வெள்ளி தோறும் விருப்புடன் விரியும், ‘உதயன்’ வார இதழின் ‘கதிரோட்டம்’ கண்டறிந்து – கற்றுணர்ந்து காலங்கள் இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆகி ‘வெள்ளி விழா’ கொண்டாடும் 2021ல் ‘நண்பன்’ என அறிமுகம் ஆகும் நல்ல தமிழ் உறவின் பெயரில் ‘விருது’ பெற வந்தவர்கள் – விழா பார்க்க வந்தவர்கள் – கவிதை சொல்ல நிமிர்ந்தவர்கள் – ஆடல் கலை நர்த்தகிகளின் களி நடனம் காதுகளில் தேன்பாய்ச்சி வயலினிசை வழங்கியவர், வீணையிசை மீட்டியவர் – தமிழ் மொழி வாழ்த்திசைத்தும் – கனடியத்தாயை வாய்மலர்ந்து, பாடிவைத்தும் – வருகைதந்த தாய்க் குலத்தைப் பெரியோரை, விருந்தினரை வாயார வாழ்த்துரைத்து, வரவேற்றும் தலைமையுரை இரு மொழியில் நிகழ்த்தியே தான் – இறும்பூதெய்ய வைத்து – இடையிடையே தொகுப்பாளர் நிகழ்ச்சிகளைச் சுவையாக வர்ணித்து கரவொலியை எழுப்பி வைத்துக் கலையரங்கை அதிர வைத்தார்.
கடந்த இரு ஆண்டுகளாய் கொரோனாக் கிருமிகளின் படையெடுப்பால் பதுங்கி ஒளிந்தவர்கள் – பயங்கொண்டு மிரண்டவர்கள் – அச்சமும் – பீதியும் நீங்கப்பெற்று அலை அலையாய் அமரர் – வர்ண இராமேஸ்வரன் கலையரங்கில் களிப்புடனே வருவதற்கு வழிசமைத்த உதயன் நிறுவன நிறுவனர் திரு.ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு அரசியல் பிரமுகர்களும் – ஆன்றோர், பெரியோர்களும் – ஆசியுரை வழங்கி அகமகிழ்ந்து வாழ்த்தினர்: வாயாரப் புகழ்ந்தனர்! மொன்றியல் நகருக்கு இது புதியதொரு விழா உதயன் இதழோடு உறவாடும் தமிழர் சமூகத்திற்கும் – ரொரன்ரோ வாழ் தமிழர் சமூகத்திற்கும் குறிப்பாக ஊடகத்துறை சார்ந்தவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் – வாசகர்கள் – எழுத்தாளர்களுக்கிடையே காத்திரமான உறவுப் பாலத்தை அமைத்து – ஆரோக்கியமான ஆதரவாளர்களையும் அறிமுகம் செய்து வைத்த உதயன் நிர்வாகமும் – நிறுவனரும் நன்றிக்குரியவராகிறார்கள்.
விழாவின் முக்கிய அங்கமான – ‘நண்பன் விழா 2021’ எல்லோரும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் வகையில் – கட்புலன் இழந்த நிலையிலும் தாயக மக்களின் கண்ணீர்த் துளிகளைத் துடைத்தெறிய வேண்டும் என உயர்ந்த இலட்சியத்துடன் இசை நிகழ்ச்சிகளின் மூலம் நிதி உதவிகள் வழங்கி வரும் இளம் பாடகர் செல்வன் – கௌரீஸ் சுப்பிரமணியம், கடந்த 30 ஆண்டுகளாக “நாட்டியஷ்ருங்கா” நடனப் பள்ளியின் நிறுவனராகவும் – பிரதம ஆசானாகவும் – கலைத் தொண்டும் – சமூகப்பணியும் ஆற்றிவரும் திருமதி. தாரகா சற்குணபாலா, நாடகச் சித்திரங்களை எழுதியும், மேடையேற்றியும், கலைப் பணி புரிந்து வரும் நாடகக் கலைஞரின் தொடர் சேவையைப் பாராட்டி திரு.கந்தையா – திரு.லோகநாதன், இலங்கையிலும் – தமிழகத்திலும் – ஐரோப்பிய நாடுகளிலும் பொப்பிசை – மெல்லிசை பாடல்கள் மூலம் புகழ்பெற்ற பாடல் கலைஞர், திரு.அமுதன் அண்ணாமலை அவர்களின் வாழ்நாள் சாதனைப் பாராட்டி – மேற்கூறிய நால்வருக்கும் – 2021க்குரிய “நண்பன்” விருது வழங்கப்பெற்றமை வரலாற்று நிகழ்வாகிவிட்டது, கலை விருந்துகளோடு – அறுசுவை விருந்தும் யாவருக்கும் மனமகிழ்வோடும் – மனநிறைவோடும் வழங்கப்பெற்றது.
இவ்வாண்டின் முத்திரை விழாவாக உதயன் வெள்ளி விழாவும் “நண்பன்” விருது வழங்கிய நிகழ்வும் உலகம் அறிந்து நல்விழாவாகும்.
– தொகுப்பு வீணைமைந்தன்.