– காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விசனம்.
(மன்னார் நிருபர்)
(13-10-2021)
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் கடந்த 12 வருடங்களாக தொடர்ச்சியாக சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் குறித்த மக்களுக்கு நீதியை இது வரையில் இலங்கை அரசாங்கம் தரவில்லை. என மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இணையத்தில் இன்றைய தினம் (13) புதன் கிழமை காலை ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,,,,
சர்வதேசத்தின் அழுத்தத்தின் மத்தியில் நிலைமாறு கால நீதி என்ற வகையில் உருவாக்கப்பட்ட காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகமானது 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க தற்காலிக ஏற்பாட்டின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது.
குறித்த சான்றிதழ் தொடர்பாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவிய போதும் குறித்த உறவுகள் தங்களது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெயர்கள் அரச கட்டமைப்புக்களில் காணாமல் ஆக்கப் பட்டுள்ளார்கள் என்ற அடிப்படையில் இடம் பெற வேண்டும் என கருதி சில பாதிக்கப்பட்ட மக்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ள நிலையில் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் காணாமல் ஆக்கப்பட்டமை கான சான்றிதழினைப் பெற்றுக் கொள்ள உடன்பட்டு இருந்தார்கள் .
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பதற்கு முக்கிய ஆவணங்களான தேசிய அடையாள அட்டை பிரதி, பிறப்புச் சான்றிதழ், திருமண பதிவு பத்திர பிரதி, ஆணைக்குழுக்களின் எழுத்து மூலமான கடிதம், பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு அல்லது இடைக்கால அறிக்கை, சத்தியக்கடதாசி மற்றும் ஊடக செய்திகள் ஆகிய ஆவணங்கள் தேவைப்பாடுகளாக கோரப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் தேடிப் பெற்றுக் கொள்வதற்கு குறித்த எமது உறவுகளுக்கு இரண்டு தொடக்கம் மூன்று மாதங்கள் ஆகிவிடுகின்றன.
இவ்வாறு பதிவு செய்த சான்றிதழ்களை பெற்றுக் கொண்டாலும் அச் சான்றிதழினைப் பயன்படுத்தி காணாமல் ஆக்கப்பட்ட நபருக்கு உரித்தான சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அல்லது காப்புறுதிப் பணத்தை பெற்றுக் கொள்வதற்கோ குறித்த அரச திணைக்களங்கள் குறித்த சான்றிதழை ஏற்றுக் கொள்ளவில்லை.
குறிப்பாக, காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழில் ‘ஏதேனும் சமூக சேமநல திட்டத்தின் கீழ் நன்மைகளுக்காக விண்ணப்பிக்கும் போது காணாமற்போன ஆளினதும் அத்தகைய மரணச்சொத்தினதும் சார்பில் நிறைவேற்று நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் முன்னால் முறையீடுகளை செய்யும் போதும் காணாமற்போன ஆளின் நிலைமைக்கான எண்பிப்பாக காணப்பட்டமைக்கான சான்றிதழை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும்படி எல்லா நிறுவனங்களையும் அதிகாரங்கொண்ட ஆட்களையும் 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புக்களினதும் காணாமற்போன ஆட்களினதும் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 8ஒ(2) ஆம் பிரிவு தேவைப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டிருந்தும் இறப்புச் சான்றிதழ்களையே கோருகின்றனர்.
அவ்வாறாயின் இவ் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படுகின்ற சான்றிதழ்களின் பயன்பாடு என்ன? அதனால் எந்தவொரு பயன்பாடும் இல்லை என்ற உண்மை நிலையை குறித்த உறவுகள் உணர்ந்துள்ளனர்.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தங்களது பிள்ளைகள் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் அமைந்துள்ள காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தில் சகல ஆவணங்களும் வழங்கப்பட்டு பதிவு செய்த போதும் மீண்டும் கொழும்பு தலைமை அலுவலகத்தின் தரவு முகாமைத்துவ தலைவர் கையொப்பமிட்டு மேலதிக விபரங்கள் தேவை என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாவட்ட காரியாலயங்களில் அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்ட போதும் மீண்டும் அந்த ஆவணங்களை கோருவதானது இன்னும் பல காலங்களை கடத்தும் செயற்பாடுகளாகவே அமைகிறது. ஏற்கனவே முதற்கட்ட பதிவிற்காக காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் முழுமையான ஆவணங்களை வழங்கியுள்ளனர்.
