(19-09-2021)
இலங்கையில் அதிவேக பாதையில் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் பணியாற்றிய காசாளர் ஒருவர் 14 இலட்சம் ரூபாய் பணத்தோடு மாயமாக மறைந்தார். இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, அதிவேக பாதையின் களனிகம இடைமாறல் அலுவலகத்தின் பொறுப்பிலுள்ள இரு பெட்டகங்களிலிருந்த சுமார் 14 இலட்சம் ரூபாவுடன்மேற்பா மாயமான காசாளர் பொலிஸாரால் சில மணிநேரங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
பண்டாரவளை பகுதியில் வைத்து, பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் குழுவினர் அவரைக் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி, களனிகம இடைமாறல் அலுவலகத்தின் 14 இலட்சத்து 18 ஆயிரத்து 500 ரூபாவுடன் குறித்த பணத்துக்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதான காசாளர் மாயமாகியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், திருடப்பட்ட பணத்தில் 3 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த காசாளர் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் சிறிது சிறிதாக பெட்டகத்திலிருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
விசாரணைகளுக்கு பொறுப்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் தகவல்கள் பிரகாரம், கைது செய்யும்போது சந்தேக நபரிடம் 5 ஆயிரம் ரூபா மட்டுமே இருந்ததாக கூறினார்.
திருடிய பணத்தில் 5 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவை சந்தேக நபர் தனது தனிப்பட்ட கடன்களை மீள செலுத்த பயன்படுத்தி உள்ளதாகவும், அவ்வாறு கடன் மீள செலுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இரு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களும் அடங்குவதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் கடன் மீள செலுத்தப்பட்டவர்களிடம் இருந்து பொலிஸார் ஒரு தொகை பணத்தை மீட்டுள்ளனர். எஞ்சிய பணத் தொகையை சூது விளையாடியதாக சந்தேக நபர் பொலிஸாருக்கு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக் தனது கடமை நேரம் தொடர்பில் கடமைக்கு வந்துள்ள காசாளர் ஒருவர், நிலுவையில் உள்ள பணத் தொகையை சரி பார்த்த போது அதில் 14 இலட்சத்து 18 ஆயிரத்து 500 ரூபா குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளார். இந் நிலையில் அவர் அது தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இந் நிலையிலேயே அதிகாரிகலின் அறிவுறுத்தல் பிரகாரம் பிரதான பொறியியலாளர் ஒருவர் இது தொடர்பில் பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில், உள்ளக ஆய்வின்போது, காசாளர்களின் பெட்டகத்திலிருந்தும், அன்றாட வருமானத்தை வைக்கும் பெட்டகத்திலிருந்தும் பணம் திருடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்தே பண்டாரகம பொலிஸாரும் பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவினரும் சந்தேக நபரைக் கைது செய்ய விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.