தீபச்செல்வன்
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்குச் சர்வதேச விசாரணையே தீர்வு என்றும் தமிழ் மக்கள் கோரி வருகிறார்கள். இனப்படுகொலைப் போர் நடந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகின்ற நிலையில் நீதிக்கான நகர்வுகள் மந்த கதியிலேயே இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோ நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக போராடியே மாண்டு வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபை அமைப்பின் நடவடிக்கைகளோ தன்னரசியலுக்கு உட்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விதத்திலும் நம்பிக்கை அளிக்கும்படியாக இல்லை. இந்த நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தமிழர்கள் எப்படி நெருங்குவது?
இலங்கையில் இனவழிப்பு
இலங்கையில் ஈழத் தமிழ் மக்கள் வரலாறு முழுவதும் இனவழிப்பு செய்யப்பட்டு வருகின்றனர். இலங்கை 1948இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரத்திற்காக ஈழத் தமிழர்கள் பாடுபட்டனர். ஐக்கிய இலங்கையையும் விரும்பியதும் ஈழத் தமிழர்களே. இல்லையேல் அன்றே இலங்கை இரண்டு நாடுகள் ஆகியிருக்கும். ஐக்கிய இலங்கையை விரும்பிய ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரசு இனவழிப்பை பரிசளித்தது. அஇதன் முதல் கட்டமாக தனிச்சிங்களச் சட்டம் 1956இல் கொண்டுவரப்பட்டது.
கலவரங்கள் என்ற பெயரில் 1956 முதல் இனவழிப்புக்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன. 1983இல் பெருமெடுப்பில் இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒரு இனத்தின் மக்கள் இலக்கு வைக்கப்பட்டு வகை தொகையாய் அழிக்கப்படுவதையே இனவழிப்பு என்று பன்னாட்டு வரைவிலக்கணங்கள் கூறுகின்றன. இனவழிப்புக்கு எதிராக ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய நிலையில், அந்தப் போராட்டத்திற்கு எதிரான கொடும் ஆயுதமாகவும் இனவழிப்பே பயன்படுத்தப்பட்டது. இலங்கை அரசு தமிழ் மக்களை அழிக்க முப்பதாண்டுகளாக பல்வேறு பெயர்களில் போரை அறிவித்து மேற்கொண்டமையும் இனவழிப்பின் பாற்பட்டதேயாகும்.
இனப்படுகொலைத் தீர்மானங்கள்
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் 2014இல் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு வெளியில் ஒரு ஜனநயாக சபை ஒன்றில் முதன் முதலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்ற வகையில் இது முக்கியத்துவமானது. இனவழிப்பால் அடக்கி ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் மனங்களில் எரிந்த கோரிக்கையை தொப்புள்கொடி உறவான தமிழகம் ஒன்றுபட்டு நிறைவேற்றியதுடன் அதனை இந்திய அரசுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் தெரியப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அது மாத்திரமின்றி இனப்படுகொலை நடந்த மண்ணிலேயே இனப்படுகொலை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். வடக்கு மாகாண சபையில் 2014ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் வரலாறு முழுவதும் இனப்படுகொலை நடந்தது என்றும் முள்ளிவாய்க்காலில் அது உச்சம் கொண்டது என்றும் அதற்கு பன்னாட்டு விசாரணை தேவை என்றும் வலியுறுத்தும் அந்தத் தீர்மானம் ஸ்ரீலங்கா அரசுக்கு பெரும் அழுத்தமாக அமைந்ததுடன் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டமையும் இங்கே நினைவு கொள்ள வேண்டியது.
சர்வதேசத்தின் பாராமுகம்
ஸ்ரீலங்காவில் நடந்த இனப்படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை அணுகி வருகின்ற தன்மை மிகவும் விமர்சனத்திற்கு உரியதாகவும். குறிப்பாக அதன் பொதுச் செயலாளர்கள் தமது பதவிக் காலம் முடிந்தவுடன் இலங்கையில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டமையை ஏற்பதும் நடந்தது இனப்படுகொலை என்று ஒப்புக்கொள்ள முயல்வதும் காலம் தாழ்த்தி நிகழ்கிறது. போர் நடக்கும் போது செயலாளராக இருந்த பான்கீமூன் பின்னாளில் இலங்கையில் பாரியளவு மக்கள் அழிக்கப்படுவதை தடுக்க முடியாமல் போய்விட்டது என்று கூறியிருந்தார். அதனை போர் நடக்கும்போதல்லவா அவர் கூற வேண்டும்.
