சொந்த காணி, வீடு இன்றி தவிக்கும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ‘கருங்காலி மோட்டை’ கிராம மக்கள்
( மன்னார் நிருபர்)
(28-10-2021)
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போர் முடிவடைந்து 12 வருடங்களை கடந்து செல்கின்ற நிலையில் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே செல்கிறது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ‘கருங்காலி மோட்டை’ என்ற கிராம மக்களின் அவலம் தொடர்ந்து கொண்டே செல்கிறது.
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பிரிவுக்குட்பட்ட குறித்த கிராமத்தில் வசிக்கும் பல குடும்பங்களுக்கு சொந்தமான காணி மற்றும் வீடுகள் இல்லாத நிலையில் அவர்கள் உறவினர்கள் வீடுகளில் வசித்து வருகிறார்கள்.
இதனால் உரிய தொழில் வருமானம் இன்மையாலும் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளாலும் குறித்த கிராமத்தில் சுமார் 10 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘கருங்காலி மோட்டை’ கிராம மக்களின் கருத்து.
-நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போரினால் அதிகமாக பாதிக்கப்பட்டு தடுப்பு முகாமில் இருந்து வந்து திருமணமான குடும்பங்கள் கைக் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் ,கர்ப்பிணி பெண்கள், பெண் தலைமைத்துவ குடும்பம் போன்றவர்கள் அடங்குகிறார்கள்.
அவர்களது வீடுகளுக்கு அருகாமையிலேயே 12 ஏக்கருக்கும் அதிகமான அரச காணிகள் இருந்த போதும் அவற்றை தனி நபர்கள் அடாத்தாக பிடித்து வேலி அடைத்து உள்ளார்கள்.
இதனால் அப்பகுதியில் வாழும் குடும்பங்கள் தொழில் வருமானம் இல்லாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாமல் திண்டாடி வருகிறார்கள்.
கருங்காலி மோட்டை கிராம பகுதியில் 18 குடும்பங்களுக்கு மேல் வசித்து வந்தாலும் 9 குடும்பங்களுக்கு மேல் வீடு காணிகள் இல்லாதவர்கள், அன்றாடம் கூலி வேலைகள் செய்து வாழ்க்கை நடத்தும் எமக்கு சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு சிறு துண்டு அரச காணிகள் கூட இல்லை என அந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சுய தொழில்களான ஆடு , மாடு , கோழி வளர்ப்பு மற்றும் தோட்டச் செய்கையினை மேற்கொண்டு ஏழை மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் கூறி வருகின்ற இந்த நேரத்தில் தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கு எமக்கு போதுமான காணி வசதிகள் இல்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எமக்காக அரசாங்கம் தந்த காணியில் வீடு மற்றும் மலசல கூடம் அமைப்பதற்கு மாத்திரமே போதுமாக உள்ள நிலையில் நாங்கள் எவ்வாறு சுய தொழில்களை மேற்கொள்வது என்றும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
தமது வீடுகளுக்கு முன்பு 12 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை தனி நபர்கள் ஆக்கிரமித்து வேலி அடைத்து காடுகள் வளர விட்டுள்ளனர். இது அரச காணி என்பதற்கு அனைத்து ஆதாரங்களும் பிரதேச செயலகத்தில் இருக்கிறது. இவர்கள் பணபலம் படைத்தவர்கள் என்பதால் யாரும் கேள்வி கேட்பது இல்லை என தெரிவிக்கின்றனர்.
பாதை பிரச்சனை.
எமது வீடுகளுக்கு முன்னால் உள்ள பெறுமதிமிக்க அரச காணிகளை ஆக்கிரமித்து உள்ளவர்கள் போட்டி போட்டு வேலி அடைத்து உள்ளமையினால் எமது பயணத்திற்கு சிறு ஒற்றையடிப் பாதை மட்டுமே விட்டுள்ளார்கள் .இந்த பாதையால் சைக்கிள் மட்டுமே செல்ல முடியும். மழை காலங்களில் ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தால் முச்சக்கர வண்டி கூட செல்ல இயலாது.
