மன்னார் நிருபர்
15-11-2021
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளங்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்ட பாலம் தரமின்றி காணப்படுவதாகவும் பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து தாழ் இறங்கி உள்ளதாகவும் பள்ளங்கோட்டை மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரசாங்கத்தின் ஆயிரம் பாலம் அமைக்கும் திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வையில் அதிகளவு வெள்ள நீரோட்டம் காணப்படும் பள்ளங்கோட்டை – மடுக்கரை பிரதான நுழைவு பகுதியில் அமைக்கப்பட்ட பாலம் மேற்படி தாழ் இறங்கி தரமற்று காணப்படுவதாகவும் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுவதற்கு முன்னரே பல வெடிப்புகள் தோன்றி உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாலம் அமைக்கப்படும் போது அப்பகுதி மக்களால் உரிய அரச அதிகாரிகள் , திணைக்களங்களுக்கு பாலம் அமைத்தலில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பான முறைப்பாடுகள் வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் அதைப் பெரிது படுத்தவில்லை எனவும் அவர்களின் அலட்சியத்தால் தற்போது மக்களின் பல இலட்சம் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பாலம் உடையும் நிலையில் உள்ளதாகவும் அப்பாலம் முழுவதும் உடைந்து உயிர் சேதங்கள் ஏற்பட முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திணைக்களத்தினர் அப்பாலத்தை ஒழுங்கான முறையில் அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.
குறித்த விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் சிறீஸ்கந்தகுமாரை தொடர்பு கொண்டு வினவிய போது,,,
பள்ளங்கோட்டை பாலம் தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.