண்டனர். எனினும் என்னை வெளிப்படுத்திய பின்னர் அனைவரும் ஆச்சரியமடைந்ததுடன் ஐந்தாம் ஆண்டு மட்டும் படித்தேன் என்பதை நம்பக்கூட மறுத்தனர். எதெப்படியோ, நான் படித்தது ஐந்தாம் ஆண்டு வரைதான் என்பதை இங்கும் வெளிப்படுத்தியிருக்கின்றேன். ஐந்தாம் ஆண்டு மட்டும் கல்வி கற்ற நான் ஊடகவியலாளனாக மாறியது அல்லது வளர்ந்ததையிட்டு பெருமையடைகிறேன்’ என்று அவர் விபரித்துள்ளார்.
எப்போதாவது உங்களது உடல் அங்கவீனம் குறித்து வருத்தப்பட்டிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் முக்கியமானது.
‘ஆம். மனதுக்குள் வருத்தப்பட்டிருக்கிறேன். வெளியில் காட்டிக்கொள்வதில்லை. அத்தகைய கவலை எப்போதும் என் மனதோரத்தில் இருக்கும். சகோதரர்கள் மூவர் இருந்தாலும், பெற்றோர் இல்லாத எதிர்காலத்தை நினைத்துப் பார்த்தால் அல்லது விரைவில் மரணித்துவிடுவேன் என்பதை நினைக்கும்போது கவலையுடன் இலேசாக கண்கள் நனைந்துவிடும்’ என்று அவர் திறந்த மனதுடன் தனது நிலையை வெளிப்படுத்தி இருந்தார்.
மித்திரன் வாரப்பத்திரிகைக்காக கவிஞரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாகிய கேஜி எனப்படும் ப.கனகேஸ்வரன் பிரகாஸை ஒரு நேர் காணல் செய்திருந்தார். பிரகாஸ் அளித்த ஒரேயொரு நேர்காணல் இது என்பதும், அந்த நேர்காணலைச் செய்தவர் மலையகம் பொகவந்தலாவைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரகாஸின் மறைவுக்குப் பின்னர் அவரை தான் மட்டுமே நேர்காணல் செய்திருந்ததை பெருமையுடனும், அதேவேளை அந்த இழப்புக்காக மனவருத்தத்துடனும் கேஜி கருத்துப் பகிர்வொன்றில் நினைவுகூர்ந்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் தமக்குள் இருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு, ஏதோவொரு வழியில், அவற்றில் சாதித்து முன்னேற வேண்டும் என்றும், ‘என்னைப் போல் தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்ட தம் பிள்ளைகளை, ‘கேள்விப்படும் வைத்தியர்களிடம் எல்லாம்’ கொண்டு திரிந்து, அல்லல்பட்டு, பிள்ளைகளையும் கஸ்டப்படுத்தாமல் அவர்களது திறமைகளை வளர்க்க பெற்றோர் முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளதன் மூலம் மாற்றுத்திறனாளி சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையும் கரிசனையும் வெளிப்பட்டிருக்கின்றது.
தமிழ் ஊடகத்துறையின் அழுத்தமான தடம்
சக்கர நாற்காலியில் வலம் வந்த பிரகாஸ் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் அவருடைய கவனம் சென்றிருந்தது. சத்திய ஆவேசம் கொண்டவராக மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதில் தீவிரமாக இருந்தார். குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் சம்பளப்பிரச்சினை குறித்து அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
அந்தப் பிரச்சினைக்காக வடக்கில் போதிய அளவில் அக்கறை செலுத்தப்படவில்லை என்ற கருத்தைக் கொண்டிருந்த அவர் எவர் மூலமாகவாவது அந்தப் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்க வேண்டும். போராட்டம் நடத்த வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருந்தார். அதற்கான சந்தர்ப்பமும் அவருக்குக் கிடைத்தது.