வீட்டுக்கு தேவையான பாரமான பொருட்களையும் தலையில் சுமந்து வரவேண்டியுள்ளது. எமது பிரச்சினைகள் தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு எத்தனையோ தடவை தெரிவித்திருந்த போதும் எவரும் கண்டு கொள்ளவில்லை என்கிறார்கள்.
யுத்த பாதிப்பு
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தடுப்பு முகாமில் இருந்து வந்த நபர்களுக்கு இந்தியாவிற்கு சென்று மீளவும் குடியமர்த்தப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு இதுவரை எந்த ஒரு வாழ்வாதார முன்னேற்றத்திற்காக உதவிகளும் செய்யப்படவில்லை.
இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு இங்கே பிறப்பு சான்றிதழ் எடுப்பதற்கு கூட சிரமமாக உள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கும் இன்னும் வீடு , காணி எதுவும் இல்லாமல் உறவினர் வீடுகளில் வசித்து வருகிறார்கள்.
இவ்வாறு உறவினர் வீடுகளில் வசித்து வரும் போது குடும்பங்களுக்குள் அடிக்கடி பிரச்சினைகள் எழுந்து பொலிஸ் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் அலைந்து திரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.என தெரிவித்தனர்.
குடிநீர் பிரச்சனை
ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் இவர்கள் குடியமர்த்தப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு குடிநீர் பிரச்சனை பாரிய அளவில் இருக்கிறது.
ஏற்கனவே அரச காணியில் அமைக்கப்பட்ட பொது குடிநீர் கிணறு தனி நபரால் அடைக்கப்பட்ட வேலிக்குள் இருப்பதால் அவை அந்த மக்களால் பாவிக்கப்பட முடியாமல் அயல் வீடுகளுக்கு சென்று குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. கருங்காலி மோட்டைப் பகுதிக்கு நியமிக்கப்பட்ட கிராம சேவையாளர் பார்வையிட வருவதில்லை.
கிராம சேவையாளருக்கு நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் மூலம் தொடர்பு கொள்வதாகவும் இதனால் மக்களின் எந்த ஒரு பிரச்சினையையும் முன்னிலைப்படுத்தி தீர்வுகளை பெற்றுத் தருவதில்லை என்றும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அந்த மக்களின் வேண்டுகோள்
அரச சார்பற்ற நிறுவனங்கள் எமது மக்களுக்கு தேவையான சுய தொழில் முயற்சிகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
குறிப்பாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கும் சுய தொழில் முயற்சிக்காக நிறைய உதவிகளை செய்து வருவதை நாங்கள் அறிவோம். எனவே எமது கிராமத்தில் உள்ள வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு சுய தொழில் முயற்சிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கும் மக்கள்
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மெல் ஒரு பெண் என்பதால் இங்கு பெண்கள் படும் துயரத்தை அவர் நன்கு அறிவார் என்று நாங்கள் நம்புகிறோம். யுத்தம் முடிந்து இத்தனை வருடங்களாக எமது வாழ்வாதார பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீண்டு செல்கிறது. இதுவரை எந்த ஒரு அரச அதிகாரிகளும் எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்க முன் வரவில்லை.எமது மாவட்டத்திற்கு புதிதாக வந்திருக்கும் நீங்கள் எமது பிரச்சினைகளை தீர்த்து வைப்பீர்கள் என்று நாங்கள் பரிபூரணமாக நம்புகின்றோம்.
அந்த வகையில் எங்களுக்கு மிகவும் அவசரமாக தீர்த்து வைக்க வேண்டிய பிரச்சனைகளான அடாத்தாக தனிநபர் பிடித்து வேலியிட்டு பற்றையும் காடுகளும் வளர்ந்துள்ள பெறுமதிமிக்க அரச காணியை தனி நபரிடம் இருந்து மீட்டு அங்குள்ள ஏழை மக்களின் சுய தொழில் முயற்சி களுக்காகவும், சொந்தமாக வீடு காணி இல்லாத குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பு செய்யுங்கள்.
அத்துடன் எமக்கான போக்குவரத்து பாதை மற்றும் குடிநீர் பிரச்சினை உட்பட எமது அடிப்படைத் தேவைகளை விரைவாக தீர்த்து வைக்க வேண்டும் என்று மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள கருங்காலி மோட்டை மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.என அவர்கள் தெரிவித்தனர்.