கனடா-பீல் பிராந்திய பொலிஸ் திணைக்கள தலைமை அதிகாரி தர்சன் துரையப்பா அவர்களோடு ஒரு சந்திப்பு வைபவம்
கனடாவில் சீக்கிய இன மக்களும் ஈழத்து மற்றும் தமிழக தமிழர்களும் அதிகமாக வாழும் பீல் பிராந்தியத்தில். இன்னும் குறிப்பாக பிரம்டன் மாநகரில் வாழும் பொது மக்களுக்கும் பொலிஸ் திணைக்களத்திற்கும் உறவையும் புரிதலையும் ஏற்படுத்தும் நோக்கோடு நேற்று புதன்கிழமை மாலை பிரம்டன் மாநகரில் ஒரு சந்திப்பு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில் பீல் பிராந்திய பொலிஸ் திணைக்களத்தின் தலைமை அதிகாரியான யாழ்ப்பாணத்தில் பிறந்த தர்சன் துரையப்பா அவர்களோடு அவரது திணைக்களத்தின் பிரதித் தலைமை அதிகாரிகள் பொலிஸ் அத்தியட்சகர்கள் என பல அதிகாரிகளும் பஞ்சாபி இனம் சார்ந்த ஒலிபரப்பாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி சந்திப்பை பிரம்ரன் மாநகரைத் தலைமையகமாகக் கொண்ட ‘பஞ்சாபி ஒலிபரப்பாளர்கள் கழகம்’ -Panjabi Broadcasters Association, -ஏற்பாடு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி சந்திப்பிற்கு உதயன் பிரதம ஆசிரியரும் அழைக்கப்பட்டிருந்தார். சந்திப்பு வைபவம் ஆரம்பமாவதற்கு முன்னர் அவர் பீல் பிராந்திய பொலிஸ் திணைக்களத்தின் தலைமை அதிகாரியான தர்சன் துரையப்பா அவர்களோடு உரையாடியாடினார்.
அவ்வேளை அவர் இங்கு வாழும் தமிழ் மக்களின் கலை கலாச்சார மற்றும் அரசியல் ஈடுபாட்டைப் பார்த்து பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாகத் தெரிவித்தார்.
மேற்படி சந்திப்பில் பீல் பிராந்தியத்தில் நடைபெறும் குற்றவியல் சம்பவங்கள். கொள்ளைச் சம்பவங்கள். தாக்குதல் சம்பவங்கள் ஆகியவை தொடர்பாகவும் அவற்றை தடுப்பது தொடர்பாகவும், கேள்விகளும் பதில்களும் பகிர்ந்து கொள்ளப்பெற்றன.
பல பயனுள்ள கேள்விகளை ஒலிபரப்பாளர்கள் கேட்க அவைகளுக்கு காத்திரமாகவும் பொறுப்புணர்வோடும் பொலிஸ் தலைமை அதிகாரியும் மற்றும் அதிகாரிகளும் பதிலளித்தார்கள்.
பீல் பிராந்தியத்திற்கு மிக அருகிலேயே கனடாவின் முக்கிய விமான நிலையமான ‘ பியர்சன் விமான நிலையம்’ இயங்கிவருவதாலும் மற்றும் ஆயிரக் கணக்கான சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள் இயங்கிவருவதாலும் குற்றச் செயல்கள் மிக அதிகளவில் இடம் பெறுவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பெற்றது.
சரக்கு போக்குவரத்து துறை சார்ந்த நிறுவனங்களில் பெறுமதியான பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு வருவதால் விஷமிகளின் கைவரிசைகள் அங்கு அடிக்கடி காட்டப்படுவதாலும் பொலிசாருக்கு மிகுந்த சவாலாக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டது.
இறுதியில் ஊடக நிறுவனங்கள் அதிகளவில் பீல் பிராந்திய பொலிஸ் திணைக்களத்தோடு ◌தொடர்புகளை பேணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் கலந்துரையாடப்பெற்று அதற்கு இரு தரப்பினரும் உடன்பாடு கண்டனர்.
அதனைத் தொடர்ந்து பிரம்டன் வாழ் வர்த்தக நண்பர்கள். ஊடகவியலாளர்கள் பொலிிஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட இராப்போசன விருந்தும் இடம்பெற்றது.
செய்தியும் படங்களும்; சத்தியன்