10 வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு தாக்கல்
(மன்னார் நிருபர்)
(21-09-2021)
மன்னார் நகர பகுதி மக்களால் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மன்னார் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சீமெந்து பதுக்கல் உட்பட பொருட்களை அதிக விலைக்கு விற்றமை, காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியது ,உட்பட பல குற்றச்சாட்டில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நிலையை பயன்படுத்தி மன்னார் நகர பகுதிகளில் குறிப்பாக சாந்திபுரம், தாராபுரம், தலைமன்னார் பிரதான வீதி பகுதிகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட வர்த்த நிலையங்கள் மற்றும் காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை, மற்றும் பொருட்களை பதுக்கியமை உட்பட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மீது இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட பாவனையாளர் அபிவிருத்தி அதிகார சபையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதே நேரம் மன்னார் தலைமன்னார் பிரதான வீதி பெரியகமம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு அருகாமையில் உரிய அனுமதி பத்திரமின்றி சீமெந்து பதுக்கி வைக்கப்பட்ட களஞ்சிய சாலைக்கும் பாவனையாளர் அபிவிருத்தி அதிகார சபையினர் சீல் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.