இலங்கை ஜனாதிபதி கோட்டாபாயவின் கட்டளைகளின்படி போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்ட படை அதிகாரிகளுக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டதை உலகத் தமிழ் மக்களோடு சேர்ந்த வரவேற்கும் புலம் பெயர் அமைப்புக்கள் பல. இந்த விசா மறுப்பு முறையை உலகின் ஏனைய நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மனிதகுலத்திற்கு எதிரான மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது கட்டளையின்கீழ் செயற்பட்டவர்களுக்கு எதிராகப் பயணத்தடை விதிப்பதுடன் அவர்களது சொத்துக்களை முடக்குவது தொடர்பில் அமெரிக்காவைப்போன்று ஏனைய ஜனநாயக நாடுகளும் விசேட அவதானம் செலுத்தவேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, அயர்லாந்து, சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளைத் தளமாகக் கொண்டியங்கும் 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
அதுமாத்திரமன்றி இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுவதற்கான நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனூடாக குற்றவாளிகள் அனைவரும் அடையாளங்காணப்படுவார்கள் என்று நம்புவதாகவும் அவ்வமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது கட்டளையின்கீழ் செயற்பட்டவர்களுக்கு எதிராகப் பயணத்தடை விதிப்பதுடன் அவர்களது சொத்துக்களை முடக்குவது குறித்து அவதானம் செலுத்தவேண்டும
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற ஆதாரங்களைத் திரட்டுவதற்கான பொறிமுறையின் ஊடாக அனைத்துக் குற்றவாளிகளும் மிகத்தெளிவாக அடையாளங்காணப்படுவார்கள் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.
மனிதகுலத்திற்கு எதிரான மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக்கூறி ‘நேவி சம்பத்’ என்று அறியப்படும் கடற்படைப் புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் இராணுவத்தின் முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோர் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது. இத்தடை குறித்த அறிவிப்பு சர்வதேச மனித உரிமைகள் நாளான கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
அமெரிக்காவின் இத்தீர்மானம் குறித்து அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை, அயர்லாந்து தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழ் ஈழம், கனடிய தமிழர் தேசிய அவை, அமைதி மற்றும் நீதிக்கான ஒன்றிணைவு, சுவிஸ்லாந்து தமிழ் செயற்பாட்டுக் குழுமம், இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் செயற்திட்டம் மற்றும் அமெரிக்க தமிழ் செயற்பாட்டுக் குழுமம் ஆகிய 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கைப் பாதுகாப்புப்படையின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரால் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான மனித உரிமை மீறல்களைக் கருத்திற்கொண்டு அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடைவிதித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தமிழ் மக்கள் பெரிதும் வரவேற்கின்றார்கள்.
இதனையொத்ததாக இலங்கையின் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சட்டவிரோத படுகொலைகள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதைத் தடைசெய்யும் அறிவிப்பு கடந்த ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி முன்னாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவினால் வெளியிடப்பட்டது.
இவையனைத்தும் இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான பாதையின் முக்கிய நகர்வுகளாகும். இவற்றை வரவேற்கும் அதேவேளை, தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மோசமான மீறல்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களை அடையாளங்காண்பதற்கு செயற்திறன்மிக்க பொறிமுறையொன்றைக் கையாள்வது அவசியமாகும்.
தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற ஆதாரங்களைத் திரட்டுவதற்கான பொறிமுறையின் ஊடாக அனைத்துக் குற்றவாளிகளும் மிகத்தெளிவாக அடையாளங்காணப்படுவார்கள் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.
இலங்கை ஜனாதிபதியும் அமெரிக்கப்பிரஜையுமான கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச்செயலாளராகப் பதவி வகித்தபோது கடந்த 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தினரைப் பயன்படுத்தி மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டதுடன் அதன் விளைவாக 70,000 இற்கும் அதிகமான அப்பாவி தமிழ்மக்கள் கொல்லப்பட்டிருக்கக்கூடுமென ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு செய்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மன்னார் மறைமாவட்ட பேராயர் அருட்தந்தை இராயப்பு ஜோசப்பினால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இலங்கை அரசாங்கத்தின் குடித்தொகை மதிப்பீடுகளின்படி போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதிலிருந்து சுமார் 146,679 தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை.
உலகின் ஏனைய ஜனநாயக நாடுகள் அமெரிக்காவின் நகர்வை ஒத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அதன்படி மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது கட்டளையின்கீழ் செயற்பட்டவர்களுக்கு எதிராகப் பயணத்தடை விதிப்பதுடன் அவர்களது சொத்துக்களை முடக்குவது குறித்து அவதானம் செலுத்தவேண்டும்.
அதுமாத்திரமன்றி இலங்கை அரசாங்கமும் போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களும் சுயாதீனமான சர்வதேச விசாரணைப்பொறிமுறைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று அவ்வமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.