எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தப்படாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வட்டி செலுத்த முடியாமல் 200ற்கும் மேற்பட்ட இலங்கை பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் கிராமப்புற பெண்களின் உயிரைப் பறிக்கும் நுண்கடன் திட்டம் ஏற்படுத்திய அழிவின் அளவு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாட்டிற்கு வந்த ஐ.நாவின் விசேட தூதுவரால் வெளிப்படுத்தப்பட்டது.
“கடனுக்கு அதிக வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுவதால் பல பெண்கள் கடனுக்கு இரையாகிறார்கள். இதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில் 200ற்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என சமகால அடிமைத்தனம் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகடா கொழும்பில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், கல்வியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் சுரண்டலுக்கு ஆளானவர்கள் ஆகியோரை அவர் சந்தித்ததாக, ஐ.நாவின் இலங்கைக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் வாக்குறுதியானது இலட்சக்கணக்கான கிராமப்புற பெண்களை கடன் பொறியிலிருந்து காப்பாற்றுவதாகும்.
“சில வங்கிகளுக்கு சட்டப்பூர்வ உரிமை கூட இல்லை, சில நிதி நிறுவனங்கள் கடந்த காலங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நாடு முழுவதும் நெருப்பு வட்டியைவிட அதிக வட்டிக்கு வழங்கிய நுண்கடன் காரணமாக, இலட்சக்கணக்கான பெண்கள் அழுத்தத்தில் உள்ளனர். அத்தகைய பெண்களுக்கு விரைவான நிவாரணம் அளிக்கும் வகையில், நியாயமற்ற முறையில் வழங்கப்பட்ட சிறு கடன்கள் இரத்து செய்யப்படும், ”என சுபீட்சத்தின் நோக்கு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதையே ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் வெளிப்படுத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
“இந்த சுரண்டல் நுண்கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் அரசாங்கம் இதுவரை எந்தவொரு பயனுள்ள அல்லது சரியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதில் நான் ஆழ்ந்த கவலையடைகின்றேன். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் வேலையைத் தடையின்றி தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்,” என டொமோயா ஒபோகடா தெரிவித்துள்ளார்.
தனது விஜயத்தின் போது முன்வைக்கப்பட்ட பல பரிந்துரைகளை, இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவித்த விசேட பிரதிநிதி, இந்த கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டமியற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமகால அடிமைத்தனம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகடாவின் இறுதி அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.