-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!
‘எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள், உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்’ – தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்-
உலக வாழ்வின் சுகங்களனைத்தையும் துறந்து எமது இனத்தின் சுதந்திர வாழ்விற்காக தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களின் நினைவாக மலர்தூவி சுடரேற்றி நினைவேந்துவதை தடுக்கும் சிறிலங்கா அரசின் செயற்பாடானது மனித விழுமியங்களுக்கு முரணானதாகும். எங்கள் இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய இலட்சியம் சுமந்து தம்முயிர் ஈந்த மாவீரர்கள் மரணத்தையே வென்றவர்கள். ஆகையால் நவம்பர்-27 என்பது மாவீரர்களை நினைத்து மலர்தூவி சுடரேற்றி கண்ணீர்விட்டு கதறியழும் சாதாரண நாள் அல்ல. மாறாக விதை குழிக்குள் விழி மூடித் துயில்கின்ற வீரவேங்கைகளின் இலட்சியத்தை நிறைவேற்ற நாம் உறுதிபூணும் நாளாகும். ஆகையால், தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை உள்ளடக்கிய தமிழர்களின் அரசியல் அபிலாசைகளின் வழியேயான சுதந்திர தமிழீழம் ஒன்றே இறுதியானதும் உறுதியானதுமான தீர்வாகும் என்பதை மண்ணுறங்கும் மாவீரத்தின் சாட்சியாக எமது மக்கள் நினைவில் நிறுத்தி எமது விடுதலைத் தீயைப் பற்றியெரிய வைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
விடுதலைக்காகப் போராடிக்கொண்டே அந்த விடுதலைக்காக உயிரிழந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் நினவேந்தல் நிகழ்வுகளை உலகெங்கிலும் குறித்த நேரத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் முன்னெடுத்துவரும் ஒரே இனமென்ற பெருமைக்குரிய நாம், எதிர்ப்புகளையும் தடைகளையும் இடையூறுகளையும் ஒரு பொருட்டாகக் கருதாது, சுதந்திர தமிழீழ விடுதலைக்காக விதையாகிப்போன மாவீரர்களுக்கு சுடரேற்றி வீர வணக்கம் செலுத்துவோம்.
”தமிழீழம் எமக்குச் சொந்தமான நிலம். வரலாற்று ரீதியாக எமக்கு உரித்தான நிலம். எமது வாழ்விற்கும், வளத்திற்கும் ஆதாரமான நிலம். நாம் பிறந்து, வாழ்ந்து, வளர்ந்த நிலம். எமது தேசிய அடையாளத்திற்கு அடித்தளமான நிலம் இந்த நிலத்தை தனது சொந்த நிலம் என்கிறான் எதிரி” -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்-
சிங்களப் பேரினவாதிகள் மகாவம்ச மாயைக்குள் மூழ்கி பௌத்த மமதையில் நின்று தமிழர்களைக் கொன்றொழித்துத் தமிழர் தாயகநிலங்களைக் கபளீகரம் செய்து, வடக்குக்கிழக்கு தமிழர்தேசங்களில் சிங்களவர்களை இராணுவ பலத்துடன் குடியமர்த்தி முழு இலங்கைத்தீவினையும் சிங்கள பௌத்த நாடாக்கும் எத்தனிப்பானது மிகவேகமாக முடக்கிவிடப்பட்டுள்ளது. பௌத்த கோவில்கள் தமிழ்க் குடியிருப்பாளர்களின் அனுமதியின்றி (ஈழத்தமிழர்களின் பூர்வீக வசிப்பிடங்களில்) கட்டப்பட்டு வருகின்றது. பலதலைமுறையாக வாழ்ந்த தமிழர்களின் பகுதிகளை சிங்களமயமாக்கும் நோக்குடன் மட்டுமே சிங்கள ஏகாதிபத்தியம் செயற்பட்டு வருகிறது. தமிழருக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்துவதற்காகத் தொல்பொருளியல் எச்சங்கள் நிலத்தடியில் இருப்பதாகப் பொய்க்காரணங்காட்டி தமிழர்களின் நிலங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றது.
அடக்குமுறையின் மறுவடிவமே ”ஒரே நாடு, ஒரே சட்டம்”
சிங்கள பௌத்த பேரினவாதிகளைத் தவிர இலங்கை வேறு எந்த இனத்திற்கும் சொந்தமானது அல்ல என்ற அடக்குமுறைக் கொள்கையுடன் உருவாக்கப்பட்டுதுதான் ”ஒரே நாடு, ஒரே சட்டம்’.
