கொழும்பில் கூடிய தமிழ் அரசியல்வாதிகள் தெரிவிப்பு
13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் நலன் கருதி இந்தியாவால் முன்மொழியப்பட்ட ஒன்றாகும். ஆனால் இலங்கை அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு முயற்சிகளின் தமது கடும்போக்கான கொள்கையை கையாண்டு, 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நீக்கும் முயற்சிகளை முன்னெடுத்துவருவதாகவும், எனவே தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் வரையில் தற்போதைய ஒற்றையாட்சிக்குள் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க இந்தியாவின் தலையீடுகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளதுடன், 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணமொன்றை சகல தமிழர் தரப்பும் கைச்சாத்திட்டு இந்தியாவிடம் ஒப்படைக்க தீர்மானம் எடுத்துள்ளனர்.
தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்கான இந்தியாவிடம் ஒருமித்த கோரிக்கையை விடுக்கும் விதமாக, கொழும்பு வெள்ளவத்தை குளோபல் டவர் ஹோட்டலில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடியிருந்தனர்.
இந்த சந்திப்பின் பின்னர் நேற்று இடம்பெற்ற தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவற்றை கூறினர்.
இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை தலைவர் சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் ஒன்றிணைந்து, வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும், எமது மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை ஆராய்ந்து, இந்த விடயத்தில் எந்தவிதமாக தீர்மானம் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்துள்ளோம். குறிப்பாக அரசியல் தீர்வு விடயத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இது எந்தளவிற்கு உண்மையென தெரியாது. ஆகவே இதனை அவதானிக்கொண்டுள்ளோம். அதேபோல் ஒரே நாடு ஒரே சட்டம் என்றொரு கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு முற்றிலும் முரணானது. அத்துடன் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இவற்றை அரசாங்கம் கருத்தில் கொள்வதாக தெரியவில்லை.
அரசாங்கம் தமது கடும்போக்கு கொள்கையில் பயணிப்பதாக எம்மதியில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே இந்த விடயங்களை நாம் கவனமாக அவதானித்து வருகின்ற நிலையில் தற்போது தமிழர் பிரதிநிதிகள் ஒன்றுகூடி இந்த விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம்.
குறிப்பாக 13 ஆம் திருத்தத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றோம். 13 ஆம் திருத்தம் இந்தியாவின் மூலமாக முன்மொழியப்பட்டு, இலங்கைக்கு வழங்கப்பட்ட போதிலும் இன்றுவரை அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக சில அதிகாரங்களை அதில் இருந்து நீக்குவதற்கும், ஒற்றையாற்றியை முழுமையாக கையாள்வதற்கும் நடைவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் 13 ஆம் திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. எனினும் இன்றுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
ஆகவே இந்த விடயங்களை ஆராயும் விதமாக தமிழ் பேசும் மக்கள் சார்பாக ஒற்றுமையானதும் ஒருமித்த கோரிக்கையை முன்வைக்க வேண்டிய தேவை உள்ளது. ஆகவே இந்த விடயங்களை தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றோம். தொடர்ந்தும் ஆராய்ந்து கோரிக்கைகளை முன்வைப்போம் என்றார்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன்
இது குறித்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் கூறுகையில் :- எமது இந்த சந்திப்பில் மலையக தலைவரும், முஸ்லிம் தலைவரும் ஒன்றினைந்துள்ளனர். ஆகவே எம் அனைவரையும் இணைக்கும் ஒன்றாகவே 13 ஆம் திருத்தச்சட்டம் காணப்படுகின்றது.
வடக்கு கிழக்கு மக்களுக்கு சில பிரச்சினைகள் உள்ளதை போன்றே முஸ்லிம் மக்களுக்கும் மலையக மக்களுக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறன நிலையில் 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் நாம் அனைவருமே பாதிக்கப்படப்போகின்றோம்.
இந்தியாவிடம் நாம் மிக முக்கியமான ஒரு விடயத்தை எடுத்துக்கூறவுள்ளோம். அதாவது எமது நிரந்தரத்தீர்வை நாம் கைவிடவில்லை, அது சமஷ்டி அடிப்படையில் அல்லது கூட்டு சமஷ்டியாக இருக்கும்.
