பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்
(மன்னார் நிருபர்)
(12-11-2021)
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை மேலும் 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 11 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 240 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
-இன்று வெள்ளிக்கிழமை மதியம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (11) மேலும் புதிதாக 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 45 தொற்றாளர்கள் ஆன்டிஜென் பரிசோதனைகள் மூலமாகவும் 05 தொற்றாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 09 தொற்றாளர்கள் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் தொற்றாளர்கள் 8 தொற்றாளர்கள் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் அடம்பன் வைத்தியசாலைகளில் தளா 06 தொற்றாளர்களும்,நானாட்டான் வைத்திசாலையில் 05 தொற்றாளர்களும்,வங்காலை வைத்தியசாலையில் 04 தொற்றாளர்களும், முருங்கன், பெரிய பண்டிவிரிச்சான், மற்றும் விடத்தல் தீவு ஆகிய வைத்தியசாலைகளில் தலா 02 தொற்றாளர்களும், தலைமன்னார் வைத்தியசாலையில் ஒரு தொற்றாளரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 11 நாட்களில் 240 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சராசரியாக 21 பேர் நாள் ஒன்றிற்கு மன்னாரில் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் மொத்தம் 2618 கொரோனா தொற்றாளர்களும், தற்போது வரை 2635 கொரோனா தொற்றாளர்களும் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த மாதம் மேலும் 02 கொரோனா தொற்றாளர்கள் மரணித்துள்ளனர்.
இது வரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 25 கொரோனா தொற்றாளர் மரணங்கள் பதிவாகி உள்ளது.
கொரோனா மரண வீதமானது இவ் மன்னார் மாவட்டத்தில் 0.95 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை கொரோனா தொற்று அதிகரிப்புக்கு பிரதான காரணமாக மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவது சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்காது செயல்படுவது மற்றும் ஒன்று கூடல் நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்ட ஆளணிகளுக்கு மேலாக இணைந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது.
மேலும் தற்பொழுது மன்னாரிலுள்ள காலநிலை வைரஸ் பரவுவதற்கு ஏற்ற சூழ் நிலையாக காணப்படுவதால் மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து நடக்க வேண்டும்.
அதே வேளை நிகழ்வுகளை ஒழுங்கு செய்பவர்கள் சுகாதார அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றே நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது.
அத்தோடு இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே எதிர் வரும் திங்கட்கிழமை (15.11.2021) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றில் நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவர்.
அத்துடன் தற்பொழுதுள்ள காலநிலை மழை வீழ்ச்சி காரணமாக டெங்கு தொற்று நோய் பரவும் அபாயம் மன்னார் மாவட்டத்தில் உருவாகியுள்ளது.
குறிப்பாக வீடுகள் மற்றும் வீடுகள் சூழல் உள்ள இடங்களில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. ஆகவே மக்கள் இவ் விடையத்திலும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை இனம் கண்டு உடன் அவற்றை இல்லாது ஒழித்து நுளம்பு தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் இதுவரை 89 சதவீதமானோர் முதலாவது தடுப்பூசிகளையும் 71.9 சதவீதமானோர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.
இதனைத் தவிர மொத்தமாக 5573 பாடசாலை மாணவர்களுக்கும் 492 பேருக்கு பூசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. 768 பேருக்கு பாடசாலையிலிருந்து இடை விலகிய வருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.