யாழ்நகரில் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்ட நிகழ்வில் சமூக வலைத்தளத்தின் ஊடாக மக்களை அணிதிரட்டுவதில் முன்னின்று செயற்பட்டிருந்தார். அத்துடன் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவராகவும் அவரை இணைத்திருந்தார்கள். இந்த நிலையில் தனது தந்தையாரின் உதவியுடன் அந்தப் போராட்டத்தில் அவர் நேரடியாகக் கலந்து கொண்டிருந்தார். அவ்வாறு பொது வெளியில் அவர் வந்திருந்த போதே அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் தெரியவந்தது.
அவர் தமிழ் மாத்திரமன்றி ஆங்கிலத்திலும் தனது அறிவை வளர்த்துக் கொண்டிருந்தார் டுவிட்டர் பதிவுகளை அவர் ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார். இறுதி நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த தகவலையும், அதற்கான தடுப்பூசி தனக்கு மறுக்கப்பட்டிருந்ததையும் அவர் அதன் ஊடாக வெளிப்படுத்தி பலருடைய கவனத்தையும் ஈர்த்;திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகம் மற்றும் சமூகப் பணிகளுக்காக அமரர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் நினைவு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தார். அவர் கௌரவம் பெற்றிருந்தார் என்பதைவிட இதனால் அந்த விருதுக்கே கௌரவம் கிடைத்தது என்றால் மிகையாகாது.
பல்வேறு தரத்திலான ஊடகவியலாளர்களுடனும் தொடர்புகளைக் கொண்டிருந்த பிரகாஸ் தனது சுயசரிதை நூல் ஆக்கத்தைப் பார்வையிட்டு செம்மைப்படுத்தித் தருமாறு என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டியிருந்தார். அவர் அனுப்பி இருந்த அந்தப் புத்தகப் பிரதியை ஒரே மூச்சில் வாசித்து முடித்தபோது பிரமிப்பு ஊட்டுவதாக அமைந்திருந்தது.
அவருடைய சுயசரிதை அவரைப்பற்றிய பல பக்கங்களை மிகத் துல்லியமாகக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. அவரது எழுத்து நடையும் மொழிப்பிரயோகமும் அவருடைய எழுத்தாற்றலைப் பறைசாற்றி இருக்கின்றது. கருத்து வெளிப்பாட்டுக்கான ஆற்றலும், சொற்சிக்கனமும் சொல்லாட்சியும் பிரகாஸினுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பிற்கு; அமைதியாகவும், ஆழமாகவும் பணிந்து வழி திறந்து விட்டிருக்கின்றன.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் தனது சுயசரிதை நூல் வெளிவரவேண்டும் என்ற ஆவலை அவர் கொண்டிருந்தார். அத்துடன் தனது நூல் வெளியீட்டில் மருத்துவம், உளவியல், ஊடகம், சமூகவியல் உள்ளிட்ட துறை தோய்ந்தவர்களும் மாற்;றுத்திறனாளிகளுக்கான செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதிலும் அவர் தீர்மானமாக இருந்தார். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்ததாக அவர் என்னிடம் கூறினார்.
ஆயினும் நோய்த்தாக்கம் காரணமாக எந்தவேளையிலும் வாழ்வின் இறுதிக்கணத்தை எட்டிவிடக் கூடும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அந்த உணர்வு என்னில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. கொரோனா தாக்கச் சூழலாக இருந்தபோதிலும் கூடிய விரைவில் புத்தகத்தை அச்சிட்டு அதனை வெளியிடுமாறு ஆலோசனை கூறியிருந்தேன்.
ஆனால் அவருடைய ஆசையும் விருப்பமும் நிறைவேறாத நிலையிலேயே அவர் இவ்வுலகைவிட்டுப் பிரிந்து சென்றுள்ளார். ஆனாலும் அவர் தமிழ் ஊடகத்துறையில் அழுத்தமான ஒரு தடத்தைப் பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளார். அந்தப் பதிவும் அவரைப்பற்றிய நினைவுகளும் எண்ணங்களும் காலம் பல கடந்தும் நிலைத்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.