இந்தக் குழுவின் தலைவராக இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களில் ஈடுபட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை சென்ற குற்றவாளியான பொதுபல சேன என்ற அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் என்ற அடாவடித்தனம் செய்யும் புத்த பிக்கு நியமிக்கப்பட்டிருகிறார். இது தமிழ் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிணாமம் என்றே பார்க்க வேண்டும.;
இலங்கைத் தீவின் பூர்வீக குடிகளான தமிழர்கள் தங்களுக்கே உரித்தானதும் தனித்துவமானதும் ஆன மொழி, கலை கலாசாரங்கள், பாரம்பரிய உணவுமுறை, உடைப் பாரம்பரியம், வழிபாட்டு முறைகள், பண்பான பழக்க வழக்கங்கள், அன்பான வாழ்க்கை முறைகள், பூர்வீக நிலங்கள், வர்த்தகங்கள், மரபுரிமைகள் என்று பலவற்றையும் கொண்ட இனமாகையால் அவர்கள் இலங்கைத்தீவின் 2500 வருடங்களுக்கு மேலான பழங்குடி மக்கள் ஆவர். அண்மையில் கீழடி அகழ்வாராட்சியில் வெளிவந்த ஆதாரங்கள் பூநகரியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களுக்கு ஒப்பானவை. ஆகையால் தமிழர் இத்தீவின் பூர்வீக இனம் என்பது மேலும் நிரூபணமாகின்றது. இந்தச் சரித்திர உண்மையை அறியாத ஒருசில சுயநலவாத அரசியல்வாதிகள் நாம் சிறுபான்மை இனம் என்று கூறி நாம் இலங்கைத்தீவின் பூர்வீகத் தேசிய இனம் என்பதை மறைப்பதேன்? நாம் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்ற எமது பிறப்புரிமையை என்றுமே விட்டுக்கொடுக்க முடியாது. எமது மண்ணை சிங்களத்தின் ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்த விடாமல் எதிர் நின்று பாதுகாக்க வேண்டிய அதேவேளையில் எமது நிலத்தை விற்றுப்பிழைக்கும் தமிழ் அரசியல்வாதிகளை இனங்கண்டு ஒதுக்கவேண்டும்.
தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் கலைத்துக் கொண்டு ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன் மலையாக எழுந்துநிமிர்ந்தான். அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாத் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்த்தேசம் விழித்துக்கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள் -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்-
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் தொடர்ச்சியே ஆயுதப்போராட்டம்.
1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியது. தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச்செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அதன் மூலம் தமிழ் மக்களின் தேசியத்திற்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படும் அபாயம் தோன்றியதால் 1976 மே மாதம் 14ம் திகதி வட்டுக்கேட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சனநாயகப் போராட்டங்களும் பாராளுமன்ற அரசியலும் வெற்றியளிக்காத நிலையில்தான் சத்தியத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட இலட்சியத்திற்காகத் தமது சுயநல இன்பங்களைத் துறந்து சாவினைத் தழுவிய மாவீரர்களின் தியாக வரலாற்றின் பிரசவமானது தமிழ் மக்களை தலைநிமிர வைத்தது. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோரிக்கைகளை உள்ளடக்கியதான வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையானது மாவீரர்களின் உயிர்த்தியாகத்தால் உயிர்பெற்றதுடன் மூன்று தசாப்தங்கள் கடந்தும் அந்த இலட்சியப் போராட்டமானது முடிவின்றி பெரும் சமர்கள் புரிந்து எமது நிலங்களையும் இருப்பையும் தக்கவைத்தது மட்டுமல்லாது ஒரு உன்னதமான தேசிய நிர்வாகத்தை கட்டியமைத்து உலகிற்குப் பறைசாற்றியது.
13ம் திருத்தச்சட்டமும் அதைத் தூக்கிப்பிடிக்கும் தமிழ் அரசியல்வாதிகளும்.
13வது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படல் வேண்டும், மாகாண சபைத் தேர்தல்கள் விரைவாக நடாத்தப்படல் வேண்டும் எனக் கூக்குரல் போடும் தமிழ் அரசியல்வாதிகள், 13 ஒரு ஆரம்பப்புள்ளியாகக்கூட இல்லை என்பதை உணரவில்லையா? அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டு அம்மணமாக உள்ள 13ல் மாகாணசபைக்கு கூட எந்த அதிகாரங்களும் இல்லை. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் கூட இல்லாத 13ஐப் பெற்று தமிழர்களால் எந்த அரசில் தீர்வுகளையும் பெறமுடியாது. பறிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அப்பால் மிகுதியாக உள்ள அதிகாரங்கள் மகாகாணசபையில் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுக்காமல் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுக் கூறவேண்டுமானால், ஒரு நகரசபைக்கு உள்ள சுயாதீன அதிகாரங்கள் கூட மாகாண சபைகளுக்கு இல்லை என்பதே உண்மை. வடக்குக் கிழக்கு நிலத்தொடர் துண்டிக்கப்பட்ட தமிழரின் பூர்வீகத் தாயகம் 13ஆல் திரும்பப் பெறமுடியுமா? இருப்பதையும் பறிக்கும் சிங்கள தேசம் தமிழர்களுக்கு எதையும் தரப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தார் தேசியத் தலைவர்.
மாவீரர் துயிலும் இல்லத்தில் சத்தியம் செய்கிறோம்
உங்கள் இலட்சியக் கனவுகள் நனவாகும்வரை அடையவேண்டிய இலக்கை நோக்கிப் பயணிப்பதோடு பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று இனவழிப்புச் செய்த குற்றவாளிகளை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்த அயராது உழைப்போம் என சத்தியம் செய்வோம். 1735 நாட்களாக தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளுக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் எங்கள் ஆதரவை வழங்குவோம். எமது போராட்ட இலக்கு, ஒளிமயமான எதிர்காலமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் எமது இலட்சியப் பயணத்தை விட்டுக்கொடுப்புக்கு இடமின்றித் தொடர்வோம். நாம் ஒரே மக்கள் சத்தியாக, உலகத் தமிழர்களை ஒன்றிணைந்து தடைகளைத்தகர்த்து இலட்சியப் பாதையில் கொள்கைப் பிறழ்வு இன்றி நகர்வோம். எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் வகையில் சர்வதேச அனுசரணையுடன் ஒரு சர்வசன வர்கெடுப்பு நடாத்த தாயகமும் புலமும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என உறிதி பூணுவோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!