ஆனால் தற்போதைய ஒற்றையாட்சியின் கீழ் எமக்காத அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் இந்தியா அதற்குரிய ஒத்துழைப்புகளை எமக்கு வழங்க வேண்டும்.
மாகாணசபைகள் வந்தால் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மலையக தமிழர்களுக்கும் ஏன் சிங்களவர்களும் நன்மைகள் கிடைக்கும். சிங்களவர்களுக்கு இது தேவையோ இல்லையோ, அதனை தாண்டி தமிழ் பேசும் மக்களுக்கு இது நன்மைகளை தரும். அதனை இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளோம்.
ஆகவே சகலரும் ஒன்றிணைந்து இந்த விடயங்களை கலந்துரையாடி இந்தியாவிடம் கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளோம்.
இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணத்தை விரைவில் தயாரித்து சகலரும் கைச்சாத்திட்டு இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம்
இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் கூறுகையில்,
மத்திய அரசாங்கம் பல்வேறு செயலணிகளை அமைத்து சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு எத்தனிக்கும் கபளீகர நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் அரசியல் அமைப்பில் உள்ள அதிகார பகிர்வு விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அதேபோல் ஆளுநர்களின் தலைமையில் மாகாண ஆட்சியை நடத்திக்கொண்டு அதன் மூலமாக அரசாங்கதின் திட்டமிட்ட மறைமுக நிகழ்ச்சி நிரலை சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பாக நடைபெறுகின்ற விடயங்களிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
அதன் அடிப்படையில் சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் சவால்களை குறித்து நாட்டின் சகல கட்சிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேவேலை, 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்திய தலைமைகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் சரிவர நிறைவேற்றப்படுவதில் தாமதம் இருக்கின்றது. எனவே இவற்றையெல்லாம் தாமதப்படுத்தாது அமுல்படுத்த வேண்டும் என்பதை இந்த சந்திப்பில் ஆராய்ந்துள்ளோம் என்றார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இது குறித்து கூறுகையில்,
ஈழத்தமிழ் மக்களையும், மலையக தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களாகிய நாம், தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகள் குறித்து எம்மத்தியில் சிரேஷ்ட தலைவராக உள்ள சம்பந்தன் ஐயாவின் தலைமையில் கூடி ஆராய்ந்துள்ளோம்.
எதிர்வரும் 21 ஆம் திகதி அடுத்த கூட்டத்தை ஏற்பாடு செய்து அதன் போது பொது ஆவணத்தில் கையெழுத்திட்டு அந்த ஆவணத்தை வெளியிடுவதற்கு ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளோம். இந்த நாட்டில் சமகாலத்தில் தமிழ் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய கட்சிகளின் தலைவர்கள் அதிக எண்ணிக்கையில் கூடிய முதல் நிகழ்வு இதுவாகும்.
இலங்கை ஜனாதிபதி, 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று, சமஸ்டிக்கும் மேலே சென்று தீர்வுகளை வழங்க தயாராக இருப்பதை போன்றும்,அதை வேண்டாம் என கூறிவிட்டு கட்சி தலைவர்கள் அனைவரும் கூடி 13ஆம் திருத்தமே போதும் என கூறுவதை போன்ற கருத்து பரிமாற்றங்களை முன்வைப்பதை நாம் நிராகரிக்கின்றோம், இன்றைய எமது கலந்துரையாடலில் 13ஆம் திருத்ததிற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மொழி உரிமை, குடிப்பரம்பல் அழிப்பு, தேசிய ஒருமைப்பாடு குறித்தும், முஸ்லிம் மக்களின் மீதான தாக்குதல்கள், இன கலாசார அங்கீகாரம், மலையக மக்களின் குடியுரிமை குறித்தும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பல தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் இன்றும் சிறையில் உள்ளனர்.
அவர்களை விடுவிக்கும் கோரிக்கை மற்றும் தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமையை தடுத்தாலும் தந்திரத்தை அரசாங்கம் கையாண்டு வருகின்றது. இந்த சகல விடயங்களையும் பேசியுள்ளோம். இவை அனைத்துமே சிங்கள மக்களுக்கு எதிரானவை அல்ல. ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் அது ஆண்டான் அடிமை உரிமைகள் அல்ல. இங்கு எமக்கும் சம உரிமை வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.