பிரித்தானியாவில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கிவரும் “சைவ முன்னேற்றக் கழகத்தினரால்” வெளியிடப்பெறும் காலாண்டு சஞ்சிகையான “கலசத்தின்” 100 வது இதழ் இன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள சந்திர மௌலீஸ்வரர் ஆலய மண்டபத்தில் சிறப்பாக வெளியிடப்பெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கனடா வாழ் அன்பர் டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்கள் “உதயன்” லோகேந்திரலிங்கம் அவர்களோடு இணைந்து செய்திருந்தார். ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ ஸ்ரீரதரக் குருக்கள் அவர்கள் ஒத்தாசை வழங்கி இந்த அற்புதமான வைபவத்தை கந்தசஸ்டி தொடக்க நாளன்று நடத்த உதவினார்.
“கலசம்” 100 வது இதழின் முதற் பிரதியை உதயன் லோகேந்திரலிங்கம் அவர்கள் ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ ஶ்ரீதரக் குருக்கள் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும் “கலைவேந்தன்” கணபதி ரவீந்திரன். திருமதி பத்மா லோகேந்திரலிங்கம். திருமதி கவிதா செந்தில் ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றனர்.
ஆலயத்தில் கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் நிகழ்வைக் அவதானத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
அங்கு உரையாற்றிய டாக்டர் கதிர் துரைசிங்கம் தனது உரையில் பின்வருமாறு தெரிவித்தார்.
“இந்த கலசம் ஆன்மீக இதழ் இங்கிலாந்தில் வெளியிடப்பெற்றாலும் அடுத்த வருடத்திலிருந்து கனடாவிலும் வெளியிடப்படும் என்பதை இங்கிலாந்து சைவ முன்னேற்ற சங்கம் தெரிவிக்க விரும்புகிறது. அத்துடன் இங்கிலாந்து சைவ முன்னேற்ற சங்கம் சங்கத்தின் பணிகள் பற்றியும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
சமுக சேவை, நால்வர் தமிழ்க் கலை நிலையம் சிவன் ஆலயத்தை திறம்பட நிர்வகித்தல், இலங்கை இந்திய நாடுகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் , யோக நிலையம், அறிவொளி நிலையம், அந்திமக் கிரியைகள் பொறுப்பேற்று செய்தல் ஆகியவற்றை அவர்கள் தங்கள் தலையாய கடமையாக செய்து வருகின்றார்கள்.
அத்துடன் பயனுள்ள காலாண்டு இதழான கலசத்தில் உலகெங்கும் உள்ள ஆலயங்கள் பற்றி பயணக் கட்டுரைகள் சிறார்களின் ஆக்கங்கள் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் பண்டிகைகள் பெருநாள்கள் நாயன்மார்கள் பற்றி கண்ணனும தாத்தாவும் என்ற சமயம் சார்ந்த உரையாடல் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன என்று தெரிவித்தார்.