(மன்னார் நிருபர்)
(27-10-2021)
நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன்,20 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட மன்னார் நகர அபிவிருத்தி செயற்திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாட்டில் நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் காணப்படும் 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய பிரதான நகரங்கள் மற்றும் பிரதேச நகரங்களுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வுகளை குறைத்து அனைத்து மக்களுக்கும் சமமான ஒரு நகர வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கோடு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி கரையோர பாதுகாப்பு, கழிவுப் பொருட்கள் அகற்றுகை, சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சுடன் இணைந்து குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மன்னார் நகரசபையின் உதவியுடன் 20 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் மன்னார் நகர அபிவிருத்தி செயற்திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஏ.ஸ்ரான்லி டி மெல், மன்னார் பிரதேசச் செயலாளர் .எம். பிரதீப், நகர அபிவிருத்தி செயற்திட்ட மாகாண பணிப்பாளர் டி.பி.எஸ். திஸநாயக்க, மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன் உட்பட பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.