(2-12-2021)
ஒதியமலைப் படுகொலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வமைதியுடன் இடம்பெற்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில், கடந்த 1984.12.02 அன்று இராணுவத்தினாலும், சிங்கள காடையர்களாலும் அப்பாவித் தமிழ்மக்கள் 32பேர் சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
குறித்த படுகொலை நாளின் நினைவேந்தல் நிகழ்வுகள், ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் மாதம் இரண்டாம் திகதி இடம்பெற்றுவருகின்றன.
அந்த வகையில் குறித்த ஒதியமலைப் படுகொலையின் 37ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 02.12.2021 இன்றைய தினம், ஒதியமலை சனசமூகவளாகத்தில் படுகொலைசெய்யப்பட்டோரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் உணர்வமைதியுடன் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஒதியமலைப் பிள்ளையார் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக விசேட ஆத்மசாந்தி வழிபாடுகளும் இடம் பெற்றிருந்தன.
மேலும் இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா-ரவிகரன், முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, ஒட்டுசுட்டான் பிரதேச சபை உறுப்பினர் இ.சத்தியசீலன், ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.கிரிதரன், முன்னாள் கிராமஅபிவிருத்திசங்கத்தலைவர் கந்தசாமி, படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.