(5-11-2021)
கிரிக்கெட் விளையாட்டில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 சிறுவர்களை தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியில், பெற்றோரில் ஒருவர் பிணை முறியில் கையொப்பமிட்டு விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நாவாந்துறையில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் இடையே ஓட்ட எண்ணிக்கையை மாற்றிச் சொன்னதாக ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதால் கிரிகெட் விக்கெட்டுகளினால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சிறுவர் ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நேற்றுமுன்தினம் 4 சிறுவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
விக்கெட் கட்டைகளினால் மோதலில் ஈடுபட்டனர் என்று சிறுவர்கள் மீது பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அவர்கள் மூவர் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன், பெற்றோர் – பாதுகாவலர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பிணை முறியில் கையொப்பமிட்டு விடுவிக்க உத்தரவிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்களையும் பெற்றோர் – பாதுகாவலர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பிணை முறியில் கையொப்பமிட்டதன் அடிப்படையில் விடுவிக்க மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்தச் சம்பவத்தை பூதாகரமாக்கி இனங்களுக்கு இடையே மோதல் நிலையை உருவாக்கும் வகையில் செயற்படவேண்டாம் என்று பொலிஸார் கேட்டுள்ளனர்.