அது போல காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழை பெறுவதற்காக பிரதேச செயலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் பிரிவிற்கும் குறித்த ஆவணங்கள் வழங்கப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட ஆவணங்களின் பிரதிகள் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்திற்கும் வழங்கப்படுமாயின் குறித்த செயற்பாடு வினைத்திறனாக அமையும்.
முதல் முறையாக காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய பதிவுகளை மேற்கொள்ள வருகின்றபோதே தங்களிற்கு தேவையான சகல ஆவணங்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகமானது பாதிக்கப்பட்ட மக்களிடம் கோருமாகயிருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீண்டும் அரச திணைக்களங்களிற்கு அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை.
காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழை மீளப்புதுப்பித்தல் செயற்பாட்டிற்காக அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மீளப்புதுப்பித்தல் விண்ணப்பப்படிவத்தை பாதிக்கப்பட்ட மக்கள் விண்ணப்பிப்பதற்காக வழங்கப்படாமை என்பது மிகப் பெரிய குறைபாடாக காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்திலும் பிரதேச செயலகங்களிலும் காணப்படுகின்றது.
குறிப்பாக பிறப்பு, இறப்பு பதிவேடுகளைத் தேடுவதற்கான விண்ணப்பப்படிவம், விவாக பதிவேடுகளைத் தேடுவதற்கான விண்ணப்பப்படிவங்கள் போன்றன அரசாங்கத்தினால் பிரதேச செயலகத்தில் அங்கிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ்களை மீளப்புதுப்பித்துப் பெற்றுக் கொள்வதற்கு அதற்கு உரித்தான காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ்களை மீளப்புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவம் பிரதேச செயலகத்தில் இற்றை வரை அமுலில் இல்லை.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ்களை மீளப்புதுப்பிப்பதற்கு மக்கள் வரும் போது மீளப்புதுப்பித்தல் வேண்டுகோள்; கடிதத்தினை குறித்த உறவுகள் பிரதேச செயலகத்தில் கையளிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் இக் குறித்த நடை முறைச் செயற்பாடு பற்றி மக்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.
இவ்வாறு தொடர்ந்தும் ஆவணங்களை சேகரிப்பது சரிபார்க்கும் செயற்பாடுகள் என்பவற்றை மேற்கொள்ள வேண்டுமானால் இன்னும் 10 வருடங்களுக்கு மேலாக தகவல் திரட்டல் மற்றும் ஆவணப்படுத்தல் செயற்பாடு மட்டுமே பூர்த்தியாக்கப்படும். பிரதேச செயலகத்திற்கும் ஜனாதிபதி ஆனைக்குழுவுக்கும் வழங்கப்பட்ட தரவுகளை மக்களின் நலன் கருதி பகிரப்படுமானால் இவ் அலுவலகம் வினைத்திறனாக இயங்குவதற்கு வாய்ப்பாக அமையும்.
அவ்வாறு இல்லாமல் தொடர்ந்தும் இவ்வாறான காலம் தாழ்த்தல்கள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் தங்கள் பிள்ளைகளுக்கான நீதி கிடைக்காமலே தமது உயிர்களை இழந்து வருகின்ற நிலையில் தாமதமாகிய நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனாகும் என்ற தோற்றப்பாட்டையே உருவாக்கும்.
தற்போதைய அரசாங்கமானது மிகவும் மந்த கதியில் நடைபெறும் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தின் செயற்பாட்டினை மிகவும் காத்திரமான செயற்பாடாக உருமாற்றி சர்வதேசத்திடம் அறிக்கைகளை முன்வைத்து பூசி மெழுகும் செயற்பாட்டை செய்து வரும் நிலையில் இயங்கி வருகின்றமை வருத்தத்திற்குரிய செயற்பாடாக அமைகின்றது.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களால் இனங்காணப்பட்ட குறைபாடுகளை அரசின் மேன்மை தாங்கிய கவனத்திற்கு கொண்டுவருவதோடு, மேலும் மேலும் காலதாமதம் ஏற்படுத்தாது சட்ட ஏற்பாடுகளை முற்று முழுதாக உள்ளடக்கிய வினைத்திறனான ஓ.எம்.பி அலுவலகத்தினையும் அதன் சேவையினையும் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.என அவர்கள் தெரிவித்தனர்.
-குறித்த ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இணையத்தின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.திலீபன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.