பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விபரிப்பு
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்று அங்கு பல வருடங்களாக விசாரணைகள் எதுவும் இன்றி வாடும். தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க அமைச்சரை ஜனாதிபதி இன்னும் பதவியில் வைத்திருப்பது நாட்டின் நீதித்துறையின் அவலட்சணத்தைக் காட்டுகின்றது
இவ்வாறு இலங்கைப் பாராளுமன்றத்தில் விபரித்து தனது கண்டணத்தைத் தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நீதி அமைச்சு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு,தொழில்நுட்ப அமைச்சு, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு,கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டில் பாரிய குற்றவாளிகள், கொலைகாரர்கள் திருடர்களுக்கு குற்றத்தீர்ப்பு வழங்காது விடுதலை செய்யப்படும் நிலைமையே காணப்படுகின்றது. நாட்டின் நீதித்துறையின் தரம் மற்றும் பெறுமதி எந்தளவில் உள்ளது என்பதற்கு இவை நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. இலங்கையில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் பலர் அரச நண்பர்களாக இருக்கின்ற காரணத்தினால் விடுவிக்கப்படுகின்றனர்.
சிறைக்கைதிகள் முழுமையாக அரச கட்டுப்பாட்டில், அரச பாதுகாப்பில் இருப்பவர்கள். அவர்கள் சந்தேக நபர்கள் என்பது வேறு விடயம், ஆனால் அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அவ்வாறான நிலையில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை அச்சுறுத்தியுள்ளார். அதன் பின்னர் குறித்த இராஜாங்க அமைச்சரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக மையம் அறிவித்துள்ளது, எனினும் குறித்த அமைச்சர் இன்றும் இராஜாங்க அமைச்சராக உள்ளதுடன இன்றைய தினம் நீதி அமைச்சின் விவாதத்தில் நீதி அமைச்சருக்கு அருகிலேயே அமர்ந்துள்ளார். இதுதான் இந்த நாட்டில் நீதித்துறையின் நிலைமையாகும்.
பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இன்றும் நீண்ட காலமாக சிறையில் உள்ளனர். சர்வதேச நியமனங்களுக்கு அமைய ஏனைய நாடுகளில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் எந்த காரணமும் இல்லாவிட்டால் நீண்டகாலம் தடுத்து வைக்கமாட்டார்கள். அரசாங்கத்தின் தனி நிலைப்பாட்டில் இவர்கள் நீண்டகாலம் சிறையில் இருக்கும் அதே வேளையில், குற்றவாளிகள் வெளியில் உள்ளனர். இதுதான் இலங்கையின் சட்டமாக உள்ளது.
அதேபோல் இளம் தவறாளர்களின் புனர்வாழ்வு முகாம்கள் நாட்டில் பத்து இடங்களில் உள்ளன. ஆனால் வடக்கு கிழக்கில் அவ்வாறான முகாம்கள் இல்லை, இதனை நீதி அமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் நீதிமன்ற கட்டமை பொறுத்தவரை, வடக்கு கிழக்கில் நீதிமன்றங்கள் உள்ளன. அங்கு சிங்கள மொழியில் அவை இயங்கிக்கொண்டுள்ளன, அங்கு சிங்கள மக்களின் இருப்பு காரணமாக சிங்கள நீதிமன்றமாக இயங்கிக்கொண்டுள்ளது. ஆனால் கொழும்பிலோ அல்லது தெற்கிலோ சகல நீதிமன்றங்களும் சிங்களத்தில் இயங்குவது நியாயமில்லை. தமிழர்கள் வாழும் மலையக பகுதிகளில் கூட முழுமையாக சிங்கள மொழியில் நீதி மன்றங்கள் இயங்கிக்கொண்டுள்ளன. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. வடக்கு கிழக்கில் மற்றும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஏன் தமிழ் மொழியில் இயங்க முடியவில்லை. ஆகவே இதன் பின்னணியில் பாரிய நிகழ்ச்சிநிரல் ஒன்று இயங்கிக்கொண்டுள்ளது.