அதேபோன்று இலங்கை அரசின் இனவழிப்பு ஒடுக்குமுறைகளை பற்றி இன்று பேசுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை பதவியில் இருந்த போது உறுதியான அறிக்கைகளையோ, தீர்மானங்களையோ எடுக்கவில்லை. இது சர்வதேச சமூகத்தின் பாராமுகத்தின் வெளிப்பாடாகும். இலங்கையில் நடந்த இனப்படுகொலையை இன்னமும் இனப்படுகொலையாக ஏற்காமல் மனித உரிமை மீறல் என்றும் போர்க்குற்றம் என்றும் மதிப்பிடுவதன் வாயிலாக இலங்கையில் தொடர்ந்து இனவழிப்பு ஊக்குவிக்கப்படுகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு
இந்த நிலையில்தான், ஸ்ரீலங்காவின் இன்றைய அரச தலைவரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இனவழிப்புப் போரில் பெரும் முனைப்புடன் செயற்பட்ட அப்போதைய படைப்பிரிவு தளபதியும் இன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான மேஜர் காமல் குணரத்தின உள்ளிட்ட ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகள்மீது இனவழிப்பு செயற்பாடுகளின் பாதிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் 200பேர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுநருடன் விண்ணப்பம் செய்துள்ள நிகழ்வானது தமிழர்களின் நீதியை வெல்லும் பயணத்தை வலுப்படுத்தும் தொடக்கப்புள்ளியாக கருதப்படுகிறது.
குளோபல் றைற்ஸ் கொம்பிளைன்ஸ் எல்எல்பி அமைப்பின் நிர்வாக இயக்குனரும் சட்ட வல்லுனரும் மாகாராணி சட்டத்தரணியுமான வேய்னி ஜோர்டாஸ் அவர்கள் இந்த வழக்கின் சட்டத்தரணியாக களமிறங்கியுள்ளமை இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகின்ற செயற்பாடாகும். ஐாவின் பரிந்துரையின்றி குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்ல முடியர்த என்ற மூடுமந்திரத்தை உரோம் 15ஆவது சட்டச் சரத்தை கொண்டு ரோஹிங்ய மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்கும் வழக்கில் இவர் முன்னிலையாகி வென்றிருந்தார். இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் நீதி வேண்டிய வழக்கை சட்ட வல்லுனர் வேய்னி ஜோர்டாஸ் கையில் எடுத்துள்ளார்.
நீதியே காயங்களை ஆற்றும்
இதுபோன்ற முயற்சிகளை தமிழ் தலைவர்களும் ஈழ விடுதலையை வலியுறுத்துகின்ற அமைப்புகளும் புலம்பெயர் தேச அமைப்புக்களும் முன்னெடுக்க வேண்டும். மேற்போந்த வழக்குகள் வாயிலாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீலங்காவின் குற்றங்கள் தொடர்பான வாதங்களுக்கும் கவனங்களுக்கும் இடம் ஏற்படுகின்றது. இதுபோன்ற அணுகுமுறைகள் ஐநாவின் அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். உண்மையில் ஐக்கிய நாடுகள் சபை தனது பாதுகாப்பு சபையின் மூலமாக உலகில் இன ரீதியாக ஒடுக்கப்படுகின்ற மக்களை பாதுகாக்க வேண்டும்.
இலங்கை அரசால் உயிர்களை இழந்து அங்கங்களை இழந்து இலங்கை அரசிடம் உறவுகளை காணாமல் போகக் கொடுத்து எஞ்சி வாழ்கின்ற மக்கள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் உயிர் வாழ்கின்றனர். இனப்படுகொலைக்கான நீதி ஒன்றே தமிழர்கள் பட்டிருக்கும் காயங்களுக்கான மருந்து. அதுவே இலங்கையில் பல தசாப்தங்களாக புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கும் தீர்வைத் தரும். அதற்காக ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டிய தமிழர்கள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அணுகும் முயற்சிகளில் ஆக்கபூர்வமாக ஈடுபட வேண்டும்.