(14-09-2021)
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பாலவி குவன்கம பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் உரிமம் பெற்ற இரண்டு துப்பாக்கிகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் புத்தளம் தலைமையகப் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, புத்தளம் பொலிஸ் குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போதே நேற்று (13) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிகள் காணாமல் போனதாக கூறப்படும் தனியார் தோட்டத்தின் காவலாளியாக கடமையாற்றி வந்த நபர் ஒரவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற தோட்டத்திற்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 துளை துப்பாக்கி, ஒரு ஏர் ரைபிள் துப்பாக்கி மற்றும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குற்றம் செய்யும் நோக்கில் அல்லது திருடி வேறு ஒருவருக்கு விற்கும் நோக்கில் இந்த துப்பாக்கிகள் திருடப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.