மன்னார் ஊடக அமையம் கண்டனம்.
மன்னார் நிருபர்
(28-11-2021)
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச் சந்திரன் மீது நேற்றைய தினம் சனிக்கிழமை (27) காலை இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தினை மன்னார் மாவட்ட ஊடக அமையம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தற்போதைய அரசின் ஆட்சி காலத்தில் வடக்கு, கிழக்கில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளையும் ,கெடுபிடிகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
பிராந்திய ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது கடமைகளை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
-ஊடகவியலாளர்கள் பலர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.ஊடகவியலாளர்களை நிம்மதியாக இருக்க விடாது அவர்களை அச்சுறுத்துதல்,கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல், தாக்குதல்கள் மேற்கொள்ளல், விசாரணைகளுக்கு அழைத்தல், மற்றும் அவர்களது உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
-அந்த வகையில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தனது ஊடக கடமையை மேற்கொண்ட போது சுமார் 4 இராணுவ வீரர்கள் இணைந்து கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளதோடு, குறித்த ஊடகவியலாளரது கையடக்க தொலைபேசி,புகைப்படக்கருவி என்பன இராணுவத்தினரால் பறிக்கப்பட்டுள்ளது.
-அவரது மோட்டார் சைக்கிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது ஊடக சுதந்திரத்தின் மீதும் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமாகவே நாம் கருதுகின்றோம்.
-வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்க் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசினால் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் மக்கள் தொடர்ந்தும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் ஊடகங்கள் ஊடாக தீர்வை பெற்றுக் கொடுக்கின்றனர்.
இந்த நிலையில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல் சம்பவங்கள் மற்றும் இராணுவத்தின் முதுகெலும்பு இல்லாத குறித்த தாக்குதல் சம்பவத்தை மன்னார் மாவட்ட ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.
-குறித்த சம்பவத்துடன் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதோடு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் மன்னார் மாவட்ட ஊடக அமையம் அரசிடம் கோரிக்கை விடுக்கின்றது.