(03-10-2021)
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு எதிர்வரும் 2022ம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியியுள்ளது.
சிறந்த நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான செயற்குழுவின் 5வது கூட்டம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருந்தது.
கொழும்பில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
இச்சந்திப்பின்போது சிறந்த நிர்வாகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை உறுதிப்படுத்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்பன தொடர்பில் இருதரப்பினரும் தாம் கொண்டிருக்கின்ற கடப்பாட்டை மீளுறுதிப்படுத்தினர்.
அத்தோடு அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இருதரப்பினரும் கொண்டிக்கும் அக்கறை தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் இருதரப்பினதும் பொதுவான அக்கறைக்குரிய விடயங்களில் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.
மேலும் கொவிட் – 19 வைரஸ் பரவலைக் கையாளும் விவகாரம் தொடர்பில் இருதரப்பினரும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
அத்தோடு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு சமத்துவமான முறையில் தடுப்பூசி கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொவெக்ஸ் செயற்திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுவரும் பங்களிப்பையும் இலங்கையின் பிரதிநிதிகள் பாராட்டினர்.
அதேவேளை நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் ஊடாக சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான ஒன்றிணைவை ஏற்படுவதன் அவசியம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை, அதிகாரப்பரவலாக்கம் மற்றும் சுயாதீன கட்டமைப்புக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
சுயாதீன கட்டமைப்புக்கள் செயற்திறனாக இயங்கவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இருதரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது.
அடுத்ததாக இருதரப்பினரும் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றல் மற்றும் அவை சுதந்திரமாகச் செயற்படுவதற்கு அனுமதித்தல் ஆகியவற்றின் அவசியத்தை ஏற்றுக்கொண்டதுடன் இவ்விடயத்தில் இலங்கைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
சிறுபான்மையின சமூகங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் வெறுப்புணர்வுப்பேச்சுக்களைக் கையாள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்தும் விடயத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துக்கூறிய இலங்கையின் பிரதிநிதிகள், அச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைப்பதில் இலங்கை கொண்டிருக்கும் உறுதிப்பாட்டையும் எடுத்துரைத்தனர்.
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சிறந்த நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான செயற்குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் இவ்விடயத்தில் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உறுதிப்பாடும் எட்டப்பட்டது.
அத்தோடு மரணதண்டனை குறித்து தமது எதிர்ப்பை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், இலங்கை அதனை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதைத் தாம் ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.